Tuesday, February 22, 2011

45. தோற்பது நும் குடியே!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும். சோழன் நலங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-லிலும், சோழன் நெடுங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைப் பாடல் 44-லிலும் காண்க.
பாடலின் பின்னணி: தங்களுக்குள் இருந்த பகை காரணமாக சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. சோழ குலத்தில் தோன்றிய இருவரும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது ஏளனத்துக்குரியது என்று அவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களைச் சமாதானப் படுத்துவதற்குக் கோவூர் கிழார் மேற்கொண்ட முயற்சி இப்பாடலிலிருந்து தெரிகிறது.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
5 ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்றுநும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே!

அருஞ்சொற்பொருள்:
1. இரு = பெரிய; வெண் = வெண்மை; தோடு = இலை, ஓலை, பூவிதழ்; மலைதல் = அணிதல், சூடுதல். 2. சினை = மரக்கொம்பு; தெரியல் = மாலை. 3. கண்ணி = மாலை; ஆர் = ஆத்தி; மிடைதல் = நிறைதல், செறிதல். 6. வேறல் = வெல்லுதல். 7. பொருள் = தன்மை (தகுதி); செய்தி = செய்கை. 9. மலி = நிறைதல், மிகுதல்; உவகை = மகிழ்ச்சி, களிப்பு; இகல் = பகை

உரை: இங்கு போர் புரிபவர்களில் யாரும் கரிய பனையின் வெண்ணிறப் பூமாலை அணிந்தவன் அல்லன்; கரிய வேம்பின் மாலையை அணிந்தவனும் அல்லன். உன்னுடைய மாலை ஆத்திப் பூக்களால் தொடுக்கப்பட்டது. உன்னோடு போர் புரிபவனின் மாலையும் ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்டதுதான். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடிதான். இப்போரில் நீங்கள் இருவரும் வெற்றி பெறுவது இயற்கையும் அல்ல. ஆதலால், உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்குத் தகுந்ததன்று. தேர்களில் கொடியோடுகூடிய உம்போன்ற வேந்தர்கள், இந்தப் போரைப்பார்த்துத் தங்கள் உடலெல்லாம் மிகவும் பூரிக்கும் வகையில் ஏளனமாகச் சிர்ப்பார்கள்.

சிறப்புக் குறிப்பு: பனந்தோட்டாலாகிய மாலை சேரர்களுக்குரியது; வேப்பம்பூ
மாலை பாண்டியனுக்குரியது. இங்கு, போர்புரிபவர்கள் இருவருமே சோழர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காக, கோவூர் கிழார், பனந்தோட்டு மலை அணிந்தவனோ வேப்பம்பூ மாலை அணிந்தவனோ இங்கு போர் புரியவைல்லை என்று கூறுகிறார்.

இப்பாடலும், முந்திய பாடலைப்போல், கோவூர் கிழார், அரசர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல் உடையவராக இருந்தார் என்பதையும் அரசர்களிடத்து அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

44. அறமும் மறமும்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி. சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர்.
நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு நெடுங்கிள்ளியை வருத்தினான். நெடுங்கிள்ளி, அங்கிருந்து தப்பி, உறையூருக்குச் சென்றான். பின்னர், நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டுப் போரிட்டான். அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வியடைந்ததாக வரலாறு கூறுகிறது. மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, காரியாறு என்னும் இடத்தில் இறந்ததால், அவன் சோழன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்

பாடலின் பின்னணி: நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்ட பொழுது, நெடுங்கிள்ளி போருக்கு வராமல், தன் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அச்சமயம், கோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் சென்று, “நீ அறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு; மறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளியுடன் போர் செய். இரண்டு செயல்களில் எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்திற்குரியது” என்று இப்பாடலில் அறிவுரை கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
5 அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்குஇனிது இருத்தல்;
10 துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!
அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
15 நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக உடைத்திது காணுங் காலே.

அருஞ்சொற்பொருள்:
1. இரு = கரிய; பிடி = பெண் யானை; தொழுதி = கூட்டம்; கயம் = குளம். 2. மிதி = மிதித்துத் திரட்டப்பட்ட கவளம். 3. திருந்திய = செவ்விய, திருந்துதல் = ஒழுங்காதல்; அரை = மரத்தின் அடிப்பாகம். நோன் = வலி; வெளில் = யானை கட்டும் கம்பம்; ஒற்றி = தள்ளி. 4. வெய்து = வெம்மையுடையது; உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல். 5. அலமரல் = கலங்குதல்; உரும் = இடி. 8. இனை = வருத்தம். 9. ஈங்கு = இவ்விடம். 10. துன்னுதல் = நெருங்குதல்; துப்பு = வலி; வயம் = வலிமை; மான் = குதிரை; தோன்றல் = அரசன். 11. அறவை = அற வழியில் நடப்பவன். 12. மறவை = வீர வழியில் நடப்பவன். 14. திண் = வலி. 15. சிறை = பக்கம்

