Wednesday, December 29, 2010

25. கூந்தலும் வேலும்!

பாடியவர்: கல்லாடனார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 23-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு போரிட்டுத் தோல்வியுற்ற சேரனும் சோழனும் இறந்தனர்; அவர்களின் படைவீரர்கள் பலரும் இறந்தனர். இறந்தவர்களின் மனைவியர் தம் கூந்தலைக் கொய்து கைம்மை நோன்பை மேற்கொள்ளும் அவலக் காட்சியைக் கண்டதும் நெடுஞ்செழியன் போரை நிறுத்தியதாக இப்பாடலில் கல்லாடனார் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டுசெலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
5 உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல்; செழிய!
10 முலைபொலி அகம் உருப்ப நூறி,
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்,
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர்அறல் கடுக்கும் அம்மென்
குவைஇரும் கூந்தல் கொய்தல் கண்டே.

அருஞ்சொற்பொருள்:
1.விசும்பு = ஆகாயம்; பாய்தல் = பரவுதல். 2. ஈண்டு = விரைவு. 3. உரவு = வலி; திருகிய = வளைந்த, முறுகிய; உரு = அச்சம். 5. உடலுதல் = பொருதல்; துப்பு = வலி; ஒன்றுமொழிதல் = வஞ்சினம் கூறுதல். 6. அணங்கு = வருத்தம்; பறந்தலை = போர்க்களம்; உணங்கல் = துன்பப்படல். 8. திரிபு = வேறுபாடு; எறிதல் = நீக்கல், வெல்லுதல்; திண் = வலி; மடை = ஆயுத மூட்டு. 9. சிதைதல் = கெடுதல், அழிதல். 10. ஆகம் = மார்பு, நெஞ்சு; உருத்தல் = வெப்புமுறச் செய்தல்; நூறுதல் = அழித்தல், நசுக்குதல், இடித்தல். 11. படுத்தல் = செய்தல்; பூசல் = பெரிதொலித்தல். 12. கூர்த்தல் = மிகுத்தல்; கூர் = மிகுதி. 13. அவிர்தல் = விளங்கல்; அறல் = கருமணல்; கடுக்கும் = ஒக்கும். 14. குவை = திரட்சி; இரு = கரிய; கொய்தல் = அறுத்தல்.

கொண்டு கூட்டு: செழிய, மகளிர் கூந்தல் கொய்தல் கண்டு, நின் வேல் சிதைதல் உய்ந்தது எனக் கூட்டுக.

உரை: விண்மீன்கள் திகழும் ஆகாயத்தில் பரவிய இருள் அகல, விரைந்து செல்லும் தன்மையிலிருந்து தவறாது, வலிய, வெப்பம் மிகுந்த, அச்சம் பொருந்திய கதிரவனும், நிலாவொளியைத் தரும் திங்களும் வந்து நிலத்தில் சேர்ந்தாற்போல விளங்கி, வஞ்சினம் கூறிய, வலிமையுடைய இரு வேந்தர்களும் (சேரனும் சோழனும்) அழியுமாறு நீ போர் செய்தாய்; அவ்விருவரையும் கொடிய போர்க்களத்தில் நிலைகலங்கச் செய்தாய்; அவர்களிடமிருந்து, வாரால் பிணிக்கப்பட்ட போர்முரசுகளைக் கைப்பற்றினாய்; நின்ற நிலையிலே நின்று, உன்னைச் சூழ்ந்த பகைவர்களின் வீரர்களைப் பிடித்துத் தூக்கியெறிந்தாய். செழியனே! போரில் கணவனை இழந்த மகளிர், கருமணல் போன்று விளங்கும் தம் கூந்தலை அறுத்துக்கொண்டு, துயரத்துடன் தம் முலைகள் பொலிந்த மார்பகங்களை வெப்பம் உண்டாகுமாறு அடித்துக்கொண்டார்கள். அதைக் கண்டதும் நீ போரை நிறுத்தியதால், உன் வேல்கள் தொடர்ந்து பகைவர்ளைத் தாக்கப் பயன்படுத்தப்படவில்லை. ஆகவே, அவைகள் சேதமில்லாமல் தப்பின.

24. வல்லுநர் வாழ்ந்தோர்!

பாடியவர்: மாங்குடி கிழார் (24, 26, 313, 335, 372, 396). இவர் மாங்குடி மருதனார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் ஆறு பாடல்கள் இயற்றியதோடு மட்டுமல்லாமல், பத்துப்பாட்டில், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்ட மதுரைக் காஞ்சியையும், குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (164, 302), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (120, 123) இயற்றியுள்ளார். “நான் தலையாலங்கானத்துப் போரில் தோல்வியுற்றால், மாங்குடி மருதன் போன்ற புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக” என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடல் 72-இல் கூறுவதிலிருந்து, அவன் இவரால் பாடப்படுவதை மிகவும் பெருமையாகக் கருதினான் என்பது தெரியவருகிறது.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 18-இல் காண்க.

பாடலின் பின்னணி: எவ்வி என்பவனுக்குரிய மிழலைக் கூற்றத்தையும், முதுவேளிர்க்குரிய முத்தூற்றுக் கூற்றத்தையும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றான். அவ்வெற்றிக்குப் பிறகு, அவன் மேலும் போரில் ஈடுபடாமல், மகளிரோடு மகிச்சியோடு வாழுமாறு இப்பாடலில் மாங்குடி மருதனார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

நெல்அரியும் இருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயில்முனையின்
தெண்கடல்திரை மிசைப்பாயுந்து,
திண்திமில் வன்பரதவர்
5 வெப்புடைய மட்டுண்டு,
தண்குரவைச் சீர்தூங்குந்து,
தூவற்கலித்த தேம்பாய்புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து,
10 வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஓங்குமணற் குவவுத்தாழைத்
15 தீநீரோடு உடன்விராஅய்
முந்நீர்உண்டு முந்நீர்ப்பாயும்
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி,
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
20 கயலார் நாரை போர்வில் சேக்கும்,
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர்நின் நாண்மீன்; நில்லாது
25 படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே;
நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
30 இரவன் மாக்கள் ஈகை நுவல,
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
35 மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1.அரித்தல் = அறுத்தல் (அறுவடை செய்தல்); இரு = பெரிய; தொழுவர் = மருதநில மக்கள் (உழவர்). 4. திண் = வலி; திமில் = மரக்கலம், தோணி; பரதவர் = நெய்தல் நில மக்கள் (மீனவர்). 5. மட்டு = கள்; தண்மை = மென்மை; குரவை = கூத்து. 6. சீர் = தாளவொத்து; தூங்கல் = ஆடல்; உந்துதல் = பொருந்துதல். 7. தூவல் = நீர்த்துளி; கலித்தல் = தழைத்தல்; பாய = பரப்பிய. 8. இணர் = கொத்து; மிலைதல் = சூடுதல்; மைந்தர் = ஆடவர். 9. எல் = ஒளி; தலைக்கை தருதல் = கையால் தழுவி அன்பு காட்டுதல். 10. கானல் = கடற்கரைச் சோலை. 11. முண்டகம் = நீர் முள்ளி; கோதை = பூமாலை. 12. குரும்பை = நுங்கு (தென்னை, பனை முதலியவற்றின் இளங்காய்). 13. பூ = பொலிவு, அழகு.
14. குவவுதல் = குவிந்த; தாழை = தென்னை. 15. விரவுதல் = கலத்தல். 17. உறையுள் = தங்குமிடம்; தாங்குதல் = ஆதரித்தல், நிறுத்துதல், தடுத்தல்; கெழீஇய = பொருந்திய. 19. புதவு = நீர் பாயும் மடைவாய், மதகு, கதவு; மிழலை = மிழலைக் கூற்றம்; கழனி = வயல். 20. சேக்கை = விலங்கின் படுக்கை. 22. குப்பை = தானியக் குவியல். முத்தூறு = முத்தூற்றுக் கூற்றம். 23. கொற்றம் = வெற்றி. 24. நாண்மீன் = நட்சத்திரம். 26. மூத்த = முதிர்ந்த. 28. ஆடு = வெற்றி; விழு = சிறந்த; திணை = குடி. 29. வலம் = வலிமை; தாள் = முயற்சி; இரவன் = இரக்கும் பரிசிலர். 32. தேறல் = மது; மடுத்தல் = உண்ணுதல், விழுங்குதல். 34. வல்லுநர் = வல்லவர்.

கொண்டு கூட்டு: செழிய, நின் நாண்மீன் நின்று நிலைஇயர்; நின் பகைவர் மீன் படாஅச் செலீஇயர்; உலகத்துத் தோன்றி இசை செலச் செல்லாது விளிந்தோர் பலர். அவர் வாழ்ந்தோர் எனப்படார்; ஆதலால், பெரும, வாழ்த்த, நுவல, மடுப்ப, மகிழ்சிறந்து இனிதுஒழுகு; அது வல்லுநரை வாழ்ந்தோர் என்ப எனக் கூட்டுக.

உரை: நெல்லை அறுவடை செய்யும் உழவர்கள் கதிரவனின் வெயிலின் வெப்பத்தை வெறுத்து, தெளிந்த கடல் அலைகள் மீது பாய்வர். வலிய மரக்கலங்களை உடைய மீனவர்கள், புளித்த கள்ளை உண்டு மெல்லிய குரவைக் கூத்தைத் தாளத்திற்கேற்ப ஆடுவர். கடல் நீர்த்துளிகளால் தழைத்து வளர்ந்த புன்னை மரங்களின் தேன்நிறைந்த மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்த ஆடவர்கள், ஒளிவீசும் வளை அணிந்த கைகளையுடைய மகளிரைக் அன்புடன் கையால் தழுவி ஆடுவர். வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த, குளிர்ந்த, நறுமணம் பொருந்திய கடற்கரைச் சோலையில் நீர்முள்ளிப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த மகளிர், பெரிய பனை நுங்கின் நீர், அழகிய கரும்பின் இனிய சாறு, உயர்ந்த மணற் குவியலில் தழைத்த தென்னையின் இளநீர் ஆகிய மூன்றையும் கலந்து குடித்துக் கடலில் பாய்ந்து விளையாடுவர். இவ்வாறு பல்வேறு மக்களும் மகிழ்ச்சியாக வாழும் நல்ல ஊர்கள் அடங்கிய நாடு மிழலைக் கூற்றம். அந்நாட்டின் தலைவன், குறையாது கொடுக்கும் கொடைத்தன்மையையுடைய வேளிர் குலத்தைச் சார்ந்த எவ்வி என்பவன்.

மிழலைக் கூற்றத்தைப் போலவே, முத்தூற்றுக் கூற்றம் என்னும் நாடும் ஒருவளமான நாடு. அந்நாட்டில், நீர் பாயும் மதகுகள் உள்ளன. அங்கே, வயல்களில் உள்ல கயல் மீன்களை மேய்ந்த நாரை வைக்கோற்போரில் உறங்குகின்றன. பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகள் உள்ளன; வயல்களில் விளைந்த நெல் குவியல் குவில்களாகக் கிடக்கின்றன. அந்த நாட்டை ஆள்பவனும் வேளிரின் குலத்தைச் சார்ந்தவன்தான்.

அத்தகைய மிழலைக் கூற்றத்தையும் முத்தூற்றுக் கூற்றத்தையும் வென்ற செழியனே! ஒளி பொருந்திய நீண்ட குடையையும், கொடிபறக்கும் தேரையையும் உடைய செழியனே! நீ நீண்ட நாட்கள் வாழ்க! உன் பகைவர்கள் நீண்ட நாட்கள் வாழாது ஒழிக! உயிருடன் கூடிய உடல் போன்று உன்னுடன் தொடர்புடைய உன் வெற்றி மிகுந்த வாட்படை வீரர்கள் உன் முயற்சியையும் வலிமையையும் வாழ்த்த, ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த மகளிர், பொன்னானாலான பாத்திரங்களில் கொண்டுவந்து தரும் குளிர்ந்த, மணமுள்ள மதுவைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறந்து வாழ்வாயாக! தலைவ! இந்தகைய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் உண்மையிலேயே வாழ்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அறிஞர்கள் கூறுவர். அவ்வாறு இல்லாமல், இந்தப் பரந்த உலகத்தில் தோன்றிப் புகழ் பெருக வாழாமல் வாழ்ந்து முடித்தோர் பலர். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்ததாகவே கருதப்படுவர்.

23. நண்ணார் நாணுவர்!

பாடியவர்: கல்லாடனார் (23, 25, 371, 385, 391). இவர் கல்லாடம் என்ற ஊரினராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ”கல்லாடத்துக் கலந்து இனிது அருள்” என்ற மாணிக்கவாசகர் வாக்கால், கல்லாடம் என்பது ஒருசிவத்தலம் என்று அறியப்படுகிறது. ஆனால், ”கல்லாடம் இப்பொழுது எப்படி அழைக்கப்படுகிறது? அது எங்கே உள்ளது?” போன்ற வினாக்களுக்கு விடை தெரியவில்லை. இவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அம்பர் கிழான் அருவந்தை, பொறையாற்று கிழான் ஆகியோரைப் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் ஐந்து செய்யுட்கள் இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் ஏழு செய்யுட்களையும் (9, 83, 113, 171, 198, 209, 333) குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களையும் (260, 269) இயற்றியுள்ளார். இவர் பாடல்களில் பல வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 18-இல் காண்க.

பாடலின் பின்னணி: ”பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் யானைகள் பகைவர்களின் நீர்த்துறைகளைக் கலக்கின. அவன் படைவீரர்கள் பகைவர்களின் உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு மிஞ்சியிருப்பவற்றை நிலத்தில் வீசி எறிந்தனர்; பகைவர்களின் ஊர்களின் பல பக்கங்களிலும் தீ மூட்டினர். நெடுஞ்செழியனும் அவன் படைவீரர்களும் இத்தகைய கொடிய செயல்களைத் தொடர்ந்து செய்வார்களோ” என்று பகைவர்கள் அஞ்சுவதாகவும், தான் கடத்தற்கரிய காட்டு வழியாக அவனைப் பார்க்க வந்ததாகவும் இப்பாடலில் கல்லாடனார் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
அரசவாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
நல்லிசை வஞ்சி: பகைவரது இடங்கள் கெடுமாறு வென்ற வீரனின் வெற்றியைப் பற்றிக் கூறுதல்.

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்து அன்னநின்
5 கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்
10 வினைபுனை நல்லில் வெவ்வெரி இனைப்பக்
கனைஎரி உரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோன்என
15 ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்பநின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
20 பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே.

அருஞ்சொற்பொருள்:
1.வெளிறு = வெண்ணிறம்; நோன்மை = வலிமை; காழ் = வயிரம் (உறுதி); காழ்த்தல் = முற்றுதல்; பணை = விலங்கின் படுக்கை, கூடம்; நிலை = நிற்றல்; முனை = வெறுப்பு. 3. கார் = கார்காலம்; நறுமை = நன்மை. 4. நவைதல் = கொல்லுதல். 5. கொடு = வளைந்த; கூளியர் = படைவீரர்; கூளி = உறவு, வலிமை. 6. மிச்சில் = எஞ்சியது. 7. பதம் = உணவு. 8. வடித்தல் = கூராக்குதல்; நவிலுதல் = பழகுதல், கற்றல்; நவியம் = கோடரி. 9. துளங்கல் = கலங்கல் (நிலை கலங்கல்); கா = சோலை (காடு). 10. இனைப்ப = கெடுப்ப. 11. கனை = மிகுதி; உரறுதல் = முழங்குதல்; மருங்கு = பக்கம். 12. நண்ணார் = பகைவர், தலை = இடம். 14. துன்னுதல் = நெருங்குதல்; நெளிதல் = சுருளுதல்; வியன் = மிகுதி (பெரிய). 16. அட்ட = அழித்த (கொன்ற). 17. காலன் = இயமன்; முன்பு = வலிமை. 18. அறுதல் = இல்லாமற் போதல்; மருப்பு = கொம்பு. எழில் = உயர்ச்சி (பெரிய); கலை = ஆண்மான், பால் = இடம். 19. மறி = மான் குட்டி; தெறித்தல் = பாய்தல் (துள்ளல்); மடம் = மென்மை; பிணை = பெண்மான். 20. பூளை = ஒரு செடி; பறந்தலை = பாழிடம். 21. வேளை = ஒரு பூண்டு; கறித்தல் = கடித்துத் தின்னுதல். 22. அத்தம் = பாலை நிலம், வழி.

கொண்டு கூட்டு: கால முன்ப, துறையும் புலனும் காவும் மருங்கும் நோக்கி, இன்னும் இன்ன பல செய்குவன் துணிவினோன் என உட்கொண்டு, கண்டனன் வருவல் அத்தம் ஆகிய காடே எனக் கூட்டுக.

உரை: வலிய, முற்றிய மரத்தூண்களால் கட்டப்பட்ட கூடத்தில் இருப்பதை வெறுத்து, வெளியேறிய யானைகள் நீரை உண்டதால் நீர்த்துறைகள் கலங்கி உள்ளன. கார்காலத்தில், மணமுள்ள கடம்பமரத்தின் பசுமையான இலைகளுடன் கூடிய மாலைகளை அணிந்து, சூரபன்மனைக் கொன்ற முருகனின் படைவீரர்களைப் போன்ற உன் வீரர்கள் கூரிய நல்ல அம்புகளையும், வளைந்த வில்லையும் உடையவர்களாக உள்ளனர். அவர்கள் தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு மிச்சமிருப்பதைப் பகைவர்கள் உணவுப் பொருளாகப் பயன்படுத்த முடியாதவாறு நிலத்தில் சிதறினார்கள். உன் வீரர்கள் கூர்மையான கோடரியைக்கொண்டு காவல் மரங்களை வெட்டியதால் காவற் காடுகள் நிலைகுலைந்தன. பெரிய நகரத்தில் அழகிய வேலைப்படுகளுடன் செய்யப்பட்ட நல்ல வீடுகளில் சமைப்பதற்காக மூட்டிய தீயை அவிக்கும் வகையில் பெரிய தீயைப் பல பக்கங்களிலும் உன் வீரர்கள் மூட்டியதைப் பார்த்த உன் பகைவர்கள் நாணுகிறார்கள். நீ, நாள்தோறும் தம்மிடம் வந்து இன்னும் இது போன்ற செயல்களைச் செய்வாயோ என்று எண்ணுகிறார்கள்; யாவரும் அணுகமுடியாத துணிவுடையவன் என்றும் எண்ணுகிறார்கள். நீ, பூமியால் சுமக்க முடியாத அளவுக்குப் பெரிய படையை உடையவன்; தலையாலங்கானத்தில் பகைவரை இயமன்போல் எதிர்நின்று அழித்தவன். நீ மிகுந்த வலிமையுடையவன். தன் கொம்புகளை இழந்த பெரிய ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதால், அதன் துணையாகிய மெல்லிய பெண்மான் தன் சிறிய குட்டியை அணைத்துக்கொண்டு துள்ளிய நடையுடன், பூளைச்செடி வளர்ந்த அஞ்சத்தக்கப் பாழிடத்தில் வேளையின் வெண்ணிறப் பூக்களைத் தின்னும் ஆள் நடமாட்டம் இல்லாத, கடத்தற்கரிய காட்டு வழியாக உன்னைக் காணவந்தேன்.

சிறப்புக் குறிப்பு: கல்லாடனார் தான் காட்டு வழியாக வந்த பொழுது ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதையும் அம்மானின் துணையாகிய பெண்மான் தன் குட்டியுடன் அச்சத்தோடும் உண்ணுவதற்கு நல்ல உணவில்லாமல் வருந்ததத் தக்க நிலையில் இருப்பதைக் கண்டதாகவும் இப்பாடலில் கூறுகிறார். அவர் கூறுவது, படைவீரர்கள் இறந்த பிறகு அவர்களின் மனைவியரும் குழந்தைகளும் படும் துன்பத்தை மறைமுகமாகப் பாண்டியனுக்குச் சுட்டிக்காட்டுவதாகத் தோன்றுகிறது.

22. ஈகையும் நாவும்!

பாடியவர்: குறுங்கோழியூர் கிழார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 17 - இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடலின் பின்னணி: ”சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை சோம்பல் இல்லாதவன்; அவன் நாடு தேவருலகத்தைப் போன்றது; அவன் படை வலிமை மிகுந்தவன்; பிற வேந்தர்கள் அளிக்கும் திறையைக்கொண்டு தன்னிடம் பரிசு பெற வந்தவர்களை ஆதரிப்பவன்; அவனைப் பாடியவர்கள் மற்றவர்களைப் பாட வேண்டிய தேவையில்லாத அளவிற்குப் பரிசு அளிப்பவன்” என்று பலவாறாகக் குறுங்கோழியூர் கிழார் சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

தூங்குகையான் ஓங்குநடைய
உறழ்மணியான் உயர்மருப்பின
பிறைநுதலான் செறல்நோக்கின
பாவடியால் பணைஎருத்தின
5 தேன்சிதைந்த வரைபோல
மிஞிறுஆர்க்கும் கமழ்கடாஅத்து
அயறுசோரும் இருஞ்சென்னிய
மைந்துமலிந்த மழகளிறு
கந்துசேர்பு நிலைஇவழங்கப்
10 பாஅல்நின்று கதிர்சோரும்
வானஉறையும் மதிபோலும்
மாலைவெண் குடைநீழலான்
வாள்மருங்கிலோர் காப்புஉறங்க,
அலங்குசெந்நெல் கதிர்வேய்ந்த
15 ஆய்கரும்பின் கொடிக்கூரை
சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிவுதோன்றக்
குற்றானா உலக்கையால்
கலிச்சும்மை வியல்ஆங்கண்
20 பொலம்தோட்டுப் பைந்தும்பை
மிசைஅலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓதநீரில் பெயர்புபொங்க;
வாய்காவாது பரந்துபட்ட
25 வியன்பாசறைக் காப்பாள!
வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்புஆர்த்தும்
ஓங்குகொல்லியோர் அடு பொருந!
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!
30 வாழிய பெரும! நின் வரம்பில் படைப்பே
நிற்பாடிய அலங்குசெந்நாப்
பிறர்இசை நுவலாமை
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
35 புத்தேள் உலகத்து அற்றுஎனக் கேட்டுவந்து
இனிது கண்டிசின்; பெரும! முனிவிலை
வேறுபுலத்து இறுக்கும் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே.


அருஞ்சொற்பொருள்:
1. தூங்குதல் = அசைந்தாடுதல்; ஓங்கல் = உயர்ச்சி. 2.உறழ்தல் = மாறுபடுதல்; மருப்பு = கொம்பு. 3. செறல் = கோபித்தல். 4.பா = பரந்த; பணைத்தல் = பருத்தல்; எருத்து = கழுத்து. 5. சிதைதல் = சிதறுதல்; வரை = மலை. 6. மிஞிறு = தேனீ; ஆர்த்தல் = ஒலித்தல்; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம். 7. அயறு = புண்ணிலிருந்து வடியும் நீர்; சோர்தல் = விழுதல். 8.மைந்து = வலிமை; மலி = மிகுதி; மழ = இளமை. 9.கந்து = தூண், யானை கட்டும் தறி; சேர்பு = பொருந்தி. 10. சோர்தல் = விழுதல். 13. மருங்கு = பக்கம்; காப்பு = பாதுகாவல். 14. அலங்குதல் = அசைதல், ஒளி செய்தல். 15. ஆய் = மென்மை; கொடி = ஒழுங்கு. 16. சாறு = திருவிழா. 18. ஆனா = நீங்காத (அமையாத). 19. கலி = ஒலி, முழக்கம்; சும்மை = ஆரவாரம். 20. பொலம் = பொன், அழகு; தோடு = பூவிதழ்; மிசை = மேற்பக்கம். 21. அலங்குதல் = அசைதல்; உளை = தலை; பனைப்போழ் = பனந்தோடு. 23. ஓதம் = கடல்; பெயர்பு = கிளர்ந்து. 26. அயன் = அகன்ற. 27. கடும்பு = சுற்றம்; ஆர்த்துதல் = கொடுத்தல், நிறைவித்தல். 29. விறல் = வெற்றி; வெம்மை = விருப்பம். 30. படைப்பு = செல்வம். 32. நுவலுதல் = சொல்லுதல். 34. ஓம்புதல் = பாதுகாத்தல். 35. அற்று = அத்தன்மையது. 36. முனிவு = வெறுப்பு, கோபம். 38. படுத்தல் = செய்தல்; துஞ்சுதல் = சோம்புதல்

கொண்டு கூட்டு: காப்பாள, பொருந, சேஎய், பெரும, எங்கோ, பெரும, நீ துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை ஓம்பிய நாடு புத்தேள் உலகத்து அற்றெனக் கேட்டு வந்து இனிது கண்டிசின்; நின் படைப்பு வாழிய எனக் கூட்டுக.

உரை: அசையும் தும்பிக்கை, தலை நிமிர்ந்த நடை, மாறி மாறி ஒலிக்கும் மணிகள், உயர்ந்த கொம்புகள் (தந்தங்கள்), பிறை நிலா போன்ற நெற்றி, கோபம் மிகுந்த பார்வை, அகன்ற காலடிகள், பருத்த கழுத்து ஆகியவற்றுடன் வலிமை மிகுந்த இளம் யானை ஒன்று தான் கட்டப்பட்டிருக்கும் கம்பத்திலே நின்று அசைந்து கொண்டிருக்கிறது. அந்த யானையின் பெரிய தலையில் உள்ள புண்களிலிருந்து மணமுள்ள மதநீர் வடிகிறது. அந்த மதநீரை நுகர்வதற்கு, தேனீக்கள் யானையின் தலையில் ஒலியுடன் மொய்க்கின்றன, அந்த யானையின் தலை தேன்கூடு சிதைந்த மலைபோல் காட்சியளிக்கிறது. அந்த யானையின் பக்கத்தில், முத்து மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டு, வானத்திலிருந்து ஒளிவிடும் திங்கள்போல் விளங்கும், வெண்கொற்றக் குடையின் பாதுகாவலில் வீரர்கள் வாள் அணியாமல் உறங்குகிறார்கள்.

அசையும் செந்நெல் கதிர்களால் வேயப்பட்டு, கரும்பால் ஒழுங்காகக் கட்டப்பட்ட கூரைவீடுகள் வேறுவேறு அழகுடன் விழாக்கோலம் பூண்டதுபோல் காட்சி அளிக்கின்றன. அங்கே, பெண்கள் உலக்கையால் குத்தும் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. மிகுந்த ஆரவாரமுடைய அகன்ற இடத்தில், பொன்னாலான இதழ்களையுடைய, பசுமையான தும்பை மலர்களுடன், அசையும் பனையோலைகளைச் செருகிக்கொண்டு சினத்தோடு வீரர்கள் குரவை ஆடுகிறார்கள். அவர்களின் குரவைக் கூத்தின் ஒலி கடல் ஒலிபோல் ஆரவாரமாக உள்ளது. உன்னுடைய பெரிய படையைக்கண்டு பகைவர்கள் அஞ்சுகிறார்கள். அகன்ற பாசறையையுடையவனே!

பகைமன்னர்கள் கொண்டுவந்து தந்த திறைப்பொருளால் உன்னை அடைந்தவர்களின் சுற்றத்தாரை நீ வாழச் செய்கிறாய். உயர்ந்த கொல்லிமலையினரின் வெற்றி மிகுந்த தலைவனே! யானையின் பார்வை போன்ற கூர்மையான பார்வையை உடையவனே! வெற்றியை விரும்பும் சேஎய் என்று அழைக்கப் படுவோனே! தலைவ, நீ வாழ்க.

உன் செல்வம் எல்லை இல்லாதது. உன்னப் பாடிய செவ்விய நாவால் பிறர் புகழைப் பாடவேண்டிய தேவை இல்லாதவாறு, குறையாது கொடுக்கும் ஆற்றல் மிகுந்த எம் அரசே!

மாந்தரஞ் சேரல் இரும்பொறையால் பாதுகாக்கப்படும் நாடு தேவருலகத்தைப் போன்றது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்தேன். என் கண்ணுக்கு இனிமையாக உன்னைக் கண்டேன். தலைவ! நீ சோம்பல் இல்லாதவன்; முயற்சியில் வெறுப்பில்லாமல், வேற்று நாட்டில் சென்று தங்கும் படையுடன், உன் நாட்டில் வளம் பெருகுமாறு ஆட்சி செய்வாயாக.

21. புகழ்சால் தோன்றல்

பாடியவர்: ஐயூர் மூலங்கிழார் (21). இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் ஐயூர் மூலம் என்ற ஊரைச் சார்ந்தவராதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பாடலில், இவர் வேங்கை மார்பனை வென்ற கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் புகழ்ந்து பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி. கானப்பேர் என்னும் ஊர் தற்காலத்தில் காளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளது. கானப்பேர் என்ற ஊர் வேங்கை மார்பன் என்ற மன்னனால் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது. அது பல அரிய அரண்களை யுடைய ஊராகச் சிறந்து விளங்கியது. அந்த அரண்களை எல்லாம் கடந்து, வேங்கை மார்பனை வெற்றிகொண்டதால் இப்பாண்டிய மன்னன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற பெயரால் சிறப்பிக்கப்பட்டான்.

இவன் ஒருபுகழ்பெற்ற அரசன் மட்டுமல்லாமல், தமிழில் மிகுந்த ஆர்வமும் புலமையும் உடையவனாக இருத்ததாக வரலாறு கூறுகிறது. இவன் அகநானூற்றைத் தொகுப்பித்ததாகவும், இவன் காலத்தில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் மகன் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் அதற்குத் தகுந்த சான்றுகள் இல்லை என்று கருதுகிறார்கள். இவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடையே ஒற்றுமை காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: கானப்பேரெயிலின் அரண்களின் சிறப்பையும், அந்த ஊருக்கு உரியவனான வேங்கை மார்பன், உக்கிரப் பெருவழுதியிடம் தோல்வியுற்ற பிறகு, தன் ஊரை மீட்பது, உலையில் காய்ச்சிய இரும்பின் மீது சொரிந்த நீரை மீட்பது போன்ற அரிய செயல் என்று எண்ணி வருந்துவதாககவும் இப்பாடலில், ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
5 கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்;
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
வேங்கை மார்பின் இரங்க, வைகலும்
10 ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே.

அருஞ்சொற்பொருள்:
1. இறந்த = கடந்த; சால் = மிகுதி; தோன்றல் = அரசன், தலைவன். 2.வரை = எல்லை, நிறைவு; குண்டு = ஆழம்; கண் = இடம். 3. தோய்தல் = புணரல், உறைதல்; புரிசை = மதில்; விசும்பு = ஆகாயம். 4. ஞாயில் = மதிலில் அம்பெய்தற்குரிய துளை. 5. கல்லுதல் = துருவுதல்; பயில்தல் = செறிதல்; கடிமிளை = காவற்காடு. 6. குறும்பு = அரண்; உடுத்தல் = சூழ்தல்; எயில் = அரண். 9. இரங்க = வருந்த; வைகல் = நாள். 10. ஆடு = வெற்றி; குழைந்த = குழைத்த = தழைத்த; தழைத்தல் = மிகுதல், செழிதல். 11. முற்றுதல் = கொள்ளுதல்;கொற்றம் = வெற்றி. 13. பூத்தல் = பொலிதல்.

கொண்டு கூட்டு: கானப்பேர் எயில் மீட்டற்கு அரிது என வேங்கை மார்பன் இரங்கப் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே! பூக்க நின் வேலே எனக் கூட்டுக.

உரை: உன்னைப் பாடும் புலவர்களின் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட புகழமைந்த அரசே! நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும், கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும், அணுகுதற்கரிய சிற்றரண்களும் உடையது கானப்பேர். அத்தகைய அரண்களை யுடைய கானப்பேரை உன்னிடமிருந்து மீட்பது, வலிய கையையுடைய கொல்லன், எரியும் தீயில் காய்ச்சிய இரும்பில் சொரியப்பட்ட நீரை மீட்பது எவ்வளவு அரிதோ அதைவிட அரிது என்று வேங்கை மார்பன் வருந்த, நாள்தோறும் வெற்றிமேல் வெற்றி பெறுவதற்காக தும்பை மலர்கள் நிறைந்த மாலைகளை அணிபவனே! புலவர் பாடும் புறத்திணைக்குரிய துறைகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளைச் செயலில் செய்து முடித்த வெற்றி வேந்தனே! உன்னை மதியாத பகைவர்கள் தம்முடைய புகழுடன் அழிய, உன் வேல் புகழுடன் விளங்கி வெற்றியுடன் பொலிவதாக.

சிறப்புக் குறிப்பு: புறத்திணையில் அடங்கிய துறைகள் எல்லாம் போரின் வேறுவேறு நிலைகளைப் பற்றிக் கூறுபவை. அவற்றில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தையும் செயல்முறையில் செய்து முடித்தவன் உக்கிரப் பெருவழுதி என்பதைப் ”புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே” என்று இலக்கிய நயத்துடன் ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார். உக்கிரப் பெருவழுதி வெற்றிக்கும் வீரத்திற்கும் ஒருசிறந்த எடுத்துகாட்டாக இருந்தான் என்று ஐயூர் மூலங்கிழார் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Wednesday, December 8, 2010

20. மண்ணும் உண்பர்

பாடியவர்: குறுங்கோழியூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் செங்கோல் ஆட்சியின் சிறப்பைக் குறுங்கோழியூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
5 அவைஅளந்து அறியினும் அளத்தற்கு அரியை;
அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்கும் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறல்அல்லது
பிறிதுதெறல் அறியார் நின்நிழல்வாழ் வோரே;
10 திருவில் அல்லது கொலைவில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேயஅப்
பிறர்மண் உண்ணும் செம்மல் நின்நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது
15 பகைவர் உண்ணா அருமண் ணினையே!
அம்புதுஞ்சும் கடிஅரணால்
அறம்துஞ்சும் செங்கோலையே!
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை
20 அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.

அருஞ்சொற்பொருள்:
1.இரு = பெரிய; முந்நீர் = கடல். 2. குட்டம் = ஆழம். 4. காயம் = ஆகாயம்; வறிது = உள்ளீஈடற்றது . 6. ஈரம் = அருள். 7. படுத்தல் = செய்தல். 8. தெறல் = வெம்மை. 10. திருவில் = வானவில். 11. நாஞ்சில் = கலப்பை. 12. திறன் = கூறுபாடு, வழி; வயவர் = வீரர். 13. செம்மல் = தலைவன். 14. வயவு = கருப்பம்; வேட்டல் = விருப்பம்; 16. துஞ்சும் = தங்கும்; துஞ்சல் = நிலைத்தல். 18. ஏமம் = காவல். 19. விதுப்பு = நடுக்கம். 20. அனைய ஆகன் மாறு = அத்தன்மையை உடைமையால்.

கொண்டு கூட்டு: அளத்தற்கு அரியை; நின் நிழல் வாழ்வோர், கொலைவில் அறியார், படையும் அறியார்; செம்மல், அருமண்ணினை; செங்கோலை; ஏமக்காப்பினை; மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சும்.

உரை: பெரிய கடலின் ஆழத்தையும், அகன்ற உலகத்தின் அகலத்தையும், காற்று செல்லும் திசையையும், ஆகாயத்தின் வெறுமையையும் அளந்து அறிய முடிந்தாலும், உன்னுடைய அறிவும், அருளும், கண்ணோட்டமும் அளப்பதற்கு அரிது. உன் நாட்டில், சோறு சமைப்பதற்காக மூட்டிய தீயின் வெப்பமும் சிவந்த ஞாயிற்றின் கதிர்களால் எழும் வெப்பமும்தான் உண்டு. இவற்றைத் தவிர வேறு வெப்பத்தை உன் ஆட்சியில் வாழ்வோர் அறிந்திலர். வானவில் அல்லது கொலைவில்லை அவர்கள் அறியமாட்டர்கள். கலப்பையைத் தவிர வேறு படையை அவர்கள் அறிந்திலர். போர்த்திறம் மிக்க வீரர்களோடு சென்று பகைவர்களின் நாட்டைக் கவரும் அரசே! உன் நாட்டில் கருவுற்ற பெண்கள் வேட்கையால் உன் நாட்டு மண்ணை உண்ணுவார்களே தவிர உன் பகைவர்களால் உன் நாட்டு மண்ணைக் கொள்ள முடியாது.

உன் நாட்டில் அம்புகளோடு கூடிய காவலுடைய இடங்கள் உள்ளன. அங்கே, நீ அறம் நிலைபெற்ற செங்கோல் செலுத்துகிறாய். புதிய பறவைகள் வருவது பழைய பறவைகள் தங்கள் இடத்தைவிட்டுச் செல்வது போன்ற நிமித்தங்களால் நீ கலங்காமல் வாழக்கூடிய காவலுடையவன். நீ அத்தகையவன் ஆதலால், உலகத்து உயிர்களெல்லாம் உன் நன்மையைக் கருதி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

19. எழுவரை வென்ற ஒருவன்

பாடியவர்: குடபுலவியனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18 -இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்ரிய குறிப்புகலைப் பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் வென்று திரும்பிய பிறகு, குடபுலவியனார் அவனைக் காணச்சென்றார். இப்பாடலில், அவன் வெற்றியைக் குடபுலவியனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
5 இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம்என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே; மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல
அம்புசென்று இறுத்த அரும்புண் யானைத்
10 தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்குஎன,
15 மூதில் பெண்டிர் கசிந்துஅழ, நாணிக்
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே.

அருஞ்சொற்பொருள்:
1. இமிழல் = ஒலித்தல்; கிடக்கை = உலகம்; ஈண்டுதல் = செறிதல்.2. தலை = இடம்; மயங்குதல் = கலத்தல், கூடுதல். 4. தூக்குதல் = ஆராய்தல், ஒப்பு நோக்குதல். 5. இரு = பெரிய. 6. அடார் = விலங்குகளை அகப்படுத்தும் பொறி; போன்ம் = போலும். 7. முயங்குதல் = தழுவுதல். மயங்கி = கலங்கி. 8. இறுத்தல் = தங்குதல்; குரீஇ = குருவி. 10. தூம்பு = இடுக்கு, துளை; தடக்கை = பெரிய கை, வளைந்த கை; துமித்தல் = அறுத்தல். 11. நாஞ்சில் = கலப்பை. 12. எறிதல் = அறுத்தல்; படுத்தல் = வீழ்த்துதல்; வலம் = வெற்றி, வலி. 13. எந்தை = எம்+தந்தை = எம் தலைவன். 14. விறல் = வெற்றி. 15. மூதில் = மறக்குடி; கசிதல் = உருகுதல், நெகிழ்தல். 16. கண்ணோடிய = இரங்கிய; வெரு = அச்சம்; பறந்தலை = போர்க்களம். 17. கடத்தல் = வெல்லுதல். 18. கழூஉ = கழுவி; கவைஇய = அகத்திட்ட.

கொண்டு கூட்டு: செழிய, கடந்தோய், இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும் போன்ம் என நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பை யான் விரும்பி முயங்கினேன் அல்லனோ எனக் கூட்டுக.

உரை: ஒலிக்குங் கடலால் சூழப்பட்ட திரண்ட, அகன்ற உலகில் தமிழர்களின் படைகள் தலையாலங்கானத்தில் கைகலந்தன. அப்போரில், பல உயிர்களைத் தனியன் ஒருவனாகக் கொன்ற உனக்கு கூற்றுவன் ஒப்பானவனா என்று ஆராயத்தக்க அளவிற்கு உன் வெற்றிக்குக் காரணமான வேலையுடைய செழிய! வயல்களிலிருந்து தம் நிலை கலங்கி மலைக்குச் சென்று தங்கிய குருவிக் கூட்டம் போல் உடலெங்கும் அம்புகள் துளைத்துத் தங்கியதால் பொறுத்தற்கரிய புண்களைக் கொண்ட யானையின் துளையுடைய பெரிய தும்பிக்கை வாளால் வெட்டப்பட்டு நிலத்தில் கலப்பையைப்போல் புரளுகிறது. அவ்வாறு தும்பிக்கையை வாளால் வெட்டிய வீர இளைஞர்கள் தம் தந்தையரோடு போர்க்களத்தில் இறந்து கிடக்கின்றனர். அதைக் கண்ட மறக்குல மகளிர், இத்தகைய வெற்றியும் நமக்குக் கிடைத்ததோ என்று கண் கசிந்து அழுகின்றனர். அஞ்சத்தக்க போர்க்களத்தில் எழுவரின் நல்ல வலிமையை அழித்தாய். உன் அழிக்கும் ஆற்றலைக் கண்டு கூற்றுவன் வருந்தி நாணுகிறான்.

பெரிய புலியைப் பிடிக்கும் வேடன் மாட்டிய அடார் என்னும் கல்லைப் போன்ற மார்பினன் என்று எண்ணி, கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த உன் மார்பை விரும்பித் தழுவினேன் அல்லனோ?

18. நீரும் நிலனும்

பாடியவர்: குடபுலவியனார் (18, 19).இவரது இயற்பெயர் புலவியன் என்பது. இவர் குட நாட்டவராதலால் குடபுலவியனார் என்று அழைக்கப்பட்டார். புலவியன் என்பது விரிந்த அறிவுடையவன் என்று பொருள்படும்.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (18, 19, 23 - 26, 76 - 79, 371, 372)
பாண்டிய நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில் தலையாலங்கானதுச் செருவென்ற நெடுஞ்செழியனும் ஓருவன். இவன் சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர். தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான். இவனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சின்னமனூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் காணப்படுவதாக வரலாறு கூறுகிறது.

இவனைப் புகழ்ந்து பாடியவர்கள் பலர். புறநானூற்றில் 12 பாடல்களில் இவன் புகழ் கூறப்படுகிறது. பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்ற பாட்டுக்குப் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது குறிப்பிடத் தக்கது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒர் சிறந்த அரசன் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த புலவனாகவும் திகழ்ந்தான் என்பது புறநானூற்றில் அவன் இயற்றிய பாடல் (பாடல் - 72)மூலம் தெரிய வருகிறது.
பாடலின் பின்னணி: ஒருசமயம், பாண்டிய நாட்டின் ஒருபகுதியில், நீர்நிலைகள் இல்லாத காரணத்தால், அங்கு பயிர்கள் விளையாமல் வறுமை நிலவியது. இப்பாடலில், நீரைத் தேக்கி நீர்நிலைகளை உருவாக்குவது இன்றியமையாதது என்று பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் புலவர் குடபுலவியனார் அறிவுறை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி; பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
முதுமொழிக் காஞ்சி. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.
பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.


முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
5 ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉம் இனவாளை
நுண்ஆரல் பருவரால்
10 குரூஉக்கெடிற்ற குண்டுஅகழி
வான்உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
15 ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்இனி மிகுதி யாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
20 உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
25 வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட்டோரே
30 தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. முழங்குதல் = ஒலித்தல்; முந்நீர் = கடல்; வளைஇ = சூழப்பட்டு. 3. தாள் = முயற்சி; தந்து = கொண்டு. 4. உரம் = வலி; உம்பல் = வழித்தோன்றல். 5. இரீஇய = இருக்கச் செய்த. 8. கதூஊம் = பற்றும் (கதுவுதல் = பற்றுதல்). 9. பரு = கனத்த. 10. குரு = ஒளி; கெடிறு = கெளிற்று மீன். 11. உட்கும் = அஞ்சும்; வடிதல் = நீளுதல். 12. மல்லல் = வளமை; வயம் = வலி. 14. முருக்கி = அழித்து. 17. மிகுதியாள = பெரியோன். 20. பிண்டம் = உடல். 24. வித்தி = விதைத்து. 25. வைப்பு = இடம்; நண்ணி = நெருங்கி (பொருந்தி); தாள் = முயற்சி. 27. வல்லே = விரைவாக. 28. நெளிதல் = குழிதல், வளைதல். 29. தட்டல் = முட்டுப்பாடு; தட்டோர் = தடுத்தோர்; அம்ம - அசைச் சொல். 30. தள்ளோதார் = தடுக்காதவர்.

கொண்டு கூட்டு: உணவின் பிண்டம் உண்டி முதற்றே, உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என மாறிக் கூட்டுக.

உரை: ஒலிக்கும் கடல் சூழ்ந்த பரந்து கிடக்கும் அகன்ற உலகத்தைத் தமது முயற்சியால் வென்று, தம்முடைய புகழை உலகத்தில் நிலைநிறுத்தித் தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே! ஒன்று, பத்து என்ற எண்களின் வரிசையில் கடைசி எண்ணாகக் கருதப்படும் கோடி என்ற பெருமையுடைய எண் அளவுக்கு நீ வாழ்க! நீரளவுக்குத் தாழ்ந்து இருக்கும் சிறிய காஞ்சிப்பூவைக் கவ்வும் வாளை மீன்களின் கூட்டமும், சிறிய ஆரல் மீன்களும், பருத்த வரால் மீன்களும், ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்துள்ள ஆழமான அகழியும், வானளாவிய நெடிய மதிலும் உடைய வளமான பழைய ஊரில் உள்ள வலிய வேந்தனே! நீ மரணத்திற்குப் பிறகு செல்ல இருக்கும் உலகத்தில் அனுபவிப்பதற்கேற்ற செல்வத்தை விரும்பினாலும், உலகத்தை காக்கும் மற்ற அரசர்களின் வலிமையை அழித்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், சிறந்த புகழை நிலைநாட்ட விரும்பினாலும், அதற்குரிய தகுதியை நான் கூறுகிறேன்; நீ அதைக் கேட்பாயாக! நீரில்லாமல் வாழ முடியாத இவ்வுடலுக்கு உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவாலாகிய இவ்வுடலுக்கு உணவுதான் முதன்மையானது. ஆகவே, உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்து உணவுப் பொருள்களை விளைவித்தவர்கள்தான் உயிரையும் உடலையும் வாழவைப்பவர் ஆவர். விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்திருக்கும் புன்செய் நிலம் அகன்ற பரப்புடையதாக இருந்தாலும் அதனால் மன்னனுக்கு ஒருபயனுமில்லை. ஆகவே, கொல்லும் போரையுடைய பாண்டியனே! நான் கூறுவதை இகழாது கேள்! வளைந்து செல்லும் ஆழமான இடங்களில் விரைந்து நீர்நிலைகளை உருவாக்கியவர்கள்தான் இவ்வுலகில் தாம் விரும்பியவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டவராவர். அவ்வாறு செய்யாதவர்கள், இவ்வுலகில் தாம் விரும்பியவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாதவராவர்.

சிறப்புக் குறிப்பு: ”நீர் இன்று அமையாது உலகு” என்று வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

”நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே; தள்ளாதோர் இவன் தள்ளாதோரே” என்ற இந்த அடிகளில் நீர்நிலைகள் கட்டி நீரைத் தேக்கி வைத்தவர்கள், செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் உலகுக்கு நீர் இன்றையமையாததால், நீர்நிலைகள் கட்டி, நீரைத் தேக்கி வைக்கத் தவறியவர்கள் செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றை இழக்க நேரிடும் என்றும் குடபுலவியனார் கூறுவதாகக் கொள்ளலாம்.

17. யானையும் வேந்தனும்!

பாடியவர்: குறுங்கோழியூர் கிழார் (17, 20, 22). கோழி அல்லது கோழியூர் என்பது உறையூருக்கு மற்றொரு பெயர். குறுங்கோழியூர் என்பது உறையூரைச் சர்ந்த ஒருபகுதியாக இருந்திருக்கலாம். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் மூன்று. இம்மூன்று பாடல்களும் சேரமான் யனைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பற்றியவையாகும்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (17, 20, 22). பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூலில் பல சேர மன்னர்கள்ளின் வரலாறு காணப்படுகிறது. அந்நூலில் கூறப்படாத இரும்பொறை மரபைச் சார்ந்த மன்னர்களுள் இவன் ஒருவன். மற்றொருவன் கணைக்கால் இரும்பொறை என்பவன்.

இவனது இயற்பெயர் சேய். யானையினது நோக்குப் போலும் நோக்கினையுடையவன் என்பது குறித்து இவன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். “யானைக்கண்” என்பதற்கு மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது. முருகப்பெருமான் சூரனை வெல்லப் பிணிமுகம் என்னும் யானைமீது அமர்ந்து சென்றது போல் இவன் யானைமீது ஏறிச் சென்றதை ஒப்பிட்டு “யானைக்கட் சேய்“ என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து.

ஒருசமயம், இச்சேரமன்னனுக்கும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் இடையே போர் மூண்டது. அப்போரில், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்ச் சேரல் இரும்பொறை பாண்டியனிடம் தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டான். பின்னர், தன் வலிமையால் சிறைக் காவலரை வென்று தப்பிச் சென்று தன் நாட்டை மீண்டும் ஆட்சி செய்தான்.

இச்சேரமான் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொக்குப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பாடப்பட்ட சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டி என்னும் ஊரைத் தலநகராகக்கொண்டு கி. பி. 200 - 225 காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது (சுப்பிரமனியன், பக்கம் 45).
பாடலின் பின்னணி: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை இப்பாடலில் குறுங்கோழியூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார். அவன் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை, குழியில் அகப்பட்ட யானை, தன் வலிமையால் குழியைத் தூர்த்து வெளியேறிச் சென்று தன் இனத்தோடு வாழ்ந்ததற்கு ஒப்பிடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

தென்குமரி, வடபெருங்கல்,
குணகுட கட லாஎல்லை,
குன்று,மலை, காடு,நாடு
ஒன்றுபட்டு வழிமொழியக்
5 கொடிதுகடிந்து, கோல்திருத்திப்
படுவதுஉண்டு, பகல்ஆற்றி,
இனிதுஉருண்ட சுடர்நேமி
முழுதுஆண்டோர் வழிகாவல!
குலைஇறைஞ்சிய கோள்தாழை
10 அகல்வயல் மலைவேலி
நிலவுமணல் வியன்கானல்
தெண்கழிமிசைச் சுடர்ப்பூவின்
தண்தொண்டியோர் அடுபொருந!
மாப்பயம்பின் பொறைபோற்றாது
15 நீடுகுழி அகப்பட்ட
பீடுஉடைய எறுழ்முன்பின்
கோடுமுற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிகொன்று
கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
20 நீபட்ட அருமுன்பின்
பெருந்தளர்ச்சி பலர்உவப்பப்
பிறிதுசென்று மலர்தாயத்துப்
பலர்நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய உயர்மண்ணும்
25 சென்றுபட்ட விழுக்கலனும்
பெறல்கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின் எனவும்,
ஏந்துகொடி இறைப்புரிசை
வீங்குசிறை வியல்அருப்பம்
இழந்துவைகுதும் இனிநாம்இவன்
30 உடன்றுநோக்கினன் பெரிதுஎனவும்
வேற்றுஅரசு பணிதொடங்குநின்
ஆற்றலொடு புகழ்ஏத்திக்
காண்கு வந்திசின் பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல்தோல் மலையெனத்
35 தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை
உடலுநர் உட்க வீங்கிக் கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
40 வரையா ஈகைக் குடவர் கோவே!


அருஞ்சொற்பொருள்:
2. குணக்கு = கிழக்கு; குடக்கு = மேற்கு. 4. வழிமொழிதல் = வழிபாடு கூறுதல். 5. கோல் = அரசாட்சி. 6. படுவது = உரியது, அனுபவிப்பது; பகல் = நடுநிலை. 7. நேமி = சக்கரம். 8. வழி = மரபு. 9. இறைஞ்சுதல் = தாழ்தல்; கோள் = கொள்ளத்தக்க; தாழை = தென்னை. 11. கானல் = கடற்கரை, காடு. 12. தெண் = தெளிந்த; கழி = கடலையடுத்த உப்பங்கழி; மிசை = மேல். 13. தொண்டி = தொண்டி என்னும் ஊர்; அடுதல் = வெல்லுதல்; பொருநன் = அரசன். 14. மா = பெரிய; பயம்பு = பள்ளம்; பொறை= பூமி. 16.எறுழ் = வலிமை; முன்பு = வலிமை. 17. கோடு = கொம்பு. 18. நிலைகலங்க = நிலை சரிய; கொன்று = அழித்து. 19. கிளை = உறவு; புகலுதல் = விரும்புதல்; தலைக்கூடுதல் = நிறைவேற்றுதல் (சேர்தல்). 20. அரு = காணமுடியாத (பொறுத்தற்கரிய). 22. பிறிது = வேறு; மலர்தல் = விரிதல்; தாயம் = சுற்றம். 23. நாப்பண் = நடுவே. 24. உண்டு = தன்னிடத்தே இருந்த; உயர்மண் = உயர்ந்த நிலம். 26. உறல் = அணைதல், சார்தல், புணர்தல். 27. ஏந்தல் = உயர்ச்சி; இறை = உயர்ச்சி, தங்குதல்; புரிசை = மதில். 28. வீங்கு = மிக்க; சிறை = காவல்; வியல் = அகலம்; அருப்பம் = அரண், மதில். 29. வைகுதல் = இருத்தல். 30. உடன்று = வெகுண்டு. 33. ஈண்டுதல் = திரளுதல். 34. தோல் = கேடயம். 35. தேன் = வண்டு; இறை = தங்குதல்; இரு = பெரிய. 36. உடலுநர் = பகைவர் (உடலுதல் = சினத்தொடு பொருதல்); உட்குதல் = அஞ்சுதல். 37. வான் = மேகம்; ஊக்கும் = முயலும்; ஆனாது = அமையாது. 38. கடு = நஞ்சு; ஒடுங்குதல் = பதுங்கல், தங்குதல்; எயிறு = பல்; அரவு = பாம்பு. பனி = நடுக்கம். 40. வரையா = அளவில்லாத (குறையாத); குடவர் = குட நாட்டவர்.

கொண்டு கூட்டு: காவல், பெரும, கோவே, ஏத்திக் காண்கு வந்திசின் எனக் கூட்டுக.

உரை: தெற்கே குமரியும், வடக்கே இமயமும், கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக்கொண்டு குன்று, மலை, காடு, நாடு ஆகியவற்றில் வாழ்வோர் ஒருங்கே வழிபாடு செய்ய, கொடுமைகளை நீக்கி, செங்கோல் செலுத்தி, உரிய வரியைத் திரட்டி நடுவு நிலைமையோடு உலகம் (தமிழ் நாடு) முழுவதையும் இனிமையாக நல்லாட்சி புரிந்தவர்களின் வழித்தோன்றலே!

குலைகள் தாழ்ந்து பறிப்பதற்கு ஏற்றதாக உள்ள தென்னை மரங்களையும், அகன்ற வயல்களையும், மலையையே வேலியாக உள்ள இடங்களையும், நிலவு போன்ற மணல் நிறைந்த கடற்கரையையும், தெள்ளிய கழியிடத்து நெருப்புப்போல் பூத்த சிவந்த ஒளிவிடும் பூக்களையும் உடைய குளிர்ந்த தொண்டி என்னும் ஊரில் வாழ்வோரின் வெற்றி வேந்தனே!

பெரிய குழியான இடம் இருப்பதை அறியாது, அந்த நெடிய குழியில் வீழ்ந்த, செருக்கும், மிகுந்த வலிமையும் உடைய, தந்தங்கள் முதிர்ந்த யானை அக்குழியைத் தூர்த்துத் தன்னை விரும்பும் சுற்றத்தோடு சென்று வாழ்ந்ததைப்போல் உன் அரிய வலிமையால் பகைவரிடம் நீ அடைந்த தளர்ச்சியினின்று நீங்கி, மீண்டும் அகன்ற உன் நாட்டிற்குச் சென்றது உன் சுற்றத்தார் நடுவே புகழ்ந்து பேசப்படுகிறது. நீ பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுவதற்கு முன்பு, உன்னால் தோற்கடிக்கப்பட்ட உன் பகைவர்கள், “இவன் மனமுவந்தால் நாம் இழந்த நம் நாட்டையும் இவனால் கொள்ளப்பட்ட அணிகலன்களையும் திரும்பப்பெறக்கூடும்” என்று எண்ணினார்கள். மற்றும், உன் வரவை எதிர்பாராத பகைவர்கள், தாங்கள் கவர்ந்து கொண்ட கொடி பறக்கும் உயர்ந்த மதில், மிகுந்த காடுகள், அகழி முதலியவைகளைக் காவலாக உடைய அரண்களை இழந்து வருந்த நேரிடும் என்று எண்ணினார்கள். இவ்வாறு எண்ணிய உன் பகைவர்கள் உனக்குப் பணிபுரிவதற்குக் காரணமாகிய உன் புகழை வாழ்த்தி உன்னைக் காண வந்தேன்.

உன் வீரர்கள் ஏந்தியிருக்கும் கேடயங்கள் திரண்ட மேகங்களைப்போல் காட்சி அளிக்கின்றன. உன் யானைகளைப் பெரிய மலை என்று எண்ணி தேனீக்களின் கூட்டம் அவைகளிடம் வந்து தங்குகின்றன. பகைவர்கள் அஞ்சும் உன் படையைக் கடலென்று கருதி மேகங்கள் நீர் கொள்ள முயலுகின்றன. இத்துணை வலிமையும் பெருமையும் உடைய படைகள் மட்டுமல்லாமல், பல்லில் நஞ்சுடைய பாம்பு நடுங்குமாறு இடிபோல் முழங்கும் முரசும் உடையவனே! குறையாத கொடையுடைய குடநாட்டின் அரசே!

16. செவ்வானும் சுடுநெருப்பும்

பாடியவர்: பாண்டரங் கண்ணனார் (16). இவருடைய இயற்பெயர் கண்ணனார். இவர் தந்தையார் பெயர் பாண்டரங்கன். ஆகவே, இவர் பாண்டரங் கண்ணனார் என்று அழைக்கப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். பாண்டரங்கம் என்பது ஒருவகைக் கூத்து. அக்கூத்தில் வல்லவராக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (16, 377). இவன் இராச சூயம் என்ற வேள்வி செய்ததால் இவனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இவன் ஆட்சிக்காலத்தில் சேர நாட்டை முதலில் மாரிவெண்கோ என்பவனும் அவனுக்குப் பிறகு சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனும் ஆட்சி புரிந்தனர். சோழன் பெருநற்கிள்ளிக்கும் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கும் போர் மூண்டது. அப்போரில் சோழனுக்குத் துணையாகப் போர்புரிந்த மலையமான் என்பவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை வென்றான்.

இச் சோழமன்னனின் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவர்களின் நாட்டை அழித்த போர்த்திறத்தைப் புலவர் பாண்டரங்கண்ணனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: மழபுல வஞ்சி. பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.

வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்புஊட்டி
5 மனைமரம் விறகுஆகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
10 துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாள் புலர்சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்!
மயங்குவள்ளை மலர்ஆம்பல்,
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
15 கரும்புஅல்லது காடுஅறியாப்
பெருந்தண்பணை பாழ்ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை;
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெரும!நின் களிறே.

அருஞ்சொற்பொருள்:
1. விரைவு = வேகம்; புரவி = குதிரை. 2. மழை = மேகம்; உரு = நிறம்; தோல் = கேடயம். 3. முனை = போர்முனை; முருங்க = கலங்க; தலைச்சென்று = மேற்சென்று. 4. கவர்பு = கொள்ளை; ஊட்டி = அடித்து (ஊட்டுதல் = புகட்டுதல், அனுபவிக்கச் செய்தல்). 6. கடி = காவல்; கடிதுறை = காவற் பொய்கை; படீஇ = படியச் செய்து. 7. எல்லு = கதிரவன்; எல் = ஒளி. 8. செக்கர் = சிவப்பு, செவ்வானம். 9. புலம் = இடம்; இறுத்தல் = செலுத்தல், தங்குதல். 10. செரு = போர். 12. உரு = அச்சம்; குருசில் = குரிசில் = அரசன், தலைவன். 13. மயங்குதல் = கலத்தல்; வள்ளை = ஒருகொடி; ஆம்பல் = அல்லி. 14. பகன்றை = சீந்தில், சிவதை, கிலுகிலுப்பை (ஒருவகைக் கொடி). பாகல் = ஒருவகைக் கொடி. 15. காடு = புன்செய் நிலம். 16. பணை = மருத நிலம்;. 17. ஏமம் = காவல். 18. நாமம் = அச்சம். 19. ஓர் ஆங்கு = ஒன்றுசேர, ஒன்று போல், எண்ணியவாறு; ஆங்கு = அவ்வாறு; மலைத்தல் = பொருதல், போரிடுதல்.

கொண்டு கூட்டு: குருசில், பெரும, நீ அமர் செய்ய நின் களிறு ஓராங்கு மலைந்தன எனக் கூட்டுக.

உரை: போரில் தேர்ச்சி பெற்ற, விரைந்து செல்லும் குதிரைப்படையுடனும், மேகம் போல் பரப்பிய கேடயங்களுடனும், போர்க்களம் கலங்குமாறு மேற்சென்று பகைவர்களின் நெல்விளையும் வயல்களைக் கொள்ளையிட்டாய். அவர்களின் வீட்டிலுள்ள கதவு, தூண் போன்ற மரத்தால் செய்த பொருட்களை விறகாக்கி அவற்றை தீயில் எரித்தாய். யானையைப் படியச் செய்து காவல் உள்ள நீர்த்துறைகளைப் பாழ் செய்தாய். பகைவர்களின் நாட்டில் நீ மூட்டிய தீயிலிருந்து எழுந்த ஒளி, சுடருடன் கூடிய ஞாயிற்றின் சிவந்த நிறம் போலத் தோன்றியது. பெருமளவில் படையைப் பரப்பி, துணைப்படை தேவையில்லாமல் போரில் வெற்றிபெற்றாய். புலவு நாற்றத்தையுடைய வாளும், பூசிய சந்தனம் உலர்ந்த மார்பும், முருகன் போன்ற சினமும், அச்சமும் பொருந்திய தலைவ! ஒன்றோடு ஒன்று சேர்ந்த வள்ளையும், மலர்ந்த ஆம்பலும், குளிர்ந்த பகன்றையும், பழுத்த பாகலையும் உடைய, கரும்பு அல்லாத பிற பயிர்கள் விளையாத புன்செய் நிலமும், பெரிய குளிர்ந்த மருத நிலமும் பாழாகுமாறு பகைவர்களின் காவலுடைய நல்ல நாட்டிற்குத் தீ மூட்டினாய். அரசே! அஞ்சத்தக்க நல்ல போரை நீ எண்ணியவாறு உன் யானைகள் செய்தன.

15. எதனிற் சிறந்தாய்?

பாடியவர்: நெட்டிமையார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பல போர்களில் வெற்றி பெற்றதையும் பல வேள்விகள் நடத்தியதையும் கண்டு நெட்டிமையார் மிகவும் வியப்படைந்தார். “அரசே! நீ கழுதைகளை ஏரில் பூட்டி உழுது பகைவர்களின் அகன்ற இடங்களைப் பாழ் செய்தாய்; அவர்களின் வயல்களில் குதிரைகள் பூட்டிய தேர்களைச் செலுத்திப் பாழ் செய்தாய்; பகைவர்களின் குளங்களில் யானையைப் படியச் செய்து அவற்றைப் பாழ் செய்தாய்; நீ அத்தகைய வலிமையுடையவன். உன்னுடைய தூசிப்படையை எதிர்த்துப் போரிட வந்து தோல்வியுற்றுப் பழியுடன் வாழ்ந்தவர்கள் பலரா? அல்லது வேதமுறைப்படி வேள்வி நடத்தி நீ நிறுவிய வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா? இவற்றில் எது அதிகம்?” என்று வினவி, இப்பாடலில் தன் வியப்பை வெளிப்படுத்திப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
5 வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்
பா வடியாற்,செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர
10 காப் புடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்குபொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
15 நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
20 வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25 நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

அருஞ்சொற்பொருள்:
1. கடு = விரைவு; குழித்த = குழியாக்கிய; ஞெள்ளல் = தெரு. 2. வெள் = வெளுத்த; புல்லினம் = புல்+இனம் = இழிந்த கூட்டம். 3. நனம் = அகற்சி (அகலம்); தலை = இடம்; எயில் = அரண். 4. புள்ளினம் = பறவைகள்; இமிழும் = ஒலிக்கும். 5. உளை = பிடரிமயிர்; கலிமான் = குதிரை; உகளல் = தாவுதல். 6. தெவ்வர் = பகைவர். 7. துளங்கல் = அசைதல்; இயல் = தன்மை; பணை = பெருமை; எருத்து = கழுத்து. 8. பா = பரந்த; செறுதல் = கோபித்தல். 9. மருப்பு = கொம்பு(தந்தம்); அவர = அவருடைய. 10. கயம் = வற்றாத குளம். 12. பொன் = இரும்பு; கிளர் = மேலெழும்பு; எறிதல் = அடித்தல். 13. ஒன்னார் = பகைவர். 14. கடுந்தார் = விரைவாக செல்லும் படை; முன்பு = வலிமை; தலைக்கொள்ளுதல் = கெடுத்தல். 15. நசை = ஆசை; தருதல் = அழைத்தல்; பிறக்கு = முதுகு, பின்புறம். 17. பனுவல் = நூல். 18. சீர்த்தி = மிகுபுகழ்; கண்ணுறை = மேலே தூவுவது; மலிதல் = மிகுதல், நிறைதல். 19. ஆவுதி = ஆகுதி = ஓமத்தீயில் நெய்யிடுதல். 20. வீதல் = குறைதல். 21. யூபம் = தூண்; வியன் = அகன்ற, மிகுந்த; களம் = இடம். 22. உற்று = பொருந்தி. 23. விசி = கட்டு; கனை = நெருக்கம். மண்கனை = ஒருவகை மண்ணால் ஆகிய சாந்து; முழவு = முரசு, பறை. 24. வஞ்சி = பகைவர் மீது படையெடுப்பு. 25. நாடல் = நாட்டம் (நோக்கம்); சான்ற = அமைந்த; மைந்து = வலிமை.

கொண்டு கூட்டு: பெரும, மைந்தினோய், பாழ் செய்தனை; தேர் வழ்ங்கினை; கயம் படியினை; ஆதலின், நினக்கு ஒன்னாராகிய வசைபட வாழ்ந்தோர் பலர் கொல், யூபம் நட்ட வியன்களம் பலகொல்; இவற்றுள் யா பல கொல்லோ எனக் கூட்டுக.

உரை: விரைவாகச் செல்லும் தேர்களால் குழிகள் தோண்டப்பட்ட தெருக்களில், வெண்மையான வாயுள்ள கழுதைகளை ஏரில் பூட்டி, உன் பகைவர்களின் நல்ல அரண்கள் சூழ்ந்த அகன்ற இடங்களைப் பாழ் செய்தாய். பறவைகள் ஒலிக்கும் புகழ் மிகுந்த விளைவயல்களில் வெள்ளைப் பிடரி மயிருடைய குதிரைகளின் குவிந்த குளம்புகள் தாவுமாறு செய்து உன் பகைவர்களின் நாட்டில் தேர்களைச் செலுத்தினாய். பருத்த, அசையும் கழுத்தும், பெரிய காலடிகளும், சினத்துடன் கூடிய பார்வையும், ஒளிரும் தந்தங்களுமுடைய யானைகளை ஏவிப் பகைவர்களின் குளங்களைப் பாழ்செய்தாய். நீ அத்தகைய சீற்றம் உடையாய். ஆதலால், வலிய இரும்பால் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறையப்பட்ட அழகிய பலகையோடு நிழல் உண்டாக்கும் நெடிய வேலை எடுத்து, உன் பகைவர், ஒளிரும் படைக்கலங்களுடன் கூடிய உன்னுடைய விரைந்து செல்லும் தூசிப்படையின் வலிமையை அழிக்க விரும்பி ஆசையோடு போருக்கு வந்தனர். பின்னர், அந்த ஆசை ஒழிந்து பழியுடன் வாழ்ந்தவர் பலரா? அல்லது குற்றமற்ற நல்ல நூலாகிய வேதத்தில் சொல்லியவாறு அரிய புகழுடைய சுள்ளியும், பொரியும், நெய்யும் இட்டுப் பலவிதமான மாட்சிமைகளும், கேடற்ற சிறப்பும் உடைய யாகங்கள் செய்து, நீ நிறுவிய தூண்கள் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா? வாரால் இறுகக் கட்டி, மார்ச்சுனை தடவிய முழவுடன் உன் படையெடுப்புகளைப் புகழ்ந்து பாடும் பாடினியின் பாட்டுக்கேற்ப ஆராய்ந்து அமைந்த வலிமை உடையோய்! இவற்றுள் எதன் எண்ணிக்கை அதிகம்?

சிறப்புக் குறிப்பு: போரில் முன்னணியில் செல்லும் படை தூசிப்படை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னணிப்படையிடம் பலரும் தோல்வியுற்றார்கள் என்று இப்பாடலில் நெட்டிமையார் கூறுவதிலிருந்து அவனுடைய முழுப்படையின் வலிமையை எதிர்த்துப் போரிடுவது மிகவும் கடினம்; அவனை எதிர்த்துப் போரில் வெற்றி பெறுபவர்கள் யாரும் இல்லை என்ற கருத்துகளும் இப்பாடலில் மறைந்திருப்பதைக் காணலாம்.

14. மென்மையும்! வன்மையும்!

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 8-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 8-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருசமயம், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலரின் கையைப் பிடித்தான். அவர் கை மிகவும் மென்மையாக இருப்பதைக் கண்ட அவன் மிகவும் வியப்படைந்தான். அவன் கபிலரைப் பார்த்து, “தங்கள் கைகள் ஏன் இவ்வளவு மென்மையாக இருக்கின்றன?” என்று கேட்டான். அதற்குக் கபிலர், அரசே! நீ யானை, குதிரை ஆகியவற்றைச் செலுத்துகிறாய். போர்க்களத்தில் வில்லேந்தி அம்பு எய்கிறாய். என் போன்ற இரவலர்கள் முயற்சியின்றிப் பிறர் அளிக்கும் புலாலையும் சோற்றையும் உண்ணுவதைத் தவிரத் தங்கள் கைகளால் வேறு எந்தக் கடினமான வேலையையும் செய்வதில்லை. ஆகவேதான், என் கை மென்மையாக உள்ளது.” என்று இப்பாடல் மூலம் சேரனின் கேள்விக்குக் கபிலர் விடை அளிக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடுங்கண்ண கொல்களிற்றான்
காப்புடைய எழுமுருக்கிப்
பொன்இயல் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
5 பார்உடைத்த குண்டுஅகழி
நீர்அழுவம் நிவப்புக்குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10 பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும், குரிசில்!
வலிய ஆகும்நின் தாள்தோய் தடக்கை;
புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
15 பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
மெல்லிய பெரும! தாமே நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்! நின் பாடுநர் கையே.

அருஞ்சொற்பொருள்:
1. கடுங்கண்ண = கடும்+கண்ண = கொடிய கண்ணையுடைய. 2. காப்பு = காவலான இடம்; எழு = தூண், கணைய மரம்; முருக்கி = முறித்து. 3. பொன் = இரும்பு; புனை = அழகு; தோட்டி = அங்குசம். 4. முன்பு = வலிமை; துரந்து = குத்தி. சமந்தாங்குதல் = வேண்டுமளவில் பிடித்து இழுத்தி நிறுத்துதல். 5. பார் = நிலம், பூமி; குண்டு = ஆழம். 6. அழுவம் = பரப்பு; நிவப்பு = உயர்ச்சி. 7. நிமிர்தல் = ஓடல்; பரிதல் = ஓடுதல்; மா = குதிரை; தாங்குதல் = நிறுத்துதல். 8. ஆவம் = அம்புறாத்தூணி. 9. சாவம் = வில்; நோன் = வலி; ஞாண் = கயிறு; வடு = தழும்பு; வழங்குதல் = செலுத்துதல். 10. குரிசில் = தலைவன். 11. தாள் = கால்; தோய்ந்த = பொருந்திய; தட = பெரிய. 12. புலவு = ஊன்; பை = வலிமை (கொழுத்த); தடி = தசை; கொளீஇ = கொளுத்தி. 13. துவை = துவையல். 15. நன்றும் = மிக; ஆரணங்கு = ஆற்றுதற்கு அரிய வருத்தம். 16. நல்லவர் = பெண்கள். 17. பொருநர் = பகைவர். 18. இரு = பெரிய; நோன்மை = வலிமை. 19. செரு = போர்; சேய் = முருகன்.

கொண்டு கூட்டு: குரிசில், பெரும, சேஎய், வலியாகும் நின்கை; நிற்பாடுநர் கை தாம் மெல்லியவாகும் எனக் கூட்டுக.

உரை: கொடிய கண்களையுடைய, கொல்லும் யானைகளால், பாதுகாப்பிற்காகப் பகைவர்கள் வைத்திருந்த கணையமரங்களை முறித்து, இரும்பால் செய்யப்பட்ட அழகிய அங்குசத்தால் வலிமையாகக் குத்தி யானைகளைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். நிலத்தைத் தோண்டி உருவாக்கப்பட்ட அகழிகளின் நீர்ப்பரப்புகளின் ஆழம் கருதி அவைகளின் மீது செல்லாமல் விரைவாக ஓடும் குதிரைகளைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். அம்புறாத்தூணியை முதுகில் பொருத்தித் தேர் மேலிருந்து வில்லின் நாணால் கையில் வடு உண்டாகுமாறு அம்பைச் செலுத்துகிறாய். மற்றும், பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலன்களை அளிக்கிறாய். அரசே! இத்தகைய செயல்களால் உன் முழங்கால் வரை நீண்ட பெரிய கைகள் வலிமையாக உள்ளன. புலால் மணக்கும் கொழுத்த தசையைப் பூ மணமுள்ள புகையுடன் கூடிய தீயினால் கொளுத்திச் சமைத்த புலாலும், துவையலும், கறியும் சோறும் உண்ணுவதைத் தவிர, உன்னைப் பாடுபவர்கள் வேறு வலிய செயல்களைத் தங்கள் கைகளால் செய்யாததால், அவர்களின் கைகள் மிகவும் மென்மையானதாக உள்ளன. அரசே! பெண்டிர்க்கு வருத்ததைத் தரும் மார்பும், பகைவருடன் வலிய நிலம் போன்ற திண்மையோடு போர்புரியும் முருகனைப் போன்ற ஆற்றலும் உடையவனே!

13. நோயின்றிச் செல்க!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (13, 127 - 135, 241, 374, 375).
இவர் இயற்பெயர் மோசி. இவர் முடவராக இருந்ததால் முடமோசியார் என்று அழைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் உறையூரின் ஒரு பகுதியாக இருந்த ஏணிச்சேரி என்னும் ஊரைச் சார்ந்தவர். புறநானூற்றில் இவர் பதின்மூன்று பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் பன்னிரண்டு பாடல்கள் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் புகழந்து பாடப்பட்டவையாகும்.

பாடப்பட்டோன்: சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (13). இவன் இயற்பெயர் பெருநற்கிள்ளி. முடிசூடுவதற்குரிய இளவரசனாகையால் “முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி” என்று அழைக்கப்பட்டான். இவன் காலத்தில், சேர நாட்டை ஆண்டவன் சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை.
பாடலின் பின்னணி: சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கும் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளிக்கும் இடையே இருந்த பகையின் காரணத்தால் கோப்பெருநற்கிள்ளி வஞ்சியை முற்றுகையிட்டான். அச்சமயம், ஒருநாள், அந்துவஞ்சேரல் இரும்பொறை தன் அரண்மனையிலிருந்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியாருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, ஒருவன் மதம் பிடித்த யானை மீது ஏறி வருவதையும், அந்த யானையைச் சூழ்ந்திருந்த பாகர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாத காட்சியையும் கண்டான். அந்தக் காட்சியைக் கண்ட சேரன், முடமோசியாரை நோக்கி, “அங்கு வருபவன் யார்?” என்று கேட்டான். அதற்கு, முடமோசியார், “அவன், நீர் வளமும் நில வளமும் நிறைந்த சோழ நாட்டின் மன்னன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி. அவனை இன்னலின்றித் திரும்பிச் செல்ல விடுக” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்

இவன்யார் என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
5 களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
10 பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

அருஞ்சொற்பொருள்:
2. நிறம் = தோல்; கவசம் = போர் வீரன் அணியும் இரும்புச் சட்டை; பூம்பொறி = அழகிய தோலின் இணைப்பு; சிதைத்தல் = அழித்தல். 3. பகடு = வலிமை; எழில் = அழகு. 4. மறலி = எமன்; மிசை = மேலே. 5. முந்நீர் = கடல்; வழங்குதல் = செல்லுதல்; நாவாய் = மரக்கலம். 6. நாப்பண் = நடு (இடையே). 7. சுறவு = சுறா மீன்; மொய்த்தல் = சூழ்தல். 8. மரியவர் = பின்பற்றி நடப்பவர் (பாகர்); மைந்து = பித்து (மதம்). 9. பெயர்தல் = திரும்புதல்; தில் - விழைவை உணர்த்தும் அசைச்சொல் 10. பழனம் = வயல்; மஞ்ஞை = மயில்; பீலி = மயிலிறகு. 11. சூடு = நெற்கதிற். 12. கொழுமீன் = ஒருவகை மீன், கொழுத்த மீன். விளைந்த = முதிர்ந்த. 13. விழு = சிறந்த (மிகுந்த); கிழவோன் = உரிமையுடையவன்.

கொண்டு கூட்டு: களிற்று மிசையோனாகிய இவன், யாரென்குவையாயின், நாடு கிழவோன்; இவன் களிறு மதம் பட்டது; இவன் நோயின்றிப் பெயர்க எனக் கூட்டுக.

உரை: ”இவன் யார்” என்று கேட்கிறாயா? இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யனைமீது வருகிறான். அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும், பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது. அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர். அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது. இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள். இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும், நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன். இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக.

12. அறம் இதுதானோ?

பாடியவர்: நெட்டிமையார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 6-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தன் பகைவர்க்குக் கொடியவனாக இருந்து, அவர்களின் நாட்டை வென்று, அவர்களின் பொருள்களைக் கொண்டுவந்து தன்னிடம் அன்போடு இரக்கும் இரவலர்க்கு யானையும் தேரும் அளிக்கும் இனியவனாக இருக்கிறான் என்று கூறி, அவனுடைய இச்செயல் எவ்வாறு அறமாகும் என்ற ஒருவினாவையும் நெட்டிமையார் முன்வைக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறல்மாண் குடுமி?
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
5 இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. மலைதல் = அணிதல். 2. பூ = பட்டம். புனை = அலங்காரம்; பண்ணல் = செய்தல், அலங்கரித்தல். 3. விறல் = வெற்றி; மாண் = மாட்சி. 4. இன்னா = துயருண்டாகுமாறு. 5. ஆர்வலர் = பரிசிலர்; முகம் = இடம்.

கொண்டு கூட்டு: குடுமி! பிறர் மண் கொண்டு, மலையவும் பண்ணவும், நின் ஆர்வலர் முகத்து இனிய செய்வை; இது நினக்கு அறமோ எனக் கூட்டுக.

உரை: வெற்றியில் சிறந்த குடுமி! பகைவர்களுக்குக் கொடியவனாக இருந்து, அவர் நாட்டை வென்று, உன்னை விரும்புபர்களுக்கு இன்முகத்தோடு இனியன செய்கிறாயே! பாணர்களுக்குப் பொன்னாலான தாமரை மலர்களையும் புலவர்களுக்குப் பட்டம் சூட்டிய யானைகளையும் அலங்கரிக்கப்பட்ட தேர்களையும் வழங்குகிறாயே! இது அறமாகுமோ?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், நெட்டிமையார் பாண்டியனைப் பழிப்பதுபோல் புகழ்கிறார்.

11. பெற்றனர்! பெற்றிலேன்!

பாடியவர்: பேய்மகள் இளவெயினியார் (11). இவர் பேயுருவத்தோடு நின்று பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோவைப் பாடினார் என்றும், இளமையிலே இறந்து பின்னர் பேய் உருவம் பெற்றார் என்றும், போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து பாடியதால் பேய்மகள் என்ற பெயர் பெற்றார் என்றும் பலரும் பலவாறாகக் கூறுவர். இவர் இயர்பெயர் இளவெயினி. குறமகள் இளவெயினி என்று ஒருபுலவர் இருந்ததால், அவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ (11). இவன் முடிசூடிய மூவேந்தருள் ஒருவனாக சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாகவும் விளங்கினான். இவன் புறநானூற்றில் 282 - ஆம் பாடலையும், அகநானூற்றில் 11 செய்யுட்களையும் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 379), குறுந்தொகையில் 10 பாடல்களையும் (16, 37, 124, 135, 137, 209, 231, 263, 283, 398), நற்றிணையில் 10 செய்யுட்களையும் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகையில் பாலைக்கலி முழுவதையும் (1-35) இயற்றிய பெரும் புலவன். இவன் பாலைத் திணைப் பாடல்களை இயற்றுவதில் மிகுந்த புலமையுடையவனாக இருந்தான். இவன் பாடல்கள் அனைத்தும் இலக்கிய நயமும், கருத்துச் செறிவும் உடையவை.
பாடலின் பின்னணி: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் புகழ்ந்து பாடிய பாடினியும் பாணனும் பரிசு பெற்றதை இப்பாடலில் பேய்மகள் இளவெயினி புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

அரிமயிர்த் திரள்முன்கை
வால்இழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
5 தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய அரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே;
10 புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருஉடைய விழுக்கழஞ்சின்
சீருடைய இழைபெற்றிசினே;
இழைபெற்ற பாடினிக்குக்
15 குரல்புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே
எனவாங்கு
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

அருஞ்சொற்பொருள்:
1.அரி = மென்மை; திரள் = திரண்ட. 2. வால் = தூய; இழை = அணிகலன்கள். 3. புனை = அலங்காரம். 4. குலவு = வளைவு; சினை = மரக்கிளை. 6. பொருதல் = முட்டுதல்; விறல் = வெற்றி; வஞ்சி = கரூர், சேர நாடு. 7. சான்ற = அமைந்த; விறல் = வெற்றி. 8. வெப்பு = வெம்மை; கடந்து = அழித்து. 9. துப்பு = பகை, உறுதல் = பொருந்துதல். 10. வயம் = வலிமை. 12. ஏர் = தோற்றப் பொலிவு; விழு = சிறந்த; கழஞ்சு = பன்னிரண்டு பணவெடை அளவு. 13. சீர் = அழகு; இழை = அணிகலன்கள். 15. குரல் = ஒலி, முதல் இடம்; சீர் = ஓழுங்கு; கொளை = இசை, தாளம் போடுதல்; வல் = திறமை. 17. ஒள் = ஒளி; அழல் = நெருப்பு, வெப்பம்.

உரை: மென்மையான மயிர்களுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலன்களையும் உடைய இளம்பெண்கள் ஆற்றங்கரையில் இருந்த மணலால் செய்த பாவைக்கு வளைந்த கிளைகளிலிருந்து கொய்த மலர்களைச் சூடுகிறார்கள். குளிர்ந்த ஆன் பொருநை ஆற்றில் பாய்ந்து விளையாடுகிறார்கள். அத்தகைய, வானளாவிய புகழும் வெற்றியும் பொருந்திய வஞ்சி நகரத்தில், புலவர்களால் புகழ்ந்து பாடும், வெற்றியுடைய வேந்தன் சேரமான் பெருங்கடுங்கோ. அவன், பகைவர்களின் வலிய அரண்களை அழித்து அவர்களைப் புறங்காட்டி ஒடவைத்த வலிமை பொருந்திய வேந்தன். அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடிய பெண், தோற்றப் பொலிவமைந்த சிறந்த பொன் அணிகலன்களைப் பரிசாகப் பெற்றாள். அவ்வணிகலன்களைப் பெற்ற பெண்ணின் பாடலுக்கு ஏற்ப இசையோடும் தாளத்தோடும் இணைந்து பாடிய பாணன் வெள்ளி நாரால் தொடுத்த ஒளி மிகுந்த பொன்னாலான தாமரை மலர்களைப் பரிசாகப் பெற்றான்.

சிறப்புக் குறிப்பு: பாடினியும் பாணனும் பரிசு பெற்றார்கள்; ஆனால் தனக்குப் பரிசுகள் ஏதும் கிடைக்கவில்லையே என்று இளவெயினியார் கூறாமல் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

Tuesday, December 7, 2010

10. குற்றமும் தண்டனையும்!

பாடியோர்: ஊன்பொதி பசுங்குடையார் (10, 203, 370, 378). இப்புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. பனையோலையால் குடை போல் செய்து அதை உணவு உண்பதற்கும், பூப்பறிப்பதற்கும் பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்தினர். பனையோலையில் ஊன் கொண்டு செல்வதை இவர் “ ஊன்பொதி பசுங்குடை” என்று பாடியதால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாடப்பட்டோன்: சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி(10, 203, 370, 378). நெய்தலங்கானல் என்பது இச்சோழன் பிறந்த ஊராகும். இவன் தென்னாட்டுப் பரதவரையும் வடநாட்டு வடுகரையும் வென்று புகழ் கொண்டவன். இவன் பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி என்னுமிடத்தும் பகைவரை வென்றதால் முறையே பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் அழைக்கப்பட்டான். நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி ஆகியோர் ஒருவர் அல்ல; அவர் வேறு வேறு மன்னர்கள் என்று கூறுவாரும் உளர்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் ஊன்பொதி பசுங்குடையார் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் குணநலன்களைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

வழிபடு வோரை வல்லறி தீயே;
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
5 வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
10 மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;
செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1. வல் = விரைவு. 2. தேறல் = தெளிதல். 4. ஒறுத்தல் = தண்டித்தல். 7. அடுதல் = சமைத்தல்; ஆனாமை = தணியாமை; கமழ்தல் = மணத்தல்; குய் = தாளிதம்; அடிசில் = சோறு, உணவு. 8. வரை = அளவு, வரையா = குறையாத, அளவில்லாத; வசை = பழி. 9. மலைத்தல் = போர்செய்தல், விரோதித்தல்; மள்ளர் = வலிமையுடையவர். 10. சிலை = வானவில்; தார் = மாலை. 11. இரங்கல் = உள்ளம் உருகுதல் (வருந்துதல்); சேண் = தூரம். 12. நெடியோன் = பெரியோன். 13. எய்துதல் = அணுகுதல், அடைதல்; ஏத்துதல் = புகழ்தல்.

கொண்டு கூட்டு: விளங்கும்புகழ் நெய்தலங்கானல் நெடியோய், மார்ப, நீ வல்லறிதி, மொழிதேறலை, தகவொறுத்தி, தண்டமும் தணிதி, ஏத்துவோமாக, எய்த வந்தனம் எனக் கூட்டுக.

உரை: உன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிவாய். பிறர்மீது குற்றம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய். உண்மையிலே ஒருவன் செய்தது தவறு (தீமை) என்று நீ கண்டால் நீதி நூலுக்கு ஏற்ப ஆராய்ந்து தகுந்த முறையில் அவனைத் தண்டிப்பாய். தவறு செய்தவர்கள், உன் முன்னர் வந்து அடிபணிந்து நின்றால் நீ முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வருவோர்க்கு குறைவின்றி வழங்கும் பழியற்ற இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை. வானவில் போன்ற மாலையை அணிந்த மார்பையுடையவனே! வருந்தத்தக்க செயலைச் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன்னைப் பலவாறாகப் புகழ்கிறோம்.

9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

பாடியவர்: நெட்டிமையார். நெட்டிமையார் (9, 12, 15). இவர் நெடுந்தொலைவிலுள்ள பொருளைக் கூர்ந்து நோக்கி அறியும் திறமை வாய்ந்தவர் என்ற காரணத்தினால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் உரை நூலில் கூறுகிறார். இவர் கண்ணிமை நீண்டு இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறுவாரும் உளர். இப்பாடலில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, பஃறுளி ஆற்று மணலினும் பலநாள் வாழ்க என்று நெட்டிமையார் வாழ்த்துவதிலிருந்து இவர் பஃறுளி ஆறு கடலால் கொள்ளப் படுவதற்கு முந்திய காலத்தவர் என்பது தெரிய வருகிறது.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 6-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போருக்குப் போகுமுன் பசு, பார்ப்பனர், பெண்டிர், பிணியுடையோர், ஆண் பிள்ளை இல்லாதோர் ஆகியோரைப் பாதுகாவலான இடத்திற்குச் செல்லுமாறு அறை கூவிப் பின்னர்ப் போர் செய்தான் என்று நெட்டிமையார் கூறுகிறார். பாண்டிய மன்னர்களில் முன்னோனாகக் கருதப்படும் நெடியோனைப் பற்றிய செய்திகளும் இப்பாடலில் உள்ளன.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
5 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி; தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
10 முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.


அருஞ்சொற்பொருள்:
1. ஆன் = பசு; இயல் = தன்மை; ஆனியல் = ஆன்+இயல் = பசு போன்ற தன்மை. 2. பேணுதல் = பாதுகாத்தல். 3. இறுத்தல் = செலுத்தல். 5. கடி = விரைவு; அரண் = காவல். 6. நுவல் = சொல்; பூட்கை = கொள்கை, மேற்கோள். 7. மீ = மேலிடம், உயர்ச்சி, மீமிசை = மேலே. 9. செந்நீர் = சிவந்த தன்மையுடைய (சிவந்த); பசும்பொன் = உயர்ந்த பொன். வயிரியர் = கூத்தர். 10. முந்நீர் = கடல்; விழவு = விழா; நெடியோன் = உயர்ந்தவன் (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோர்களில் ஒருவன்)

கொண்டு கூட்டு: அறத்தாறு நுவலும் பூட்கை, எங்கோ, குடுமி வாழிய, பஃறுளி மணலினும் பலவே எனக் கூட்டுக.

உரை: ”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!

Monday, December 6, 2010

8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!

பாடியவர்: கபிலர் (8, 14, 105 - 111, 113 - 124, 143, 200, 201, 202, 236, 337, 347)
இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். ”புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவரால் புகழப்பட்டவர் (புறநானூறு - 126). கபிலர் பாடியதாக 278 செய்யுட்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, இவர் புறநானூற்றில் 28 பாடல்களையும் கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29 செய்யுட்களையும் இயற்றியுள்ளார். ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழின் இனிமையை எடுத்துரைக்க, இவர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டில் உள்ளது. இவர் குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் இயற்றுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரால் பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி.

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப்பற்றி இவர் இயற்றிய பாடல்கள் பதிற்றுப் பத்தில் ஏழாம் பதிகமாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதிகத்தால் பெருமகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன், நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம் இவருக்குப் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் நூறாயிரம் பொற்காசுகளும் தந்தான். ஆனால், கபிலர் தான் பெற்ற பரிசையெல்லாம் பிறருக்கு அளித்து, பரிசிலராகவும் துறவியாகவும் வாழ்ந்தார்.

இவர் வேள் பாரியின் நெருங்கிய நண்பர். வேள் பாரி இறந்தபின், அவன் மகளிர்க்குத் திருமணம் செய்யும் பொறுப்பினை ஏற்றுப் பல முயற்சிகள் செய்தார். முடிவில், பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துத் தான் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

கபிலர் என்ற பெயருடைய வேறு சில புலவர்களும் இருந்ததாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாடப்பட்டோன்: சேரமான் கடுங்கோ வாழியாதன்( 8, 14, 387). இவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் அழைக்கப்பட்டான். பதிற்றுப்பத்தில், “ பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன்” என்று கூறப்படுவதிலிருந்து இவன் அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் மகனாகப் பிறந்தவன் என்பது தெரிய வருகிறது. இவன் 25 ஆண்டு காலம் சேர நாட்டை வெகு சிறப்பாக ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பிறகு சேர நாட்டை ஆண்டதாகக் கருதப் படுகிறது. இவன் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

இவன் திருமாலிடத்துப் பெரும் ஈடுபாடு உடையவன். பதிற்றுப்பத்தின் ஏழாம் பதிகம் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனனை கபிலர் பாடியது. கபிலர் பாட்டால் பெரு மகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலருக்கு நூறாயிரம் பொற்காசுகளையும் நன்றா என்ற மலையில் இருந்து கண்ணுக்கெட்டியவரை உள்ள நிலப்பகுதியையும் பரிசாக அளித்ததாகக் கூறப்படுகிறது.

பாடலின் பின்னணி: கதிரவனோடு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணையானவன் இல்லை என்று இப்பாடலில் கபிலர் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆகும்.
இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
பூவை நிலை. மனிதரைத் தெவரோடு உவமித்துக் கூறுதல்.


வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

அருஞ்சொற்பொருள்:
1. காவலர் = அரசர்; வழிமொழிதல் = வழிபாடு கூறுதல். 2. போகம் = இன்பம். 3. துரப்புதல் = துரத்துதல், முடுக்குதல். 4. ஒடுங்கா = சுருங்காத; ஓம்புதல் = பாதுகாத்தல். 5. கடத்தல் = போர் செய்தல்; அடுதல் = கொல்லுதல். 6. வீங்கு = மிக்க; செலவு = பயணம் ; மண்டிலம் = வட்டம். 7. வரைதல் = நிர்ணயித்தல்; இறத்தல் = நீங்குதல், கடத்தல். 9. அகல் = அகன்ற.

கொண்டு கூட்டு: வீங்கு செலல் மண்டிலமே, வரைதி, இறத்தி, வருதி, ஒளித்தி, நீ விசும்பினானும் பகல் விளங்குதி; இக்குறைபாடுகளை உடைய நீ சேரலாதனை எங்ஙனம் ஒத்தியோ?

உரை: பெரிய வட்டவடிவமான பாதையில் செல்லும் கதிரவனே! உலகைக் காக்கும் மன்னர்கள் பலரும் வழிபட்டு நடக்க, இன்பத்தை விரும்பி, இவ்வுலகு அனைவருக்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன் நாடு சிறியது என்ற எண்ணத்தால் துரத்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்தையும், குறையாத ஈகையையும் பகைவரை வெல்லும் படையையும் உடையவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். உனக்குப் பகல் இரவு என்ற எல்லை உண்டு; பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவாய்; மாறி மாறி வருவாய்; மலைகளில் மறைந்து விடுவாய்; அகன்ற, பெரிய ஆகாயத்தில் பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ, எவ்வாறு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு நிகராவாய்?

7. வளநாடும் வற்றிவிடும்!

பாடியவர்: கருங்குழல் ஆதனார் (7, 224). ஆதனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் முதியவராக இருப்பினும், இவர் தலைமுடி கருமை நிறத்தோடு இருந்ததால் இவர் கருங்குழல் ஆதனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாடப்பட்டோன்: கரிகால் வளவன் (7, 65, 66, 224). தமிழ் நாட்டை ஆட்சி புரிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் மிகவும் சிறந்தவனாகக் கருதப்படுபவன் கரிகாலன். இவன் ஆட்சிக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் கூறுகிறார். இவன் திருமாவளவன் என்றும் கரிகால் பெருவளத்தான் என்றும் அழைக்கப்பட்டான். இவன் சோழன் உருவப் ப்ஃறேர் இளஞ்சேட் சென்னி என்ற சோழ மன்னனின் மகன்.

கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது இவன் தந்தையின் பகைவர்கள் இவன் வசித்த அரண்மனைக்குத் தீ வைத்தனர். அத்தீயிலிருந்து இவனை இவன் மாமன் இரும்பிடர்த்தலையார் காப்பாற்றியதாகவும், அரண்மனையிலிருந்து தப்பிய பொழுது இவன் கால் தீயில் கருகிக் கருமை நிறமானதால் இவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகிறது.

இவன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு சோழ நாட்டில் மன்னர் இல்லாத நிலை எழுந்தது. நாட்டை ஆட்சி செய்வதற்கு மனனன் இல்லையென்றால் அரண்மனை யானை யாருக்கு மாலையச் சூட்டுகிறதோ அவரை மன்னராக ஏற்றுக் கொள்வது சோழ நாட்டில் நிலவிய வழக்கம். அவ்வழக்குக்கேற்ப, அரண்மனை யானை கரிகாலனுக்கு மாலையை அணிவித்ததால் இவன் சோழ நாட்டிற்கு மன்னனானான் என்று ஒரு கதை உள்ளது.

கரிகாலன் ஒரு சிறந்த மன்னன் மட்டுமல்லாமல் ஒரு சிரந்த வீரனாகவும் விளங்கினான். வெண்ணி ( தஞ்சாவூருக்கு 15 மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊர்) என்ற ஊரில் இரண்டு போர்களில் வெற்றி கண்டான். முதற்போரில் சேர மன்னன் பெருஞ்சேரலாதனை வென்றான். பாண்டியனும் வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு குறுநிலமன்னர்களும் சேரனுக்கு உதவியாகப் போர் புரிந்தார்கள். அவர்கள் அனைவரையும் கரிகாலன் வென்றான். போரில் தோல்வியுற்ற பெருஞ் சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான். வெண்ணியில் நடைபெற்ற மற்றொரு போரில் கரிகாலன் வெற்றி அடைந்த பிறகு தமிழகம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உள்ளாக்கினான். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடை பெற்ற போரில் ஒன்பது அரசர்களை வென்றான்.

கரிகாலனிடம் ஒப்புயர்வற்ற கப்பற்படை இருந்தது. அவன் தன் கப்பற்படையின் உதவியோடு இலங்கை மன்னனை வென்று அங்கிருந்து பலரைக் கைது செய்து தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்து காவிரிக்கரையைச் செப்பனிடுவதற்குப் பயன்படுத்தினான். காவிரியில் கல்லணையைக் கட்டி உழவர்களுக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்க்கு வழி வகுத்தான்.

கரிகாலன் பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆட்சி புரிந்தான். இவன் இமயம் வரை சென்று இடையிலுள்ள மன்னர்களை வென்றான் என்றும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, காஞ்சிபுராணம் ஆகிய நூல்களில் இவனைப் பற்றிய பல அரிய செய்திகள் உள்ளன. மற்றும், முடத்தாமக் கண்ணியர் இயற்றிய பொருநராற்றுப்படைக்கும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலைக்கும் பாட்டுடைத் தலைவன் கரிகால் வளவன் என்பது குறிப்பிடத்தக்கது.

கரிகாலனுடைய குடும்பத்தைப் பற்றித் தெளிவான தகவல்கள் இல்லை. சில வரலாற்று ஆசிரியர்கள், கரிகாலனுக்கு ஆண் வாரிசு இல்லை என்றும், ஆதிமந்தி என்று ஒரு மகள் மட்டும் இருந்ததாகவும், அவள் ஆட்டனத்தி என்னும் சேர இளவரசனை மணந்ததாகவும் கருதுகின்றனர். குறுந்தொகையின் 31-ஆம் பாடல் இயற்றிய ஆட்டனத்திதான் கரிகாலனின் மகள் என்றும் கூறுகின்றனர். வேறுசிலர், கரிகாலனுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்ததாகவும், மணக்கிள்ளிக்கு நற்சோனை என்று ஒரு மகள் இருந்ததாகவும், அவள் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணந்ததாகவும், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளும், அவருடைய தமையன் சேரன் செங்குட்டுவனும், இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்தவர்கள் என்றும் கூறுகின்றனர்.

பாடலின் பின்னணி: சோழன் கரிகாலனின் பகைவர்களின் நாடுகள் புதிய வருவாய் நிரம்பி மக்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால், கரிகாலன் இரவும் பகலும் தன் பகைவர்களை அழிக்கக் கருதி, அவர்களின் நாடுகளைச் சுட்டெரித்தான். ஆகவே, அந்நாடுகள் நலமிழந்து கெட்டன. இப்பாடலில், பகைவர்களின் நாடுகள் கரிகாலனால் அழிக்கப்படுவதைப் புலவர் கருங்குழல் ஆதனார் சுட்டிக் காட்டுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்றவள்ளை: மழபுல வஞ்சியும் ஆகும்.
கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.
மழபுல வஞ்சி. பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.

களிறு கடைஇயதாள்
கழல்உரீஇய திருந்துஅடிக்
கணைபொருது கவிவண்கையால்
கண்ஒளிர்வரூஉம் கவின்சாபத்து
5 மாமறுத்த மலர்மார்பின்
தோல்பெயரிய எறுழ்முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை ஆகலின், நல்ல
10 இல்ல ஆகுபவால், இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின்பிறர் அகன்றலை நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. கடைஇ = செலுத்தி; கடைஇய = செலுத்திய; தாள் = கால். 2. உரீஇ = உருவி; திருந்துதல் = ஒழுங்குபடுதல், அழகுபடுதல். 3. பொருதல் = பொருந்தல்; பொருது = போர்செய்து; கவிதல் = வளைதல்; வண்மை = வள்ளல் தன்மை. 4. கவின் = அழகிய; சாபம் = வில். 5. மா = திருமகள், பெரிய, பரந்த; மறுத்த = நீக்கிய. 6. தோல் = யானை; பெயர்த்தல் = நிலை மாறச் செய்தல்; எறுழ் = வலிமை; முன்பு = வலிமை. 7. எல்லை = பகற்பொழுது. 8. விளக்கம் = ஒளி; விளி = கூப்பிடு; கம்பலை = ஒலி. 9. மேவல் = ஆசை. 10. இயல் = இலக்கணம். 11. பூசல் = பெரிதொலித்தல், பலரறிய வெளிப்படுதல் (உடைப்பு); மறுத்தல் = நீக்கல், தடுத்தல். 12. செறுத்தல் = அடக்குதல்; யாணர் = புது வருவாய். 13. வைப்பு = ஊர்; அகலல் = விரிதல்; தலை = இடம்.

கொண்டு கூட்டு: தாளையும் அடியையும் கையையும் சாபத்தையும் மார்பையும் முன்பையும் உடைய வளவ, நீ கொள்ளை மேவலை. ஆகலின், யாணரையும் வைப்பினையுமுடைய பிறர் நாடு நல்ல இல்ல ஆகுப எனக் கூட்டுக.

உரை: யானையைச் செலுத்திய கால்களும் வீரக்கழல்கள் உராய்ந்த அடிகளும், அம்பு தொடுத்துக் குவிந்த கையும், கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வில்லும், திருமகள் விரும்பும் அகன்ற மார்பும், யானையை வெல்லும் வலிமையும் உடையவனே! இரவு பகல் என்று கருதாமல் பகவரின் ஊரைச் சுடும் தீயின் ஒளியில், அங்குள்ளவர்கள் கதறி அழுது ஒலி யெழுப்பமாறு அவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நீ விருப்பமுடையவன். ஆகவே, குளிர்ந்த நீர் பெருகியோடும் உடைப்புகளை மண்ணால் அடைக்காமல் மீனால் அடைக்கும் புதிய வருவாயினையுடைய பயனுள்ள ஊர்களையுடைய அகன்ற இடங்களுடன் கூடிய உன் பகவர்களின் நாட்டில் நல்ல பொருள்கள் இல்லாமல் போயின. நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய வளவனே!

Saturday, December 4, 2010

6. நிலவும் கதிரும் போல் வாழ்க!

பாடியவர்: காரிகிழார் (6): இப்புலவர் காரி என்னும் ஊரைச் சார்ந்தவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி(6, 9, 12, 15, 64). சங்க காலத்துப் பாண்டிய மன்னர்களில் வெற்றி, வீரம், கொடை, புகழ் ஆகியவற்றில் சிறந்த மன்னர்களில் இவனும் ஒருவன். வரலாற்றில் முதலாக இடம் பெறும் பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன். அவனுக்குப் பின்னர் பாண்டிய நாட்டை ஆண்டவன் முடத்திருமாறன். முடத்திருமாறனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்டவர்களில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும் ஒருவன். இவன் குமரி மலையும் ப்ஃறுளி ஆறும் கடலால் கொள்ளப் படுவதற்கு முன்னாதாகப் பாண்டிய நாட்டை ஆண்டவன். இவனுடைய ஆட்சிக் காலத்தை சரியாக வரையறுப்பதற்கு ஏற்ற சான்றுகள் இல்லை. இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு முன்பு பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான் என்று வரலாற்றில் காண்கிறோம்.

பாடலின் பிண்ணணி: இப்பாடலில், காரிகிழார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் வெற்றியையும் புகழையும் சிறப்பித்துக் கூறுவது மட்டுமல்லாமல் சிறந்த உறுதிப் பொருள்களை அவனுக்கு அறிவுரையாகக் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
5 கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
10 பற்றல் இலியரோ நின்திறம் சிறக்க
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
15 அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின் குடையே, முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே;
இறைஞ்சுக, பெருமநின் சென்னி, சிறந்த
20 நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே;
வாடுக, இறைவ நின் கண்ணி, ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே;
செலீஇயர் அத்தை, நின் வெகுளி, வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே;
25 ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய, பெரும! நீநிலமிசை யானே!


அருஞ்சொற்பொருள்:
1. வடாஅது = வடக்கின் கண்ணது; படுத்தல் = நிலைபெறச் செய்தல்; படு = நிலைபெற்ற (தங்கிய); நெடு = நீண்ட; வரை = எல்லை. 2. தெனாஅது = தெற்கின் கண்ணது; உரு = அச்சம்; கெழு = பொருந்திய. 3. குணாஅது = கிழக்கின் கண்ணது; பொருதல் = முட்டுதல்; தொடல் = தோண்டல்; குணக்கு = கிழக்கு. 4. குடாஅது = மேற்கின் கண்ணது; தொன்று = பழமை; முதிர் = முதிர்ச்சி; பெளவம் = கடல்; குடக்கு = மேற்கு. 5. புணர் = சேர்க்கை; முறை = ஒழுங்கு; கட்டு = வகுப்பு. 6. நிவத்தல் = உயர்தல். 7. ஆனிலை உலகம் = பசுக்களின் உலகம் (சுவர்க்கலோகம்); ஆனாது = அமையாது. 8. உரு = அச்சம்; சீர் = அளவு. 9. தெரிதல் = ஆராய்தல்; கோல் = துலாக்கோல்; ஞமன் = துலாக்கோலின் முள்முனை; திறம் = பக்கம், கூறுபாடு, வலிமை, குலம். 10. பற்றல் = பிடித்தல்; திறம் = குலம். 11. வினை = போர்; எதிர்ந்த = மாறுபட்ட; தெவ்வர் = பகைவர்; தேஎம் =தேயம், நாடு. 12. குளித்தல் = மூழ்குதல்; மண்டல் = நெருங்கல்; அடர் = அடர்ந்த; புகர் = புள்ளி. 13. செவ்விதின் = செம்மையாக (நேரே); ஏவி = செலுத்தி. 14. பாசவல் = பசுமையான விளை நிலம்; படப்பை = ஊர்ப்புறம்; ஆர் = அரிய; எயில் = மதில்; தந்து = அழித்து. 15. உறுதல் = நன்மையாதல், பயன்படல்; உறு = மிக்க. 16. மாக்கள் = மக்கள்; வரிசையின் = தரமறிந்து; நல்கி = அளித்து. 17. பணியியர் = தாழ்க. 18. செல்வம் = செல்வர்; நகர் = கோயில். 19. இறைஞ்சுதல் = வணங்குதல்; பெருமன் = அரசன்; சென்னி = தலை. 20. ஏந்துதல் = கை நீட்டுதல். 21. கண்ணி = தலையில் அணியும் மாலை; ஒன்னார் = பகைவர். 22. கமழ் = மணக்கும். 23. செலீஇயர் = செல்வதாக (தணிவதாக);அத்தை - அசைச் சொல்; வால் = தூய, வெண்மையான; இழை = அணிகலன். 24. துனித்த = ஊடிய; வாள் = ஒளி. 25. வென்றி = வெற்றி. 26. தண்டா = தணியாத (நீங்காத); தகை = தகுதி; மாண் = மாட்சிமை பெற்ற. 27. தண் = குளிர்ந்த; தெறு = சுடுகை. 29. மன்னுதல் = நிலைபெறுதல்; மிசை = மேல்பக்கம்.

கொண்டு கூட்டு: குடுமி, பெரும, உருவும் புகழும் ஆக; ஒரு திறம் பற்றாது ஒழிக; நின் திறம் சிறக்க; பணிக; இறைஞ்சுக; வாடுக; செல்லுக; பரிசில் மாக்கட்கு நல்கி மதியம் போலவும் ஞாயிறு போலவும், பெரும நீ நிலத்தின் மிசை மன்னுக எனக் கூட்டுக.

