Wednesday, December 8, 2010

11. பெற்றனர்! பெற்றிலேன்!

பாடியவர்: பேய்மகள் இளவெயினியார் (11). இவர் பேயுருவத்தோடு நின்று பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோவைப் பாடினார் என்றும், இளமையிலே இறந்து பின்னர் பேய் உருவம் பெற்றார் என்றும், போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து பாடியதால் பேய்மகள் என்ற பெயர் பெற்றார் என்றும் பலரும் பலவாறாகக் கூறுவர். இவர் இயர்பெயர் இளவெயினி. குறமகள் இளவெயினி என்று ஒருபுலவர் இருந்ததால், அவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ (11). இவன் முடிசூடிய மூவேந்தருள் ஒருவனாக சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாகவும் விளங்கினான். இவன் புறநானூற்றில் 282 - ஆம் பாடலையும், அகநானூற்றில் 11 செய்யுட்களையும் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 379), குறுந்தொகையில் 10 பாடல்களையும் (16, 37, 124, 135, 137, 209, 231, 263, 283, 398), நற்றிணையில் 10 செய்யுட்களையும் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகையில் பாலைக்கலி முழுவதையும் (1-35) இயற்றிய பெரும் புலவன். இவன் பாலைத் திணைப் பாடல்களை இயற்றுவதில் மிகுந்த புலமையுடையவனாக இருந்தான். இவன் பாடல்கள் அனைத்தும் இலக்கிய நயமும், கருத்துச் செறிவும் உடையவை.
பாடலின் பின்னணி: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் புகழ்ந்து பாடிய பாடினியும் பாணனும் பரிசு பெற்றதை இப்பாடலில் பேய்மகள் இளவெயினி புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

அரிமயிர்த் திரள்முன்கை
வால்இழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
5 தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய அரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே;
10 புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருஉடைய விழுக்கழஞ்சின்
சீருடைய இழைபெற்றிசினே;
இழைபெற்ற பாடினிக்குக்
15 குரல்புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே
எனவாங்கு
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

அருஞ்சொற்பொருள்:
1.அரி = மென்மை; திரள் = திரண்ட. 2. வால் = தூய; இழை = அணிகலன்கள். 3. புனை = அலங்காரம். 4. குலவு = வளைவு; சினை = மரக்கிளை. 6. பொருதல் = முட்டுதல்; விறல் = வெற்றி; வஞ்சி = கரூர், சேர நாடு. 7. சான்ற = அமைந்த; விறல் = வெற்றி. 8. வெப்பு = வெம்மை; கடந்து = அழித்து. 9. துப்பு = பகை, உறுதல் = பொருந்துதல். 10. வயம் = வலிமை. 12. ஏர் = தோற்றப் பொலிவு; விழு = சிறந்த; கழஞ்சு = பன்னிரண்டு பணவெடை அளவு. 13. சீர் = அழகு; இழை = அணிகலன்கள். 15. குரல் = ஒலி, முதல் இடம்; சீர் = ஓழுங்கு; கொளை = இசை, தாளம் போடுதல்; வல் = திறமை. 17. ஒள் = ஒளி; அழல் = நெருப்பு, வெப்பம்.

உரை: மென்மையான மயிர்களுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலன்களையும் உடைய இளம்பெண்கள் ஆற்றங்கரையில் இருந்த மணலால் செய்த பாவைக்கு வளைந்த கிளைகளிலிருந்து கொய்த மலர்களைச் சூடுகிறார்கள். குளிர்ந்த ஆன் பொருநை ஆற்றில் பாய்ந்து விளையாடுகிறார்கள். அத்தகைய, வானளாவிய புகழும் வெற்றியும் பொருந்திய வஞ்சி நகரத்தில், புலவர்களால் புகழ்ந்து பாடும், வெற்றியுடைய வேந்தன் சேரமான் பெருங்கடுங்கோ. அவன், பகைவர்களின் வலிய அரண்களை அழித்து அவர்களைப் புறங்காட்டி ஒடவைத்த வலிமை பொருந்திய வேந்தன். அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடிய பெண், தோற்றப் பொலிவமைந்த சிறந்த பொன் அணிகலன்களைப் பரிசாகப் பெற்றாள். அவ்வணிகலன்களைப் பெற்ற பெண்ணின் பாடலுக்கு ஏற்ப இசையோடும் தாளத்தோடும் இணைந்து பாடிய பாணன் வெள்ளி நாரால் தொடுத்த ஒளி மிகுந்த பொன்னாலான தாமரை மலர்களைப் பரிசாகப் பெற்றான்.

சிறப்புக் குறிப்பு: பாடினியும் பாணனும் பரிசு பெற்றார்கள்; ஆனால் தனக்குப் பரிசுகள் ஏதும் கிடைக்கவில்லையே என்று இளவெயினியார் கூறாமல் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment