பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (13, 127 - 135, 241, 374, 375).
இவர் இயற்பெயர் மோசி. இவர் முடவராக இருந்ததால் முடமோசியார் என்று அழைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் உறையூரின் ஒரு பகுதியாக இருந்த ஏணிச்சேரி என்னும் ஊரைச் சார்ந்தவர். புறநானூற்றில் இவர் பதின்மூன்று பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் பன்னிரண்டு பாடல்கள் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் புகழந்து பாடப்பட்டவையாகும்.
பாடப்பட்டோன்: சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (13). இவன் இயற்பெயர் பெருநற்கிள்ளி. முடிசூடுவதற்குரிய இளவரசனாகையால் “முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி” என்று அழைக்கப்பட்டான். இவன் காலத்தில், சேர நாட்டை ஆண்டவன் சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை.
பாடலின் பின்னணி: சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கும் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளிக்கும் இடையே இருந்த பகையின் காரணத்தால் கோப்பெருநற்கிள்ளி வஞ்சியை முற்றுகையிட்டான். அச்சமயம், ஒருநாள், அந்துவஞ்சேரல் இரும்பொறை தன் அரண்மனையிலிருந்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியாருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, ஒருவன் மதம் பிடித்த யானை மீது ஏறி வருவதையும், அந்த யானையைச் சூழ்ந்திருந்த பாகர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாத காட்சியையும் கண்டான். அந்தக் காட்சியைக் கண்ட சேரன், முடமோசியாரை நோக்கி, “அங்கு வருபவன் யார்?” என்று கேட்டான். அதற்கு, முடமோசியார், “அவன், நீர் வளமும் நில வளமும் நிறைந்த சோழ நாட்டின் மன்னன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி. அவனை இன்னலின்றித் திரும்பிச் செல்ல விடுக” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்
இவன்யார் என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
5 களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
10 பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.
அருஞ்சொற்பொருள்:
2. நிறம் = தோல்; கவசம் = போர் வீரன் அணியும் இரும்புச் சட்டை; பூம்பொறி = அழகிய தோலின் இணைப்பு; சிதைத்தல் = அழித்தல். 3. பகடு = வலிமை; எழில் = அழகு. 4. மறலி = எமன்; மிசை = மேலே. 5. முந்நீர் = கடல்; வழங்குதல் = செல்லுதல்; நாவாய் = மரக்கலம். 6. நாப்பண் = நடு (இடையே). 7. சுறவு = சுறா மீன்; மொய்த்தல் = சூழ்தல். 8. மரியவர் = பின்பற்றி நடப்பவர் (பாகர்); மைந்து = பித்து (மதம்). 9. பெயர்தல் = திரும்புதல்; தில் - விழைவை உணர்த்தும் அசைச்சொல் 10. பழனம் = வயல்; மஞ்ஞை = மயில்; பீலி = மயிலிறகு. 11. சூடு = நெற்கதிற். 12. கொழுமீன் = ஒருவகை மீன், கொழுத்த மீன். விளைந்த = முதிர்ந்த. 13. விழு = சிறந்த (மிகுந்த); கிழவோன் = உரிமையுடையவன்.
கொண்டு கூட்டு: களிற்று மிசையோனாகிய இவன், யாரென்குவையாயின், நாடு கிழவோன்; இவன் களிறு மதம் பட்டது; இவன் நோயின்றிப் பெயர்க எனக் கூட்டுக.
உரை: ”இவன் யார்” என்று கேட்கிறாயா? இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யனைமீது வருகிறான். அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும், பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது. அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர். அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது. இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள். இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும், நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன். இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக.
No comments:
Post a Comment