Wednesday, December 29, 2010

23. நண்ணார் நாணுவர்!

பாடியவர்: கல்லாடனார் (23, 25, 371, 385, 391). இவர் கல்லாடம் என்ற ஊரினராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ”கல்லாடத்துக் கலந்து இனிது அருள்” என்ற மாணிக்கவாசகர் வாக்கால், கல்லாடம் என்பது ஒருசிவத்தலம் என்று அறியப்படுகிறது. ஆனால், ”கல்லாடம் இப்பொழுது எப்படி அழைக்கப்படுகிறது? அது எங்கே உள்ளது?” போன்ற வினாக்களுக்கு விடை தெரியவில்லை. இவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அம்பர் கிழான் அருவந்தை, பொறையாற்று கிழான் ஆகியோரைப் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் ஐந்து செய்யுட்கள் இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் ஏழு செய்யுட்களையும் (9, 83, 113, 171, 198, 209, 333) குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களையும் (260, 269) இயற்றியுள்ளார். இவர் பாடல்களில் பல வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 18-இல் காண்க.

பாடலின் பின்னணி: ”பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் யானைகள் பகைவர்களின் நீர்த்துறைகளைக் கலக்கின. அவன் படைவீரர்கள் பகைவர்களின் உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு மிஞ்சியிருப்பவற்றை நிலத்தில் வீசி எறிந்தனர்; பகைவர்களின் ஊர்களின் பல பக்கங்களிலும் தீ மூட்டினர். நெடுஞ்செழியனும் அவன் படைவீரர்களும் இத்தகைய கொடிய செயல்களைத் தொடர்ந்து செய்வார்களோ” என்று பகைவர்கள் அஞ்சுவதாகவும், தான் கடத்தற்கரிய காட்டு வழியாக அவனைப் பார்க்க வந்ததாகவும் இப்பாடலில் கல்லாடனார் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
அரசவாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
நல்லிசை வஞ்சி: பகைவரது இடங்கள் கெடுமாறு வென்ற வீரனின் வெற்றியைப் பற்றிக் கூறுதல்.

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்து அன்னநின்
5 கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்
10 வினைபுனை நல்லில் வெவ்வெரி இனைப்பக்
கனைஎரி உரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோன்என
15 ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்பநின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
20 பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே.

அருஞ்சொற்பொருள்:
1.வெளிறு = வெண்ணிறம்; நோன்மை = வலிமை; காழ் = வயிரம் (உறுதி); காழ்த்தல் = முற்றுதல்; பணை = விலங்கின் படுக்கை, கூடம்; நிலை = நிற்றல்; முனை = வெறுப்பு. 3. கார் = கார்காலம்; நறுமை = நன்மை. 4. நவைதல் = கொல்லுதல். 5. கொடு = வளைந்த; கூளியர் = படைவீரர்; கூளி = உறவு, வலிமை. 6. மிச்சில் = எஞ்சியது. 7. பதம் = உணவு. 8. வடித்தல் = கூராக்குதல்; நவிலுதல் = பழகுதல், கற்றல்; நவியம் = கோடரி. 9. துளங்கல் = கலங்கல் (நிலை கலங்கல்); கா = சோலை (காடு). 10. இனைப்ப = கெடுப்ப. 11. கனை = மிகுதி; உரறுதல் = முழங்குதல்; மருங்கு = பக்கம். 12. நண்ணார் = பகைவர், தலை = இடம். 14. துன்னுதல் = நெருங்குதல்; நெளிதல் = சுருளுதல்; வியன் = மிகுதி (பெரிய). 16. அட்ட = அழித்த (கொன்ற). 17. காலன் = இயமன்; முன்பு = வலிமை. 18. அறுதல் = இல்லாமற் போதல்; மருப்பு = கொம்பு. எழில் = உயர்ச்சி (பெரிய); கலை = ஆண்மான், பால் = இடம். 19. மறி = மான் குட்டி; தெறித்தல் = பாய்தல் (துள்ளல்); மடம் = மென்மை; பிணை = பெண்மான். 20. பூளை = ஒரு செடி; பறந்தலை = பாழிடம். 21. வேளை = ஒரு பூண்டு; கறித்தல் = கடித்துத் தின்னுதல். 22. அத்தம் = பாலை நிலம், வழி.

