Friday, December 3, 2010

4. தாயற்ற குழந்தை!

பாடியவர்: பரணர்(4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369). சங்க காலப் புலவர்களில் மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர். பரணரால் பாடப்பாடுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “பரணன் பாடினனோ” என்று அவ்வையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு - 99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 16 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் உருவப் ப்ஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர். இவர் பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை. இவர் கபிலரின் நண்பர். மருதத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்.

இவர் பதிற்றுப் பத்தில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியதற்கு, உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசாக பெற்றதாகக் கூறப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (4, 266). சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி வரலாற்றில் இடம் பெற்ற முதல் சோழ மன்னன் என்று கருதப்படுகிறது. இவனுக்கு முந்தியதாக இருந்த மன்னர்களைப்பற்றிய செய்திகளை வரலாற்று ஆசிரியர்கள் கற்பனைக் கதைகளாகவே கருதுகின்றனர். உதாரணமாக, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காகண்டன், காவேரன், மனு நீதி கண்ட சோழன், கற்றை ஆடல் கொண்டவன், சமுத்ரஜித் போன்றவர்களைப் பற்றிக் கூறப்படும் செய்திகளுக்குத் தக்க ஆதாரமில்லை என்று வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

இளஞ்சேட்சென்னியின் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று கருதப்படுகிறது. பொருநராற்றுப்படையில், கரிகாலனை “உருவப் ப்ஃறேர் இளையோன் சிறுவன்” என்று அதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் குறிப்பிடுவதிலிருந்து இவன் கரிகாலனின் தந்தை என்பது தெரிய வருகிறது (பொருநராற்றுப்படை, 130). இவன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான்.
பாடலின் பின்னணி: இப்பாடலில் புலவர் பரணர், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கும் போரில் சிறந்து விளங்குவதைப் பாராட்டுகிறார். சோழன் தேரில் வருவது கடலினின்று கதிரவன் எழுவது போல் உள்ளது என்று அவனைப் புகழ்கிறார். அவனோடு போர் புரிந்த பகைவரின் நாடு தாயில்லாக் குழந்தை போல் ஓயாது கூவி வருந்தும் என்றும் கூறுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
5 தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;
10 களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
15 மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. வலம் = வெற்றி; மறு = கரை. 2. வனப்பு = நிறம் அழகு. 3. களங்கொள்ளல் = இருப்பிடமாக்கிக் கொள்ளுதல், வெல்லுதல்; பறைந்தன = தேய்ந்தன. 4. மருப்பு = கொம்பு. 5. தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்; துவைத்தல் = குத்துதல், ஒலித்தல். 6. நிலைக்கு = நிலையில்; ஒராஅ = தப்பாத; இலக்கம் = குறி. 7. மா = குதிரை; எறிதல் = வெல்லுதல்; பதம் = பொழுது. 9. கறுழ் = கடிவாளம்; பொருதல் = தாக்குதல். 10. எறியா = எறிந்து = வீசியடித்து; சிவந்து = கோபித்து; உராவல் = உலாவல். 11. நுதி = நுனி; கோடு = கொம்பு. 13. அலங்குதல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; பரீஇ = விரைந்து; இவுளி = குதிரை. 14. பொலம் = பொன்; பொலிவு = அழகு. 15. மா = பெரிய; நிவத்தல் = உயர்தல் தோன்றுதல். 16. கவின் = அழகு; மாது - ஒருஅசைச் சொல். 17. ஆகன் மாறு = ஆகையால். 18. தூவா = உண்ணாத; குழவி = குழந்தை. 19. ஓவாது = ஒழியாது; உடற்றல் = பகைத்தல்; கூ = கூப்பிடு.

உரை: போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன. கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன.

குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன.

யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன.

நீ அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது, பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர்.

No comments:

Post a Comment