உரை: ஆண் யானைகள் பெண்யானைகளின் கூட்டத்தோடு சேர்ந்து குளங்களில் படியாமல் உள்ளன; நெய்யோடு சேர்த்து, மிதித்துத் திரட்டப்பட்ட உணவுக் கவளங்களை உண்ணாமல், செவ்விய பக்கங்களையும் வலிமையுமுடைய கம்பங்களைச் சாய்த்து, நிலத்தில் புரளும் தும்பிக்கைகளுடன் வெப்பமுடைய பெருமூச்சு விட்டுக் கலங்கி இடி இடிப்பதுபோல் பிளிறுகின்றன. குழந்தைகள் பாலில்லாமல் அலறுகின்றனர். மகளிர் பூவில்லாத வெறுந்தலையை முடிந்துகொள்கிறார்கள். நல்ல வேலைப்படுகளுடன் கூடிய வீடுகளில் வாழும் மக்கள் நீரின்றி வருந்தும் ஒலி கேட்கிறது. இனியும் நீ இங்கே இருப்பது கொடிய செயல். பகைவர்கள் நெருங்குதற்கரிய வலிமையுடைய குதிரைகளையுடைய அரசே! நீ அறவழியில் நடக்க விரும்பினால், உன் கோட்டையின் கதவுகளைத் திறந்து, இந்த நாடு உன்னுடையது என்று நலங்கிள்ளிக்கு அளித்ப் போரைத் தவிர்ப்பாயாக; வீர வழியில் நடப்பவனாக இருந்தால் கோட்டையின் கதவுகளைத் திறந்து நலங்கிள்ளியுடன் போருக்குப் போவாயாக.” அறவழியிலும் வீரவழியிலும் செயல் படாமல், திறவாமல் அடைக்கப்பட்ட நீண்ட வலிய கதவுகளையுடைய மதில்களின் ஒருபக்கத்தில் நீ ஒளிந்திருப்பது வெட்கத்திற்குரிய செயல்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், மன்னர்கள் தவறு செய்தால், அவர்களைத் தட்டிக் கேட்டு, இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் அறிவும், ஆற்றலும் உடைய புலவர்கள் இருந்தார்கள் என்பதற்கும், அரசர்கள் புலவர்களுக்கு அந்த உரிமையை

43. பிறப்பும் சிறப்பும்!

பாடியவர்: தாமற்பல் கண்ணனார் (43). இவர் காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள தாமல் என்ற ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இப்பாடலிலிருந்து, இவர் பார்ப்பனர் என்று தெரிகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான். சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான், நெடுங்கிள்ளி இருந்த ஆவூர் என்னும் ஊரை முற்றுகையிட்டதாக வரலாறு கூறுகிறது.
பாடலின் பின்னணி: ஒருசமயம், தாமற்பல் கண்ணனார் சோழன் மாவளத்தானோடு சூதாடினார். சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வட்டு ஒன்று தாமற்பல் கண்ணனாருக்குத் தெரியாமலேயே அவருக்கு அடியில் மறைந்திருந்தது. ஆனல், தாமற்பல் கண்ணனார் சூதாட்டத்தில் வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய மாவளத்தான், சினமுற்று, அவ்வட்டை அவர் மீது எறிந்தான். அதனால், கோபமுற்ற தாமற்பல் கண்ணனார், மாவளத்தானைப் பார்த்து, “உன் செய்கையைப் பார்த்தால், நீ சோழ மன்னனுக்குப் பிறந்தவனாக எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினார். தான் செய்த குற்றத்தை உணர்ந்த மாவளத்தான் நாணினான். முடிவில், தாமற்பல் கண்ணனார் மாவளத்தானைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
5 கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
10 தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல்
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
15 நீர்த்தோ நினக்குஎன வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்எனக்
20 காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்
யானே பிழைத்தனென்; சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:
1. அலமரல் = வருந்தல், துன்பமுறல். 2. தெறு = சினம், அச்சம், துன்பம். கனலி = கதிரவன். 3. கால் = காற்று; கொட்குதல் = சுழலல். 4. அவிர் = ஓளி; சிறை = சிறகு. 5. உகிர் = நகம்; ஏறு = இடி; ஒரீஇ = நீக்கி (தப்பி). 7. தபுதி = அழிவு; சீரை = துலாத்தட்டு. 8. உரம் = வலி. 9. நேரார் = பகைவர்; முரண் = வலி. 10. வண் = மிகுதி; வார் = நேர்மை; கோல் = அம்பு. 11. கொடுமரம் = வில்; கடு = விரைவு; மான் = குதிரை. 12. கைவண் = வண்கை = கொடைக்கை; வண்மை = ஈகை; தோன்றல் = அரசன். 13. ஆர் = ஆத்தி; தெரியல் = மாலை. 15. நீர் = தன்மை; நீர்த்தோ = தன்மையான செயலோ (தகுமோ). 17. நனி = மிக. 19. எண்மை = எளிமை. 20. மொய்ம்பு = தோள்வலி. 23. எக்கர் = மணற்குன்று.

உரை: உலகில் வாழ்வோரின் துன்பங்கள் தீர, சுடும் கதிரவனின் வெப்பத்தைத் தாம் பொறுத்து, காற்றை உணவாகக் கொண்டு, கதிரவனின் சுடர்போல் சுழன்று திரியும், விளங்கிய சடையையுடைய முனிவர்கள் திகைக்குமாறு, வளைந்த சிறகினையும் கூரிய நகங்களையுமுடைய பருந்தின் தாக்குதலுக்குத் தப்பி தன்னிடத்தில் அடைக்கலம் புகுந்த, குறுகிய நடையையுடய புறாவின் அழிவுக்கு அஞ்சி, தராசில் புகுந்த, வரையாது வழங்கும் வள்ளலின் வழித்தோன்றலே! பகைவரை வென்ற, மிகுந்த செல்வத்தையுடைய, கிள்ளிவளவனின் தம்பியே! நீண்ட அம்பினையும் வளைந்த வில்லையுமுடைய மறவர்களுக்குத் தலைவ! விரைந்து செல்லும் குதிரைகளையும் வள்லல் தன்மையுமுடைய தலைவ! ”உன் குடிப்பிறப்பிலே எனக்கு ஐயம் எழுகிறது. ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்கள். நீ செய்த செயல் உன் தகுதிக்கு ஏற்றதோ?” என்று நீ வெறுக்குமாறு நான் கூறினேன். இருப்பினும், என் பிழையைக் கண்டு வெறுக்காமல், நீ தவறு செய்ததைப்போல் வெட்கப்பட்டாய். தமக்குத் தவறிழைத்தவர்களைப் பொறுத்தருளும் தலைவ! தவறிழைத்தவர்களைப் பொறுக்கும் தகுதி உன் குலத்தில் பிறந்தார்க்கு எளிது என்று எனக்குக் காட்டிய வலியவனே! உன் செயலால் நான் பிழைத்தேன். பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரிக்கரையில் உள்ள மணல்மேடுகளிலுள்ள மணல்களைவிட நீ அதிக நாட்கள் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், மாவளத்தான் தவறுகளைப் பொறுத்தருளும் இயல்பினன் என்று அவனைப் புகழ்ந்து பாடப்பட்டிருப்பதால் இப்பாடல் அரச வாகை என்னும் துறையைச் சார்ந்ததாகியது.

42. ஈகையும் வாகையும்!

பாடியவர்: இடைக்காடனார் (42). இவர் இடைக்காடு என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் இடைக்காடனார் என்ற பெயரை பெற்றார் என்று சிலர் கூறுவர். வேறு சிலர், இடைக்காடன் என்பது இவர் இயற்பெயர் என்றும் கூறுவர். இவர் இவற்றிய பல பாடல்கள் சங்க இலக்கியத் தொகைநூல்களுள் காணப்படுகின்றன. இவர் பாடல்கள் இலக்கிய வளமும் உவமை நயமும் மிகுந்தவை.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், இடைக்காடனார், கிள்ளிவளவனின் வலிமையையும் அவன் செங்கோல் செலுத்திப், புலி தன் குட்டிகளைக் காப்பதுபோல் மக்களைக் காப்பதையும், கடலை நோக்கி ஆறுகள் செல்வது போல் கிள்ளிவளவனை நோக்கிப் புலவர்கள் வருவதையும் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

ஆனா ஈகை அடுபோர் அண்ணல்நின்
யானையும் மலையின் தோன்றும்; பெருமநின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
5 அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,
புரைதீர்ந் தன்றுஅது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ! என்றுநின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது
10 புலிபுறங் காக்கும் குருளை போல
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
15 கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
20 நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.

அருஞ்சொற்பொருள்:
1. ஆனா = குறையாத; அண்ணல் = மன்னன், பெருமையிற் சிறந்தோன். 3. தானை = படை. 5. அரைசு = அரசன், அரசாட்சி; பனிக்கும் = நடுங்கச் செய்யும். 6. புரை = குற்றம், பழுது (குறை). 7. பூசல் = பெரிதொலித்தல். 9. முனை = போர்முனை. 10. குருளை = புலிக்குட்டி. 11. மெலிவு = தளர்ச்சி; புறங்காத்தல் = பாதுகாத்தல். 12. விறல் = சிறப்பு; யாணர் = புது வருவாய்; அரித்தல் = அறுத்தல். 13. மடை = வாய்க்கால்; வாகை = வாளை மீன். 15. அறைதல் = துண்டித்தல். 16. குற்ற = பறித்த; வன்புலம் = குறிஞ்சி, முல்லை; மென்புலம் = மருதம், நெய்தல். 17. அயர்தல் = செய்தல். 18. வைப்பு = இடம், ஊர். 22. கணிச்சி = கோடரி; வட்டித்தல் = சுழலுதல் (சுழற்றுதல்).

கொண்டு கூட்டு: பொருந, புலவரெல்லாம் நின் நோக்கினர்; நீ அரைசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; அதனால் இச் செய்தி புரை தீர்ந்தது; நினக்குப் புதுவதன்று ஆகலின் எனக் கூட்டுக.

உரை: குறையாது கொடுக்கும் ஈகையும் வெல்லும் போரும் உடைய தலைவனே! உன் யானை, மலை போலத் தோன்றும். பெருமானே! உன் படைகளோ கடல் போல் முழங்கும். உன்னுடைய கூர்மையான நுனியையுடைய வேல் மின்னலைப் போல ஒளியுடன் விளங்கும். நீ உலகத்து அரசர்களெல்லாம் நடுங்கச் செய்யும் ஆற்றல் உடையவன். ஆதலால், உன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது. இது உனக்குப் புதியது அல்ல. குளிர்ந்த நீரோட்டத்தினால் எழும் ஒலியைத் தவிர, உன் வீரர்கள் வருந்தி, “ எம் துயரத்தைக் களைக, வளவனே” என்று போர்முனையில் ஒலி எழுப்புவதை, நீ கனவிலும் கேட்டதில்லை. புலி தன் குட்டிகளைப் பாதுகாப்பதைப் போல் செங்கோல் செலுத்தி நீ உன் நாட்டு மக்களைக் காப்பாற்றுகின்றாய். உன் நாடு மிகச்சிறந்த புதுவருவாயை உடையது. அங்கு, கடைமடையில் நெல் அறுப்போர் பிடித்த வாளைமீன், உழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமை, கரும்பு அறுப்போர் கரும்பிலிருந்து எடுத்த இனிய கருப்பஞ் சாறு, பெரிய நீர்த்துறையிலிருந்து நீர் கொண்டுவரும் மகளிர் பறித்த குவளை மலர்கள் ஆகியவற்றை, மலை மற்றும் காடு போன்ற வலிய நிலங்களிலிருந்து வருபவர்களுக்கு விருந்தாக அளிக்கும் மருத வளம் மிகுந்த நல்ல நாட்டின் தலைவனே! மலைகளிலிருந்து வரும் ஆறுகளெல்லாம் பெரிய கடலை நோக்கிச் செல்வது போல புலவரெல்லாம் உன்னையே நோக்கி வருகின்றனர். நீ, ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுததைச் சுழற்றிச் சினந்து கொல்லும் கூற்றுவன் போன்ற வலிமையோடு மற்ற இரு வேந்தர்களின் நிலத்தை நோக்குகிறாய்.

சிறப்புக் குறிப்பு: இங்கு, மற்ற இரு வேந்தர்கள் என்பது சேர பாண்டிய மன்னர்களைக் குறிக்கும்.

41. காலனுக்கு மேலோன்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோபமூட்டியவர்கள், அவர்களின் நாடுகளில் நடைபெறும் தீய நிமித்தங்களையும், அவர்களின் கனவில் காணும் தீய நிகழ்ச்சிகளையும் நினைத்து அஞ்சுகின்றார்கள். அவர்கள் தம் அச்சத்தை தம் மகளிர்க்குத் தெரியாதவாறு மறைத்துக் கலங்குகின்றனர். சோழனின் பகைவர்களின் நிலையையும் சோழனின் வலிமையும், கொற்ற வள்ளைத் துறையில் அமைந்துள்ள இப்பாடலில் கோவூர் கிழார் குறிப்பிடுகிறார்.
திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.

காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
5 பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
10 வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
15 எவ்வம் கரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. காலன் = இயமன். 2. ஈண்டுதல் = செறிதல், நிறைதல்; விழுமியோர் = சிறந்தோர். 3. அடுதல் = வெல்லுதல், கொல்லுதல். 4. உற்கம் = விண்வீழ் கொள்ளி; உற்கவும் = எரிந்து விழவும். 6. கனலி = கதிரவன்; துற்றவும் = நெருங்கவும். 7. புள் = பறவை. 8. எயிறு = பல். 9. களிறு = ஆண் பன்றி, ஆண் யானை, விலங்கேற்றின் பொது; காழகம் = உடை. 12. செரு = போர்; முன்பு = வலிமை. 13. ஏமம் = பாதுகாவல். 15. எவ்வம் = துன்பம்; கரக்கும் = மறைக்கும்; பைதல் = துயரம். 17. செலவு = படையெடுப்பு. 18. சினைஇயோர் = சினம் கொள்ளச் செய்தோர்.

கொண்டு கூட்டு: வேந்தே, முன்ப, வளவ, நீ இத்தன்மையை ஆதலால், நிற்சினைஇயோர் நாடு பைதல் மாக்களோடு பெருங்கலக்குற்றது எனக் கூட்டுக.

உரை: ஓருயிரைக் கொள்வதற்கு ஏற்ற காலத்தில்தான் இயமனும் அவ்வுயிரைக் கொள்வான். ஆனால், நீ நேரம் பார்க்காமல், வேல்களோடு கூடிய பகைவர்களின் படையை நீ விரும்பிய நேரத்தில் அழிப்பாய். போர்களில் வெற்றி பெரும் வேந்தே! . காற்றொடு தீ கலந்தாற்போல் படையெடுக்கும் வலிமை மிகுந்த சோழனே! உன்னைச் சினமூட்டியவர்களின் நாட்டில், எட்டுத் திசைகளிலும் வானத்திலிருந்து எரிகொள்ளிகள் எரிந்து விழுகின்றன; பெரிய மரத்தில் இலையில்லாத நெடிய கிளைகள் பட்டுப்போகின்றன. கதிரவனின் கதிர்கள் சுட்டு எரிக்கின்றன; மற்றும், அச்சம் தரும் பறவைகள் ஒலிக்கின்றன. இவையெல்லாம், உன்னைச் சினமூட்டும் பகைவர்களின் நாடுகளில் உண்மையாகவே நடைபெறும் நிகழ்ச்சிகள். இவை மட்டுமல்லாமல், அங்குள்ளவர்கள் பல கெட்ட கனவுகளும் காண்கின்றனர். பற்கள் நிலத்தில் விழுவது போலவும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போலவும், பெண்பன்றி ஆண்பன்றி மேல் ஏறுவது போலவும், தங்கள் ஆடைகள் கழன்று கீழே விழுவது போலவும், ஓளி திகழும் படைக்கலங்கள் தாமிருந்த கட்டிலினின்று கவிழ்ந்து விழுவது போலவும் கனவுகள் காண்கின்றனர். இதுபோல் நனவிலும் கனவிலும் காணத் தகாத நிகழ்ச்சிகளை உன் பகைவர்கள் காணுமாறு போர் செய்யும் வலியவனே! நீ படையெடுத்து வருவதைக் கண்டு, கலங்கிய பாதுகாவல் இல்லாத உன் பகைவர்கள், தம் குழந்தைகளின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு, தம் மனைவியரிடம் தம் துயரம் தெரியாதவாறு மறைத்துத் துன்பத்தோடு உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைக் கூறி, அவன் பகைவர்களை அழிக்கும் ஆற்றலைப் பற்றியும் கூறுவதால் இப்பாடல் கொற்ற வள்ளை என்ற துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

Wednesday, February 9, 2011

40. ஒரு பிடியும் எழு களிரும்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 38-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருமுறை, ஆவூர் மூலங்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் காணச் சென்றார். அவனைக் காண்பது அரிதாய் இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, அவனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இப்பாடலில், “இன்று உன்னைக் காண்பது எளிதாய் இருந்தது. அதுபோல், நீ என்றும் காட்சிக்கு எளியவனாகவும், இன்சொல் கூறுபவனாகவும் இருப்பாயாக.” என்று அறிவுரை கூறுகிறார். மற்றும், அவன் வெற்றிகளையும், அவன் நாட்டின் வளத்தையும் இப்பாடலில் நயம்படப் புகழ்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.


நீயே, பிறர்ஓம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டுஅவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழல்தைஇய
5 வல்லாளனை வயவேந்தே!
யாமேநின், இகழ்பாடுவோர் எருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற
இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல்எண் பதத்தை ஆகுமதி; பெரும!
10 ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1. ஓம்பல் = பாதுகாத்தல்; எயில் = அரண். 2. கடந்து = எதிர் நின்று; அட்டு = அழித்து. 4. தைஇய = இழைத்த. 5. வயம் = வெற்றி. 6. எருத்து = கழுத்து. 7. பொலித்தல் = சிறத்தல். 10. பிடி = பெண் யானை.

கொண்டு கூட்டு: நாடுகிழ வோயே! இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; அதனால், நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப், புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற, யாம் இன்று கண்டாங்கு என்றும் காண்குவம் எனக் கூட்டுக.


உரை: பகைவர்கள் பாதுகாத்த அரண்களை ஒருபொருட்டாக மதியாது, அவற்றை அழித்து, பகைவர்களின் முடியில் சூடிய பொன்னாலாகிய மகுடங்களை உருக்கி உன் கால்களில் வீரக் கழலாக அணிந்த வலிய ஆண்மையுடைய வேந்தே! ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! தலைவா! நீ இன்சொல் உடையவனாகவும் காட்சிக்கு எளியவனாகவும் இருப்பாயாக. உன்னை இகழ்ந்து பாடுவோர் தலைகுனியவும், உன்னைப் புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் தலை நிமிர்ந்து விளங்கவும், இன்று கண்டதுபோல் என்றும் காண்போமாக.

39. புகழினும் சிறந்த சிறப்பு!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 37-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவனின் முன்னோர்கள் ஈகையையும் பகைவர்களை வெற்றிகொள்வதையும் தங்கள் மரபாகக் கொண்டவர்கள். ஆகையால், கிள்ளிவளவனின் ஈகைச் சிறப்பும் வெற்றிகளும் அவனுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பு அல்ல. அவன் தலைநகராகிய உறையூரில் எப்பொழுதும் முறையாக ஆட்சி நடைபெறுவதால் அதுவும் புகழ்தற்குரிய புதிய செயல் அல்ல. ஆனால், அண்மையில் அவன் சேரனின் வஞ்சி நகரத்தை வென்றான். அது மிகப் பெரிய வெற்றி. அதை எப்படிப் புகழ்ந்து பாடுவது என்று தெரியாமால் மாறோக்கத்து நப்பசலையார் திகைப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
5 ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
10 முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ!
யாங்கனம் மொழிகோ யானே? ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
15 இமையம் சூட்டிய ஏம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே.

அருஞ்சொற்பொருள்:
1. சொல்லிய = “களைய”; கறை = உரல், கருங்காலி. 2. வால் = வெண்மை; மருப்பு = கொம்பு; எறித்தல் = இட்டமைத்தல். 3. கோல் = துலாக்கோல்; நிறை = நிறுத்தல் அளவு; மருகன் = வழித்தோன்றல். 4. சார்தல் = சென்றடைதல் (நெருங்குதல்). 5. ஒன்னார் = பகைவர்; உட்குதல் = அஞ்சுதல்; துன்னுதல் = அணுகுதல். 6. தூங்கெயில் = ஆகாயக்கோட்டை; எறிந்த = அழித்த; ஊங்கணோர் = முன்னுள்ளோர். 7. அடுதல் = வெல்லுதல். 8. உறந்தை = உறையூர். 11. எழு = எழுந்த; சமம் = போர்; எழு = கணைய மரம்; திணி = செறிந்த. 12. கலிமான் = குதிரை. 14. பொன் = ஒளி; கோடு = சிகரம். 15. ஏமம் = காவல். 16. மாண் = சிறந்த; வினை = செயல் (வேலைப்பாடு); வானவன் = சேரன்; தொலைய = அழிய. 17. வாட்டுதல் = வருத்துதல், கெடுத்தல், அழித்தல். 18. பீடு = பெருமை; தாள் = முயற்சி, கால்.

கொண்டு கூட்டு: நிறை துலாஅம் புக்கோன் மருக, நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழும் அன்று; தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின் புகழும் அன்று; உறந்தை அவையத்து அறம்நின்று நிலையிற்றாதலின்,முறைமை நின் புகழும் அன்று; கலிமான் வளவ, நின் தாள் பாடுங்கால் யான் யாங்கனம் மொழிகோ எனக் கூட்டுக.

உரை: புறாவின் துன்பத்தைக் களைய வேண்டி, உரல் போன்ற பாதங்களையுடைய யானையின் வெண்ணிறமான தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட துலாக்கோலில் புகுந்து தன்னையே அளித்த செம்பியனின் வழித்தோன்றலே! அத்தகைய மரபில் வந்தவனாதலால், ஈதல் உனக்குப் புகழ் தருவது அன்று. பகைவர்கள் நெருங்குவதற்கு அஞ்சும், வான்தவழும் கோட்டைகளை அழித்த உன் முன்னோர்களை நினைத்துப் பார்த்தால், பகைவர்களை அழித்தல் உன் மரபினோருக்கு இயல்பான செயல். ஆதலால், அதுவும் உனக்கும் புகழ் தருவது அன்று. கேடின்றி, வீரம் பொருந்திய சோழனது உறையூரில் உள்ள அரசவையில் அறம் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளது. ஆகவே, முறைசெய்து நல்லாட்சி புரிவதும் உனக்குப் புகழ் தருவது அன்று. வீரம் மிகுந்து, எழுந்த போரை வென்ற, கணையமரம் போன்ற வலிய தோள்களையும், கண்ணைக் கவரும் மாலைகளையும், விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய சோழ மன்னனே! உயரத்தை அளந்து அறிய முடியாத, பொன்போன்ற ஓளியுடன் மிளிறும் நெடிய சிகரங்களையுடைய இமயத்தில் தன் காவற் சின்னமாகிய வில்லைப் பொறித்தவனும், சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்களையுடயவனுமாகிய சேரன் அழியுமாறு அவனுடைய வஞ்சி நகரத்தை அழித்த உன் பெருமைக்குரிய முயற்சியை நான் எப்படிப் பாடுவேன்?

38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார் (38, 40, 166, 177, 178, 196, 261, 301). இவர் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருசமயம் ஆவூர் மூலங்கிழார் கிள்ளிவளவனைக் காண வந்தார். கிள்ளிவளவன், “நீர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? நீர் எம்மைக் நினைப்பதுண்டோ?” என்று கேட்டான். அதற்கு, ஆவூர் மூலங்கிழார், “ நீ நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவன். நாங்கள் உன்னிழலில் பிறந்து உன்னிழலில் வளர்ந்தவர்கள்; நாங்கள் உன்னை நினைக்கும் அளவைச் சொல்லவும் முடியுமோ? என்று கூறி அவனை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

வரைபுரையும் மழகளிற்றின்மிசை
வான்துடைக்கும் வகையபோல
விரவுஉருவின கொடிநுடங்கும்
வியன்தானை விறல்வேந்தே!
5 நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ
நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்திங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
10 நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த
எம்அளவு எவனோ மற்றே? இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
15 கடவ தன்மையின் கையறவு உடைத்துஎன
ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின்நாடு உள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தெனவே.

அருஞ்சொற்பொருள்:
1. வரை = மலை, மலையுச்சி; புரைய = ஒரு உவமைச் சொல்; புரைதல் = ஒத்தல்; மழம் = இளமை. 3. விரவு = கலப்பு; உருவு = வடிவம், உருவம்; நுடங்கும் = அசையும், ஆடும். 4. வியன் = பரந்த; விறல் = வெற்றி. 5. உடன்று = வெகுண்டு. 6. நயத்தல் = அன்பு செய்தல். 11. மற்று – அசைச் சொல். 15. கடவது = செய்ய வேண்டியது; கையறுதல் = செயலறுதல். 16. நுகர்ச்சி = அனுபவம்.

கொண்டு கூட்டு: நீ வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின், விண்ணுலகத்து நுகர்ச்சி ஈண்டும் கூடலின், ஒன்னார் தேயத்திருந்தும் பரிசிலர் நின்னாடு நின்னை உடைத் தென்று நின்னாட்டை உள்ளுவர்; ஆதலான், நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ எனக் கூட்டுக.

உரை: மலைபோன்ற இளம் யானைகளின்மேல், ஆகாயத்தைத் தடவுவதுபோல் பல நிறங்கள் கலந்த கொடிகள் அசைந்து ஆடுகின்றன. பெரிய படையையுடைய வெற்றி பொருந்திய வேந்தே! நீ சினந்து பார்த்தால் தீ பரவும்; அன்புடன் பார்த்தால் பொன் விளங்கும்; ஞாயிற்றில் நிலவை விரும்பினாலும், திங்களில் வெயிலை விரும்பினாலும் வேண்டியதை விளைவிக்கும் ஆற்றல் உடையவன். இனிய நிலையையுடைய, பொன்னாலான பூக்கள் நிறைந்த சோலைகள் உள்ள நல்ல நாடாகிய விண்ணுலகத்தில் உள்ளோர், தாம் செய்த நல்வினைக்கேற்ப இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, அங்கே செல்வமுடையோர் இல்லாதோர்க்கு வழங்குவதும், வறியவர்கள் செல்வமுடையவர்களிடத்துச் சென்று இரத்தலும் செய்யக்கூடிய செயல்கள் அல்ல. விண்ணுலகில் அனுபவிக்கக் கூடிய இன்பம் மட்டுமல்லாமல் ஈகையினால் வரும் இன்பத்தையும் உன் நாட்டில் அனுபவிக்க முடியும் என்று கருதி, உன் பகைவர்களின் நாட்டில் இருந்தாலும் உன்னாடு உன்னை உடையதால் பரிசிலர் உன் நாட்டையே நினைப்பர். ஆதலால், உன் நிழலில் பிறந்து உன் நிழலில் வளர்ந்த எம் நினைவின் அளவைக் கூறவும் முடியுமோ?

37. புறவும் போரும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார் (37, 39, 126, 174, 226, 280, 383). இவர் ஒருபெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த கொற்கையின் அருகாமையில் உள்ள மாறோக்கம் என்ற ஊரைச் சார்ந்தவர். பெண்கள் அடையும் பசலை நோயைப்பற்றி நயமுறப் பாடியதால் இவர் நப்பசலையார் என்று அழைக்கப்பட்டார் என்று கருதப்படுகிறது. நப்பசலையார் என்பது இவர் இயற்பெயர் என்றும் சிலர் கூறுவர்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன், நல்ல அரண்களுள்ள ஊரில் பகைமன்னன் இருப்பதை அறிந்தும் அந்நகரை அஞ்சாது அழிக்கும் ஆற்றல் உடையவன் என்று அவனுடைய வலிமையையும், வீரத்தையும் மாறோக்கத்து நப்பசலையார் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரச வாகை; முதல் வஞ்சியும் ஆகும்.
அரச வாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
முதல் வஞ்சி: பழம்புகழ் வாய்ந்த முன்னோர் சிறப்புக் கூறுதல்.

நஞ்சுடை வால்எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
5 புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
10 கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!

அருஞ்சொற்பொருள்:
1. வால் = வெண்மை; எயிறு = பல்; ஐ = அழகு. 2. வெம்பல் = சினத்தல்; திறல் = வெற்றி, வலி; புக்கல் = புகுதல்; என = என்று. 3. விசும்பு = ஆகாயம்; திருகி = முறுகி; முறுகல் = வேகங் கொள்ளுதல். 4. விடர் = மலைப்பிளப்பு, குகை; உரும் = இடி. 5.புள் = பறவை; புன்கண் = துன்பம். 6. செம்பியன் = சோழன்; மருகன் = வழித்தோன்றல். 7. கராம் = ஆண் முதலை, முதலையுள் ஒரு வகை; கலித்த = தழைத்த (நிறைந்த); குண்டு = ஆழம். 8. குட்டம் = ஆழம், மடு. 9. யாமம் = நள்ளிரவு; கதூஉம் = கவ்வும், பற்றும். 10. கடு = விரைவு; முரண் = வலிமை; நெடு = மிகுதி; இலஞ்சி = நீர்நிலை, மடு. 11. உறழ்வு = செறிவு; புரிசை = மதில்; செம்மல் = தலைமை; மூதூர் = பழைமையான ஊர். 12. வம்பு = கச்சு (முகபடாம்). 13. சிதைத்தல் = அழித்தல். 14. நெடுந்தகை = பெரியோன்; செரு = போர்.

கொண்டு கூட்டு: செம்பியன் மருக! நெடுந்தகை! விடரகத்து நாகம் புக்கென உரும்எறிந் தாங்கு, மூதூரகத்து வேந்துண்மையின் செருவத்துச் சிதைத்தல் வல்லை எனக் கூட்டுக.

உரை: புறாவிற்கு வந்த துன்பத்தைத் தீர்த்த, ஓளி பொருந்திய வேலையுடைய, சினங்கொண்ட படையையுடைய செம்பியன் வழித்தோன்றலே! நஞ்சுடைய வெண்ணிறமான பற்களும், அழகிய தலையும், வலிமையும், சினமுமுடைய பாம்பு ஒன்று மலையிலிருந்த குகையில் புகுந்தது. அச்சமயம், வானமே தீப்பிடித்ததுபோல், வேகத்துடன், பசுமையான கொடிகள் நிறைந்த அந்த மலைக்குகையின் மேல் இடிவிழுந்து அந்த நாகத்தை அழித்தது. அதுபோல், முதலைகள் நிரம்பிய ஆழமான அகழியின் இருண்ட இடங்களில், அங்கிருந்த முதலைகள் ஒன்றாகக் கூடி, நள்ளிரவில் காவல் புரிவோரின் நிழலைக் கவ்வும் அந்த அகழிக்கு அருகே உள்ள செம்பால் புனையப்பட்ட மதிலையுடைய, தலைமை பொருந்திய பழைய ஊரில் கச்சு அணிந்த யானைகளுடைய இடத்தில் அரசன் உள்ளான் என்ற காரணத்தால், அவ்விடத்தில் உள்ளவை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது, நீ அவற்றைப் போரில் அழிக்கும் ஆற்றல் உடையவன்.

சிறப்புக் குறிப்பு: அரசனது இயல்பை எடுத்துரைப்பதால் இப்பாடல் ”அரச வாகை” என்ற துறையைச் சார்ந்தது. மற்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோர்களில் ஒருவனாகிய செம்பியனின் சிறப்பைக் கூறுவதால், இப்பாடல் ”முதல் வஞ்சி” என்ற துறையையும் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், பாம்பு குகைக்குள் இருப்பது பகை மன்னன் அரண்மனைக்குள் இருப்பதற்கும், இடியினால் பாம்பு அழிக்கப்படுவது கிள்ளிவளவனால் பகைமன்னன் அழிக்கப்படுவதற்கும் உவமையாகும்.

ஒரு பருந்தால் துரத்தப்பட்ட புறா ஒன்று செம்பியன் என்று அழைக்கப்பட்ட சிபி என்ற சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தது. அப்புறாவுக்குப் பதிலாக, அதன் எடைக்கு எடை ஈடாகத் தன் தசையை அளிப்பதாகவும் அந்தப் புறாவை இன்னலுக்குள்ளாக்க வேண்டாம் என்றும் அந்தப் பருந்தை சிபி வேண்டிக்கொண்டான். அந்தப் பருந்து அதற்கு சம்மதித்தது. புறாவைத் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு எதிராக சிபி தன் உடலிலிருந்து தன் தசையை வெட்டிவைத்தான். சிபி, தன் தசைகளை எவ்வளவு வெட்டிவைத்தாலும் புறாவின் எடைக்கு சமனாகவில்லை. கடைசியாக, சிபி, தானே அந்தத் தராசில் புகுந்தான். பின்னர், அந்தப் புறாவும் அதைத் துரத்தி வந்த பருந்தும் தாங்கள் தேவர்கள் என்பதையும் அவர்கள் சிபியைச் சோதிப்பதற்காக அவ்வறு வந்ததாகவும் கூறினர். இது ஒரு கதை. இந்தக் கதை தமிழ் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வந்திருக்கிறது. மாறோக்கத்து நப்பசலையார் புறநானூற்றுப் பாடல் 39-இல், “ புறவின் அல்லல் சொல்லிய” என்று மீண்டும் இந்தக் கதையை நினைவு கூர்கிறார். புலவர் தாமப்பல் கண்ணனார், பாடல் 43-இல், “தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக” என்று சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானுக்கு அவனுடைய முன்னோர்களின் ஒருவனான சிபி, புறாவைக் காப்பாற்றியதை நினைவுபடுத்துகிறார். புறநானூற்றுப் பாடல் 46 –இல் கோவூர் கிழார் “புறாவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!” என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் கூறுவதையும் காண்க. மற்றும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சென்று வழக்குரைத்த போது, இப்பாடலில் உள்ள “புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” என்ற சொற்றடரை இளங்கோவடிகள் பயன்படுத்தியிருப்பதையும் காண்க.