கொண்டு கூட்டு: கால முன்ப, துறையும் புலனும் காவும் மருங்கும் நோக்கி, இன்னும் இன்ன பல செய்குவன் துணிவினோன் என உட்கொண்டு, கண்டனன் வருவல் அத்தம் ஆகிய காடே எனக் கூட்டுக.

உரை: வலிய, முற்றிய மரத்தூண்களால் கட்டப்பட்ட கூடத்தில் இருப்பதை வெறுத்து, வெளியேறிய யானைகள் நீரை உண்டதால் நீர்த்துறைகள் கலங்கி உள்ளன. கார்காலத்தில், மணமுள்ள கடம்பமரத்தின் பசுமையான இலைகளுடன் கூடிய மாலைகளை அணிந்து, சூரபன்மனைக் கொன்ற முருகனின் படைவீரர்களைப் போன்ற உன் வீரர்கள் கூரிய நல்ல அம்புகளையும், வளைந்த வில்லையும் உடையவர்களாக உள்ளனர். அவர்கள் தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு மிச்சமிருப்பதைப் பகைவர்கள் உணவுப் பொருளாகப் பயன்படுத்த முடியாதவாறு நிலத்தில் சிதறினார்கள். உன் வீரர்கள் கூர்மையான கோடரியைக்கொண்டு காவல் மரங்களை வெட்டியதால் காவற் காடுகள் நிலைகுலைந்தன. பெரிய நகரத்தில் அழகிய வேலைப்படுகளுடன் செய்யப்பட்ட நல்ல வீடுகளில் சமைப்பதற்காக மூட்டிய தீயை அவிக்கும் வகையில் பெரிய தீயைப் பல பக்கங்களிலும் உன் வீரர்கள் மூட்டியதைப் பார்த்த உன் பகைவர்கள் நாணுகிறார்கள். நீ, நாள்தோறும் தம்மிடம் வந்து இன்னும் இது போன்ற செயல்களைச் செய்வாயோ என்று எண்ணுகிறார்கள்; யாவரும் அணுகமுடியாத துணிவுடையவன் என்றும் எண்ணுகிறார்கள். நீ, பூமியால் சுமக்க முடியாத அளவுக்குப் பெரிய படையை உடையவன்; தலையாலங்கானத்தில் பகைவரை இயமன்போல் எதிர்நின்று அழித்தவன். நீ மிகுந்த வலிமையுடையவன். தன் கொம்புகளை இழந்த பெரிய ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதால், அதன் துணையாகிய மெல்லிய பெண்மான் தன் சிறிய குட்டியை அணைத்துக்கொண்டு துள்ளிய நடையுடன், பூளைச்செடி வளர்ந்த அஞ்சத்தக்கப் பாழிடத்தில் வேளையின் வெண்ணிறப் பூக்களைத் தின்னும் ஆள் நடமாட்டம் இல்லாத, கடத்தற்கரிய காட்டு வழியாக உன்னைக் காணவந்தேன்.

சிறப்புக் குறிப்பு: கல்லாடனார் தான் காட்டு வழியாக வந்த பொழுது ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதையும் அம்மானின் துணையாகிய பெண்மான் தன் குட்டியுடன் அச்சத்தோடும் உண்ணுவதற்கு நல்ல உணவில்லாமல் வருந்ததத் தக்க நிலையில் இருப்பதைக் கண்டதாகவும் இப்பாடலில் கூறுகிறார். அவர் கூறுவது, படைவீரர்கள் இறந்த பிறகு அவர்களின் மனைவியரும் குழந்தைகளும் படும் துன்பத்தை மறைமுகமாகப் பாண்டியனுக்குச் சுட்டிக்காட்டுவதாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment