Wednesday, December 29, 2010

24. வல்லுநர் வாழ்ந்தோர்!

பாடியவர்: மாங்குடி கிழார் (24, 26, 313, 335, 372, 396). இவர் மாங்குடி மருதனார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் ஆறு பாடல்கள் இயற்றியதோடு மட்டுமல்லாமல், பத்துப்பாட்டில், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்ட மதுரைக் காஞ்சியையும், குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (164, 302), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (120, 123) இயற்றியுள்ளார். “நான் தலையாலங்கானத்துப் போரில் தோல்வியுற்றால், மாங்குடி மருதன் போன்ற புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக” என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடல் 72-இல் கூறுவதிலிருந்து, அவன் இவரால் பாடப்படுவதை மிகவும் பெருமையாகக் கருதினான் என்பது தெரியவருகிறது.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 18-இல் காண்க.

பாடலின் பின்னணி: எவ்வி என்பவனுக்குரிய மிழலைக் கூற்றத்தையும், முதுவேளிர்க்குரிய முத்தூற்றுக் கூற்றத்தையும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்றான். அவ்வெற்றிக்குப் பிறகு, அவன் மேலும் போரில் ஈடுபடாமல், மகளிரோடு மகிச்சியோடு வாழுமாறு இப்பாடலில் மாங்குடி மருதனார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

நெல்அரியும் இருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயில்முனையின்
தெண்கடல்திரை மிசைப்பாயுந்து,
திண்திமில் வன்பரதவர்
5 வெப்புடைய மட்டுண்டு,
தண்குரவைச் சீர்தூங்குந்து,
தூவற்கலித்த தேம்பாய்புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து,
10 வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஓங்குமணற் குவவுத்தாழைத்
15 தீநீரோடு உடன்விராஅய்
முந்நீர்உண்டு முந்நீர்ப்பாயும்
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி,
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
20 கயலார் நாரை போர்வில் சேக்கும்,
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர்நின் நாண்மீன்; நில்லாது
25 படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே;
நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
30 இரவன் மாக்கள் ஈகை நுவல,
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
35 மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1.அரித்தல் = அறுத்தல் (அறுவடை செய்தல்); இரு = பெரிய; தொழுவர் = மருதநில மக்கள் (உழவர்). 4. திண் = வலி; திமில் = மரக்கலம், தோணி; பரதவர் = நெய்தல் நில மக்கள் (மீனவர்). 5. மட்டு = கள்; தண்மை = மென்மை; குரவை = கூத்து. 6. சீர் = தாளவொத்து; தூங்கல் = ஆடல்; உந்துதல் = பொருந்துதல். 7. தூவல் = நீர்த்துளி; கலித்தல் = தழைத்தல்; பாய = பரப்பிய. 8. இணர் = கொத்து; மிலைதல் = சூடுதல்; மைந்தர் = ஆடவர். 9. எல் = ஒளி; தலைக்கை தருதல் = கையால் தழுவி அன்பு காட்டுதல். 10. கானல் = கடற்கரைச் சோலை. 11. முண்டகம் = நீர் முள்ளி; கோதை = பூமாலை. 12. குரும்பை = நுங்கு (தென்னை, பனை முதலியவற்றின் இளங்காய்). 13. பூ = பொலிவு, அழகு.
14. குவவுதல் = குவிந்த; தாழை = தென்னை. 15. விரவுதல் = கலத்தல். 17. உறையுள் = தங்குமிடம்; தாங்குதல் = ஆதரித்தல், நிறுத்துதல், தடுத்தல்; கெழீஇய = பொருந்திய. 19. புதவு = நீர் பாயும் மடைவாய், மதகு, கதவு; மிழலை = மிழலைக் கூற்றம்; கழனி = வயல். 20. சேக்கை = விலங்கின் படுக்கை. 22. குப்பை = தானியக் குவியல். முத்தூறு = முத்தூற்றுக் கூற்றம். 23. கொற்றம் = வெற்றி. 24. நாண்மீன் = நட்சத்திரம். 26. மூத்த = முதிர்ந்த. 28. ஆடு = வெற்றி; விழு = சிறந்த; திணை = குடி. 29. வலம் = வலிமை; தாள் = முயற்சி; இரவன் = இரக்கும் பரிசிலர். 32. தேறல் = மது; மடுத்தல் = உண்ணுதல், விழுங்குதல். 34. வல்லுநர் = வல்லவர்.