36. நீயே அறிந்து செய்க!

பாடியவர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்டான். அங்கே, தன் அரண்மனையில் இருந்த சேர மன்னன், சோழன் முற்றுகையிட்டதையும், சோழனின் வீரர்கள் தன்நாட்டில் உள்ள காவல் மரங்களை வெட்டுவதையும் பொருட்படுத்தாமல் தன் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அதைக் கண்ட புலவர் ஆலத்தூர் கிழார், “போருக்கு வராமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடக்கும் சேரனோடு போர் புரிவது உன்னைப் போன்ற வீரனுக்கு நாணத்தக்க செயலாகும்” என்று கிள்ளிவளவனிடம் கூறிப் போரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வதை இப்பாடலில் காணலாம்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீஅளந் தறிதிநின் புரைமை வார்கோல்
செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
5 தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
10 நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. அடுநை = அழிப்பாய்; விடுநை = அழிக்காமல் விடுவாய். 2. புரைமை = உயர்ச்சி (பெருமை); வார் = நுண்மை. 3. செறி = செறிந்த; அரி = சிலம்புப் பரல். 4. கழங்கு = கழற்சிக்காய். தெற்றி = மேட்டிடம். 6. கருமை = வலிமை. 7. நவியம் = கோடரி. 8. வீ = பூ; சினை = மரக்கொம்பு; புலம்பு = தனிமை; காவு = காடு. 9. கடி = காவல்; தடிதல் = வெட்டல். 10. வரை = எல்லை; இயம்பல் = ஒலித்தல். 12. சிலை = வில்; தார் = மாலை; கறங்கல் = ஒலித்தல். 13. மலைத்தல் = பொருதல்; தகவு = தகுதி.

கொண்டு கூட்டு: கடிமரம் தடியும் ஓசை தன் மனை இயம்ப இனிதிருந்த வேந்தனொடு மலைத்தனை எண்பது நாணுத்தகவுடைத்து; அதனால், அடுநையாயினும் விடுநையாயினும், நின் புரைமை நீ அளந்து அறிதி எனக் கூட்டுக.

உரை: பரல்கள் செறிந்த சிலம்பையும், சித்திரவேலைப்பாடுகள் அமைந்த சிறிய வளையல்கலையும் அணிந்த மகளிர், பொன்னால் செய்யபட்ட கழற்காய்களை வைத்து ஆன் பொருநை ஆற்றங்கரையில், திண்ணைபோல் உயர்ந்த மணல்மேடுகளில் இருந்து விளையாடி வெண்ணிறமான ஆற்று மணலைச் சிதைக்கிறார்கள். வலிய கைகளையுடைய கொல்லன், அரத்தால் கூர்மையாகச் செய்த, நெடிய காம்புடன் கூடிய கோடரியால் காவல் மரங்களை வெட்டுவதால், நின்ற நிலையிலிருந்து கலங்கிய பூமணம் கமழும் அந்த மரங்களின் நெடிய கிளைகள் துண்டாகுகின்றன. காடுகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தன் ஊரில் உள்ள நெடிய மதில்களை அரணாகக்கொண்ட அரண்மனையில் ஒலிக்க, அங்கே, அதைப்பற்றிக் கவலையின்றி சேரன் இனிதே இருக்கிறான். வானவில் போன்ற வண்ணங்கள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முரசு ஒலிக்க, அவனுடன் இங்கே போர்செய்வது வெட்கப்பட வேண்டிய செயல். ஆகவே, உன் பகைவனாகிய சேரனை, நீ கொன்றாலும், கொல்லாவிட்டாலும் உன் செயலால் உனக்கு வரும் பெருமையை நீயே ஆராய்ந்து அறிந்து கொள்.

சிறப்புக் குறிப்பு: பிறரை வெற்றி கொள்ள நிற்பவனை சமாதானப்படுத்தும் பாடல்கள் துணைவஞ்சி என்ற துறையில் அடங்கும். சேரனை வெல்ல நினைத்து அவனுடன் போர் புரியவிருக்கும் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறிப் போரை நிறுத்துமாறு ஆலத்தூர் கிழார் இப்பாடலில் கூறுவதால், இப்பாடல் துணை வஞ்சி என்ற துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், அரண்மனைக்கு அருகில் உள்ள காவல் மரங்களை வெட்டும் இடத்தில், சிறுமிகள் அச்சமின்றி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சேரன் அரண்மனையை விட்டு வெளிய வந்து போர் புரியவில்லை என்பது, அவன் வீரமற்றவன் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டிருக்கிறது.