உரை: வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், மேற்கே மிகப் பழமையான கடலுக்கு மேற்கிலும், நிலம், ஆகாயம், சுவர்க்கம் என்று சேர்ந்துள்ள மூன்றில், நிலத்திற்குக் கீழும், சுவர்க்கத்திற்கு மேலேயும் அடங்காது உன்னைப்பற்றிய அச்சமும் உன் புகழும் பெருகி, பெரிய பொருள்களைச் சமமாக ஆராயும் துலாக்கோல் (தராசு) போல் ஒரு பக்கம் சாயாது இருப்பாயாக. உன் படை, குடி முதலியன சிறப்பதாக.

உன் செயலை எதிர்த்த உன் பகைவர் நாட்டில் கடல் புகுந்தது போல் பெருமளவில் உன் படையையும், சிறிய கண்களையுடைய யானைகளையும் செலுத்தி, அடர்ந்த பசுமையான விளைநிலம் மற்றும் ஊர்ப்புறங்களையும், பாதுகாக்கும் கடத்தற்கரிய அரண்களையும் அழித்து, அவற்றுள் அடங்கிய அழகுடன் செய்யப்பட்ட அணிகலன்களைப் பரிசிலர்க்கு அவர்கள் தகுதிக்கேற்ப அளிப்பாயாக. சடைமுடி தரித்த, மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம்வரும் பொழுது மட்டும் உன் கொற்றக்குடை தாழட்டும். சிறந்த நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தங்கள் கைகளை உயர்த்தி உன்னை வாழ்த்தும் பொழுது மட்டும் உன் தலை வணங்கட்டும். பகைவர்களின் நாட்டில் (உன்னால் போரில்) மூட்டப்பட்ட தீயினால் மட்டும் உன் தலையில் உள்ள மாலை வாடட்டும். தூய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்கள் அணிந்த மகளிர் உன்னோடு ஊடும் பொழுது மட்டும் அவர்கள் எதிரில் உன் கோபம் தணியட்டும்.

அடையவேண்டிய வெற்றிகளை எல்லம் அடைந்தும் மனத்தில் அடக்கத்தோடும் குறையாத ஈகைக் குணத்தோடும் உள்ள மாட்சிமை பொருந்திய குடுமி!

தலைவா!, நீ குளிர்ந்த சுடருடைய திங்களைப் போலவும், வெப்பமான சுடருடைய கதிரவனைப் போலவும் இந்நிலத்தில் நிலைபெற்று வாழ்வாயாக!

Friday, December 3, 2010

5. அருளும் அருமையும்!

பாடியவர்: நரிவெரூஉத் தலையார் (5, 195). இப்புலவரின் தலை நரியின் தலையைப் போல் இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும், இவர் நரிவெரூஉத்தலை என்னும் ஊரினர் என்ற காரணத்தால் இவருக்கு இப்பெயர் வந்ததென்றும், இவர் இயற்றிய பாடல் ஒன்றில் “நரிவெரூஉத்தலை” என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும் இவர் பெயருக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இவர் இயற்பெயர் தெரியவில்லை. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் இரண்டு (5, 195). இவர் பாடல்கள் கருத்துச் செறிவு உடையவை.

பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் (5). இச்சேர மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். இவன் இயற் பெயர் ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை. இவன் நாட்டு எல்லை கொங்கு நாட்டில் இருந்த கருவூர் வரை இருந்தது. இவன் கருவூரில் முடிசூட்டிக் கொண்டு அங்கிருந்து ஆட்சி புரிந்தான். இவன் அழகிலும் வீரத்திலும் சிறந்தவன். இவனைக் கண்டவர் உடல் நலம் பெறுவர் என்ற கருந்து அவன் காலத்து நிலவியது.
பாடலின் பின்னணி: இப்பாடலில், சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, தன் நாட்டு மக்களைக் குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும் என்று நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
5 அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. இடை = இடம். 2. பரத்தல் = பரவுதல். 4. ஓர் = ஒப்பற்ற. 6. நிரயம் = நரகம். 7. ஓம்பு = காப்பாற்றுவாயாக; மதி - அசைச் சொல். 8. அளிது = செய்யத் தக்கது.

உரை: எருமை போன்ற கருங்கற்கள் உள்ள இடங்களில் திரியும் பசுக்கூட்டம் போல யானைகள் திரியும் காடுகளுடைய நாட்டுக்குத் தலைவனே! நீ ஒப்பற்றவனாகையால் உனக்கு ஒன்று சொல்வேன். அருளையும் அன்பையும் நீக்கி, எப்பொழுதும் நரகத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ள விரும்புபவர்களோடு சேராமல், தாய் தன் குழந்தையைக் காப்பது போல் (அருளோடும் அன்போடும்) நீ உன் நாட்டைப் பாதுகாப்பாயாக. அதுவே செய்யத்தக்க செயல்; அத்தகைய செயல் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது அரிது.

4. தாயற்ற குழந்தை!

பாடியவர்: பரணர்(4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369). சங்க காலப் புலவர்களில் மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர். பரணரால் பாடப்பாடுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “பரணன் பாடினனோ” என்று அவ்வையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு - 99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 16 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் உருவப் ப்ஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர். இவர் பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை. இவர் கபிலரின் நண்பர். மருதத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்.

இவர் பதிற்றுப் பத்தில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியதற்கு, உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசாக பெற்றதாகக் கூறப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (4, 266). சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி வரலாற்றில் இடம் பெற்ற முதல் சோழ மன்னன் என்று கருதப்படுகிறது. இவனுக்கு முந்தியதாக இருந்த மன்னர்களைப்பற்றிய செய்திகளை வரலாற்று ஆசிரியர்கள் கற்பனைக் கதைகளாகவே கருதுகின்றனர். உதாரணமாக, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காகண்டன், காவேரன், மனு நீதி கண்ட சோழன், கற்றை ஆடல் கொண்டவன், சமுத்ரஜித் போன்றவர்களைப் பற்றிக் கூறப்படும் செய்திகளுக்குத் தக்க ஆதாரமில்லை என்று வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

இளஞ்சேட்சென்னியின் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று கருதப்படுகிறது. பொருநராற்றுப்படையில், கரிகாலனை “உருவப் ப்ஃறேர் இளையோன் சிறுவன்” என்று அதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் குறிப்பிடுவதிலிருந்து இவன் கரிகாலனின் தந்தை என்பது தெரிய வருகிறது (பொருநராற்றுப்படை, 130). இவன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான்.
பாடலின் பின்னணி: இப்பாடலில் புலவர் பரணர், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கும் போரில் சிறந்து விளங்குவதைப் பாராட்டுகிறார். சோழன் தேரில் வருவது கடலினின்று கதிரவன் எழுவது போல் உள்ளது என்று அவனைப் புகழ்கிறார். அவனோடு போர் புரிந்த பகைவரின் நாடு தாயில்லாக் குழந்தை போல் ஓயாது கூவி வருந்தும் என்றும் கூறுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
5 தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;
10 களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
15 மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. வலம் = வெற்றி; மறு = கரை. 2. வனப்பு = நிறம் அழகு. 3. களங்கொள்ளல் = இருப்பிடமாக்கிக் கொள்ளுதல், வெல்லுதல்; பறைந்தன = தேய்ந்தன. 4. மருப்பு = கொம்பு. 5. தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்; துவைத்தல் = குத்துதல், ஒலித்தல். 6. நிலைக்கு = நிலையில்; ஒராஅ = தப்பாத; இலக்கம் = குறி. 7. மா = குதிரை; எறிதல் = வெல்லுதல்; பதம் = பொழுது. 9. கறுழ் = கடிவாளம்; பொருதல் = தாக்குதல். 10. எறியா = எறிந்து = வீசியடித்து; சிவந்து = கோபித்து; உராவல் = உலாவல். 11. நுதி = நுனி; கோடு = கொம்பு. 13. அலங்குதல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; பரீஇ = விரைந்து; இவுளி = குதிரை. 14. பொலம் = பொன்; பொலிவு = அழகு. 15. மா = பெரிய; நிவத்தல் = உயர்தல் தோன்றுதல். 16. கவின் = அழகு; மாது - ஒருஅசைச் சொல். 17. ஆகன் மாறு = ஆகையால். 18. தூவா = உண்ணாத; குழவி = குழந்தை. 19. ஓவாது = ஒழியாது; உடற்றல் = பகைத்தல்; கூ = கூப்பிடு.

உரை: போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன. கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன.

குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன.

யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன.

நீ அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது, பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர்.

3. வன்மையும் வண்மையும்!

பாடியவர்: இரும்பிடர்த் தலையார். இப்பாடலில், யானையின் பெரிய கழுத்தை “இரும்பிடர்த்தலை” என்று புலவர் கூறுவது குறித்து இப்பாடலை இயற்றிய புலவர் இரும்பிடர்த்தலையார் என்று அழைக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் கரிகாலனின் மாமன் என்றும் கருதப்படுகிறார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி. கருங்கை என்பதற்கு வலிய கை என்று பொருள். இப்பாடலில், இப்பாண்டிய மன்னனை இரும்பிடர்த்தலையார் “கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி” என்று குறிப்பிடுகிறார். இவன் இயற்பெயர் எது என்பது ஆய்வுக்குரியது. இப்பாடலிலிருந்து இவன் கொடையிலும் வீரத்திலும் சிறந்தவன் என்று தெரிய வருகிறது. இவனைப் பற்றிய வேறு செய்திகள் எதுவும் வரலாற்றில் காணப்படவில்லை.
பாடலின் பின்னணி: இப்பாடலில், இரும்பிடர்த்தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியின் முன்னோர்களின் பெருமையையும் அவன் வலிமையையும் வண்மயையும் சிறப்பித்துக் கூறி, அவன் சொன்ன சொல் தவறாது இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
5 தவிரா ஈகைக், கவுரியர் மருக!
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடா அத்து
எயிறு படையாக எயிற்கதவு இடாஅக்
10 கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
15 பொலங் கழற்காற் புலர்சாந்தின்
விலங்ககன்ற வியன்மார்ப!
ஊர்இல்ல, உயவுஅரிய,
நீர்இல்ல, நீள்இடைய,
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
20 செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
25 முன்னம் முகத்தின் உணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.

அருஞ்சொற்பொருள்:
1. உவவு = முழு நிலா; ஓங்கல் = உயர்ந்த. 2. நிலவுதல் = நிலைத்திருத்தல்; வரைப்பு = எல்லை; நிழற்றுதல் = கருணை காட்டுதல். 3. ஏமம் = காவல்; இழும் = ஓசை. 4. நேமி = ஆட்சிச் சக்கரம்; உய்த்தல் = செலுத்தல்; நேஎ நெஞ்சு = கருணையுள்ள மனம். 5. கவுரியர் = பாண்டியன்; மருகன் = வழித்தோன்றல். 6. செயிர் = குற்றம்; சேயிழை = சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண். 7. ஓடை = நெற்றிப் பட்டம்; புகர் = புள்ளி; நுதல் = நெற்றி. 8. துன் = நெருங்கு; திறல் = வலிமை; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம்; கடாஅத்த = மதத்தையுடைய. 9. எயிறு = தந்தம்; எயில் = மதில்; இடுதல் = குத்துதல். 10. மருங்கு = பக்கம். 11. இரு = பெரிய; பிடர் = கழுத்தின் பின்புறம். 12. மருந்து இல் = பரிகாரமில்லாத; சாயா = சளைக்காத. 13. கருங்கை = வலிய கை; வழுதி = பாண்டியன். 15. பொலம் = பொன்; புலர்தல் = உலர்தல். 16. விலங்குதல் = விலகல்; வியல் = பரந்த. 17. உயவு = வருத்தம். 18. இடை = வழி. 19. பார்வல் = பகைவர் வரவைப் பார்த்திருக்கும் அரணுச்சி; கவிதல் = வளைதல். 20. செம்மை = நன்மை, பெருமை, வளைவின்மை; தொடை = அம்பெய்தல்; வன்கண் = கொடுமை. 21. வம்பு = புதுமை; பதுக்கை = கற்குவியல். 22. திருந்துதல் = அழகு படுதல் (அழகிய); சிறை = சிறகு; உயவும் = வருத்தும். 23. உன்ன மரம் = இலவ மரம்; கவலை = பல தெருக்கள் கூடுமிடம், இரண்டாகப் பிரியும் பாதை. 24. நசை = ஆசை; வேட்கை = விருப்பம், அன்பு. 26. வன்மை = வல்ல தன்மை

கொண்டு கூட்டு: மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர் வருவர், அஃது அவர் இன்மை தீர்த்தல் வன்மையான்; நிலம் பெயரினும் நின்சொல் பெயரல் எனக் கூட்டுக.

உரை: நிலைத்து நிற்கும் கடலை எல்லையாகக் கொண்ட நிலத்திற்கு நிழல் தரும் முழு மதி வடிவில் உள்ள உயர்ந்த வெண்கொற்றக் குடையோடும், பாதுகாப்பான முரசின் முழக்கத்தோடும் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்திய, கருணையுள்ள மனமும் நீங்காத கொடையும் கொண்ட பாண்டியரின் வழித்தோன்றலே! குற்றமற்ற கற்பும் சிறந்த அணிகலன்களும் உடையவளின் கணவனே! பொன்னாலாகிய பட்டத்தை அணிந்த புள்ளிகளுடைய நெற்றியும் எவரும் அணுகுதற்கரிய வலிமையும் மணம் கமழும் மதநீரும் கொண்டது உன் யானை. அந்த யானை தன் கொம்புகளைப் படைகருவிகளாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தி வீழ்த்தும். கயிற்றால் கட்டப்பட்ட கவிழ்ந்த மணிகள் உள்ள பக்கங்களையும் பெரிய தும்பிக்கையையும் உடைய அந்த யானையின் பெரிய கழுத்தின் மேலிருந்து, தனக்கு மாற்றில்லாத கூற்றுவனைப் போல் பொறுத்தற்கரிய கொலைத் தொழிலில் சளைக்காத, உன் வலிய கையில் ஒளி பொருந்திய வாளையுடைய பெரும்புகழ் வாய்ந்த பாண்டியனே! கால்களில் பொன்னாலான கழல்களும், உலர்ந்த சந்தனம் பூசிய பரந்து அகன்ற மார்பும் உடையவனே!

உன்னைக் காண்பதற்கு வரும் வழியில் ஊர்கள் இல்லை; அது பொறுத்தற்கரிய வருத்ததைத் தரும் நீரில்லாத நீண்ட வழி; அவ்வழியே வருவோரை அரண்களின் உச்சியிலிருந்து கையை நெற்றியில் வளைத்து வைத்துக் கண்களால் பார்த்துக் குறி தவறாது அம்பு எய்யும் கள்வரின் அம்புகளால் அடிபட்டு இறந்தோரின் உடல்களை மூடியிருக்கும் கற்குவியல்கள் உள்ளன. அழகிய சிறகுகளும் வளைந்த வாயும் உடைய பருந்துகள் இறந்தோர் உடலைத் தின்ன முடியாமல் இலவ மரத்தில் இருந்து வருந்துகின்றன. இலவ மரங்கள் நிறைந்த கடத்தற்கரிய பல பிரிவுகளுடைய பாதைகள் வழியாக உன்னைக் காண்பதற்கு இரவலர் வருகின்றனர். இரவலர்களின் உள்ளக் குறிப்பை அவர்கள் முகத்தால் உணர்ந்து அவர்களின் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உனக்கு இருப்பதால்தான் அவர்கள் பல இன்னல்களையும் கடந்து உன்னைக் காண வருகிறார்கள். ஆகவே, நிலம் பெயர்ந்தாலும், நீ உன் சொல்லிலிருந்து மாறாமல் இருப்பாயாக.