கொண்டு கூட்டு: செழிய, நின் நாண்மீன் நின்று நிலைஇயர்; நின் பகைவர் மீன் படாஅச் செலீஇயர்; உலகத்துத் தோன்றி இசை செலச் செல்லாது விளிந்தோர் பலர். அவர் வாழ்ந்தோர் எனப்படார்; ஆதலால், பெரும, வாழ்த்த, நுவல, மடுப்ப, மகிழ்சிறந்து இனிதுஒழுகு; அது வல்லுநரை வாழ்ந்தோர் என்ப எனக் கூட்டுக.

உரை: நெல்லை அறுவடை செய்யும் உழவர்கள் கதிரவனின் வெயிலின் வெப்பத்தை வெறுத்து, தெளிந்த கடல் அலைகள் மீது பாய்வர். வலிய மரக்கலங்களை உடைய மீனவர்கள், புளித்த கள்ளை உண்டு மெல்லிய குரவைக் கூத்தைத் தாளத்திற்கேற்ப ஆடுவர். கடல் நீர்த்துளிகளால் தழைத்து வளர்ந்த புன்னை மரங்களின் தேன்நிறைந்த மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்த ஆடவர்கள், ஒளிவீசும் வளை அணிந்த கைகளையுடைய மகளிரைக் அன்புடன் கையால் தழுவி ஆடுவர். வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த, குளிர்ந்த, நறுமணம் பொருந்திய கடற்கரைச் சோலையில் நீர்முள்ளிப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த மகளிர், பெரிய பனை நுங்கின் நீர், அழகிய கரும்பின் இனிய சாறு, உயர்ந்த மணற் குவியலில் தழைத்த தென்னையின் இளநீர் ஆகிய மூன்றையும் கலந்து குடித்துக் கடலில் பாய்ந்து விளையாடுவர். இவ்வாறு பல்வேறு மக்களும் மகிழ்ச்சியாக வாழும் நல்ல ஊர்கள் அடங்கிய நாடு மிழலைக் கூற்றம். அந்நாட்டின் தலைவன், குறையாது கொடுக்கும் கொடைத்தன்மையையுடைய வேளிர் குலத்தைச் சார்ந்த எவ்வி என்பவன்.

மிழலைக் கூற்றத்தைப் போலவே, முத்தூற்றுக் கூற்றம் என்னும் நாடும் ஒருவளமான நாடு. அந்நாட்டில், நீர் பாயும் மதகுகள் உள்ளன. அங்கே, வயல்களில் உள்ல கயல் மீன்களை மேய்ந்த நாரை வைக்கோற்போரில் உறங்குகின்றன. பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகள் உள்ளன; வயல்களில் விளைந்த நெல் குவியல் குவில்களாகக் கிடக்கின்றன. அந்த நாட்டை ஆள்பவனும் வேளிரின் குலத்தைச் சார்ந்தவன்தான்.

அத்தகைய மிழலைக் கூற்றத்தையும் முத்தூற்றுக் கூற்றத்தையும் வென்ற செழியனே! ஒளி பொருந்திய நீண்ட குடையையும், கொடிபறக்கும் தேரையையும் உடைய செழியனே! நீ நீண்ட நாட்கள் வாழ்க! உன் பகைவர்கள் நீண்ட நாட்கள் வாழாது ஒழிக! உயிருடன் கூடிய உடல் போன்று உன்னுடன் தொடர்புடைய உன் வெற்றி மிகுந்த வாட்படை வீரர்கள் உன் முயற்சியையும் வலிமையையும் வாழ்த்த, ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த மகளிர், பொன்னானாலான பாத்திரங்களில் கொண்டுவந்து தரும் குளிர்ந்த, மணமுள்ள மதுவைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறந்து வாழ்வாயாக! தலைவ! இந்தகைய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் உண்மையிலேயே வாழ்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அறிஞர்கள் கூறுவர். அவ்வாறு இல்லாமல், இந்தப் பரந்த உலகத்தில் தோன்றிப் புகழ் பெருக வாழாமல் வாழ்ந்து முடித்தோர் பலர். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்ததாகவே கருதப்படுவர்.

No comments:

Post a Comment