பாடியவர்: குடபுலவியனார் (18, 19).இவரது இயற்பெயர் புலவியன் என்பது. இவர் குட நாட்டவராதலால் குடபுலவியனார் என்று அழைக்கப்பட்டார். புலவியன் என்பது விரிந்த அறிவுடையவன் என்று பொருள்படும்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (18, 19, 23 - 26, 76 - 79, 371, 372)
பாண்டிய நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில் தலையாலங்கானதுச் செருவென்ற நெடுஞ்செழியனும் ஓருவன். இவன் சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர். தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான். இவனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சின்னமனூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் காணப்படுவதாக வரலாறு கூறுகிறது.
இவனைப் புகழ்ந்து பாடியவர்கள் பலர். புறநானூற்றில் 12 பாடல்களில் இவன் புகழ் கூறப்படுகிறது. பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்ற பாட்டுக்குப் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது குறிப்பிடத் தக்கது.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒர் சிறந்த அரசன் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த புலவனாகவும் திகழ்ந்தான் என்பது புறநானூற்றில் அவன் இயற்றிய பாடல் (பாடல் - 72)மூலம் தெரிய வருகிறது.
பாடலின் பின்னணி: ஒருசமயம், பாண்டிய நாட்டின் ஒருபகுதியில், நீர்நிலைகள் இல்லாத காரணத்தால், அங்கு பயிர்கள் விளையாமல் வறுமை நிலவியது. இப்பாடலில், நீரைத் தேக்கி நீர்நிலைகளை உருவாக்குவது இன்றியமையாதது என்று பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் புலவர் குடபுலவியனார் அறிவுறை கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி; பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
முதுமொழிக் காஞ்சி. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.
பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
5 ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉம் இனவாளை
நுண்ஆரல் பருவரால்
10 குரூஉக்கெடிற்ற குண்டுஅகழி
வான்உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
15 ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்இனி மிகுதி யாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
20 உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
25 வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட்டோரே
30 தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
அருஞ்சொற்பொருள்:
1. முழங்குதல் = ஒலித்தல்; முந்நீர் = கடல்; வளைஇ = சூழப்பட்டு. 3. தாள் = முயற்சி; தந்து = கொண்டு. 4. உரம் = வலி; உம்பல் = வழித்தோன்றல். 5. இரீஇய = இருக்கச் செய்த. 8. கதூஊம் = பற்றும் (கதுவுதல் = பற்றுதல்). 9. பரு = கனத்த. 10. குரு = ஒளி; கெடிறு = கெளிற்று மீன். 11. உட்கும் = அஞ்சும்; வடிதல் = நீளுதல். 12. மல்லல் = வளமை; வயம் = வலி. 14. முருக்கி = அழித்து. 17. மிகுதியாள = பெரியோன். 20. பிண்டம் = உடல். 24. வித்தி = விதைத்து. 25. வைப்பு = இடம்; நண்ணி = நெருங்கி (பொருந்தி); தாள் = முயற்சி. 27. வல்லே = விரைவாக. 28. நெளிதல் = குழிதல், வளைதல். 29. தட்டல் = முட்டுப்பாடு; தட்டோர் = தடுத்தோர்; அம்ம - அசைச் சொல். 30. தள்ளோதார் = தடுக்காதவர்.
கொண்டு கூட்டு: உணவின் பிண்டம் உண்டி முதற்றே, உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என மாறிக் கூட்டுக.
உரை: ஒலிக்கும் கடல் சூழ்ந்த பரந்து கிடக்கும் அகன்ற உலகத்தைத் தமது முயற்சியால் வென்று, தம்முடைய புகழை உலகத்தில் நிலைநிறுத்தித் தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே! ஒன்று, பத்து என்ற எண்களின் வரிசையில் கடைசி எண்ணாகக் கருதப்படும் கோடி என்ற பெருமையுடைய எண் அளவுக்கு நீ வாழ்க! நீரளவுக்குத் தாழ்ந்து இருக்கும் சிறிய காஞ்சிப்பூவைக் கவ்வும் வாளை மீன்களின் கூட்டமும், சிறிய ஆரல் மீன்களும், பருத்த வரால் மீன்களும், ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்துள்ள ஆழமான அகழியும், வானளாவிய நெடிய மதிலும் உடைய வளமான பழைய ஊரில் உள்ள வலிய வேந்தனே! நீ மரணத்திற்குப் பிறகு செல்ல இருக்கும் உலகத்தில் அனுபவிப்பதற்கேற்ற செல்வத்தை விரும்பினாலும், உலகத்தை காக்கும் மற்ற அரசர்களின் வலிமையை அழித்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், சிறந்த புகழை நிலைநாட்ட விரும்பினாலும், அதற்குரிய தகுதியை நான் கூறுகிறேன்; நீ அதைக் கேட்பாயாக! நீரில்லாமல் வாழ முடியாத இவ்வுடலுக்கு உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவாலாகிய இவ்வுடலுக்கு உணவுதான் முதன்மையானது. ஆகவே, உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்து உணவுப் பொருள்களை விளைவித்தவர்கள்தான் உயிரையும் உடலையும் வாழவைப்பவர் ஆவர். விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்திருக்கும் புன்செய் நிலம் அகன்ற பரப்புடையதாக இருந்தாலும் அதனால் மன்னனுக்கு ஒருபயனுமில்லை. ஆகவே, கொல்லும் போரையுடைய பாண்டியனே! நான் கூறுவதை இகழாது கேள்! வளைந்து செல்லும் ஆழமான இடங்களில் விரைந்து நீர்நிலைகளை உருவாக்கியவர்கள்தான் இவ்வுலகில் தாம் விரும்பியவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டவராவர். அவ்வாறு செய்யாதவர்கள், இவ்வுலகில் தாம் விரும்பியவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாதவராவர்.
சிறப்புக் குறிப்பு: ”நீர் இன்று அமையாது உலகு” என்று வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
”நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே; தள்ளாதோர் இவன் தள்ளாதோரே” என்ற இந்த அடிகளில் நீர்நிலைகள் கட்டி நீரைத் தேக்கி வைத்தவர்கள், செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் உலகுக்கு நீர் இன்றையமையாததால், நீர்நிலைகள் கட்டி, நீரைத் தேக்கி வைக்கத் தவறியவர்கள் செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றை இழக்க நேரிடும் என்றும் குடபுலவியனார் கூறுவதாகக் கொள்ளலாம்.
Tamil enthusiasts in the Washington D.C. area get together twice a month to discuss PuRanaanuuRu. At these meetings I discuss each poem in great detail. This blog contains the the first 69 poems of PuRanaanuuRu, meanings for difficult words in those poems, commentaries on those poems and other related information as presented by me in those meetings. For poems 70 and onwards, please visit my blog http://Puram400.blogspot.com
Showing posts with label புறநானூறு - பாடல் 18. Show all posts
Showing posts with label புறநானூறு - பாடல் 18. Show all posts
Wednesday, December 8, 2010
Subscribe to:
Posts (Atom)