Wednesday, December 8, 2010

14. மென்மையும்! வன்மையும்!

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 8-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 8-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருசமயம், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலரின் கையைப் பிடித்தான். அவர் கை மிகவும் மென்மையாக இருப்பதைக் கண்ட அவன் மிகவும் வியப்படைந்தான். அவன் கபிலரைப் பார்த்து, “தங்கள் கைகள் ஏன் இவ்வளவு மென்மையாக இருக்கின்றன?” என்று கேட்டான். அதற்குக் கபிலர், அரசே! நீ யானை, குதிரை ஆகியவற்றைச் செலுத்துகிறாய். போர்க்களத்தில் வில்லேந்தி அம்பு எய்கிறாய். என் போன்ற இரவலர்கள் முயற்சியின்றிப் பிறர் அளிக்கும் புலாலையும் சோற்றையும் உண்ணுவதைத் தவிரத் தங்கள் கைகளால் வேறு எந்தக் கடினமான வேலையையும் செய்வதில்லை. ஆகவேதான், என் கை மென்மையாக உள்ளது.” என்று இப்பாடல் மூலம் சேரனின் கேள்விக்குக் கபிலர் விடை அளிக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடுங்கண்ண கொல்களிற்றான்
காப்புடைய எழுமுருக்கிப்
பொன்இயல் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
5 பார்உடைத்த குண்டுஅகழி
நீர்அழுவம் நிவப்புக்குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10 பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும், குரிசில்!
வலிய ஆகும்நின் தாள்தோய் தடக்கை;
புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
15 பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
மெல்லிய பெரும! தாமே நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்! நின் பாடுநர் கையே.

அருஞ்சொற்பொருள்:
1. கடுங்கண்ண = கடும்+கண்ண = கொடிய கண்ணையுடைய. 2. காப்பு = காவலான இடம்; எழு = தூண், கணைய மரம்; முருக்கி = முறித்து. 3. பொன் = இரும்பு; புனை = அழகு; தோட்டி = அங்குசம். 4. முன்பு = வலிமை; துரந்து = குத்தி. சமந்தாங்குதல் = வேண்டுமளவில் பிடித்து இழுத்தி நிறுத்துதல். 5. பார் = நிலம், பூமி; குண்டு = ஆழம். 6. அழுவம் = பரப்பு; நிவப்பு = உயர்ச்சி. 7. நிமிர்தல் = ஓடல்; பரிதல் = ஓடுதல்; மா = குதிரை; தாங்குதல் = நிறுத்துதல். 8. ஆவம் = அம்புறாத்தூணி. 9. சாவம் = வில்; நோன் = வலி; ஞாண் = கயிறு; வடு = தழும்பு; வழங்குதல் = செலுத்துதல். 10. குரிசில் = தலைவன். 11. தாள் = கால்; தோய்ந்த = பொருந்திய; தட = பெரிய. 12. புலவு = ஊன்; பை = வலிமை (கொழுத்த); தடி = தசை; கொளீஇ = கொளுத்தி. 13. துவை = துவையல். 15. நன்றும் = மிக; ஆரணங்கு = ஆற்றுதற்கு அரிய வருத்தம். 16. நல்லவர் = பெண்கள். 17. பொருநர் = பகைவர். 18. இரு = பெரிய; நோன்மை = வலிமை. 19. செரு = போர்; சேய் = முருகன்.

கொண்டு கூட்டு: குரிசில், பெரும, சேஎய், வலியாகும் நின்கை; நிற்பாடுநர் கை தாம் மெல்லியவாகும் எனக் கூட்டுக.

உரை: கொடிய கண்களையுடைய, கொல்லும் யானைகளால், பாதுகாப்பிற்காகப் பகைவர்கள் வைத்திருந்த கணையமரங்களை முறித்து, இரும்பால் செய்யப்பட்ட அழகிய அங்குசத்தால் வலிமையாகக் குத்தி யானைகளைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். நிலத்தைத் தோண்டி உருவாக்கப்பட்ட அகழிகளின் நீர்ப்பரப்புகளின் ஆழம் கருதி அவைகளின் மீது செல்லாமல் விரைவாக ஓடும் குதிரைகளைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். அம்புறாத்தூணியை முதுகில் பொருத்தித் தேர் மேலிருந்து வில்லின் நாணால் கையில் வடு உண்டாகுமாறு அம்பைச் செலுத்துகிறாய். மற்றும், பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலன்களை அளிக்கிறாய். அரசே! இத்தகைய செயல்களால் உன் முழங்கால் வரை நீண்ட பெரிய கைகள் வலிமையாக உள்ளன. புலால் மணக்கும் கொழுத்த தசையைப் பூ மணமுள்ள புகையுடன் கூடிய தீயினால் கொளுத்திச் சமைத்த புலாலும், துவையலும், கறியும் சோறும் உண்ணுவதைத் தவிர, உன்னைப் பாடுபவர்கள் வேறு வலிய செயல்களைத் தங்கள் கைகளால் செய்யாததால், அவர்களின் கைகள் மிகவும் மென்மையானதாக உள்ளன. அரசே! பெண்டிர்க்கு வருத்ததைத் தரும் மார்பும், பகைவருடன் வலிய நிலம் போன்ற திண்மையோடு போர்புரியும் முருகனைப் போன்ற ஆற்றலும் உடையவனே!

No comments:

Post a Comment