பாடியவர்: நெட்டிமையார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பல போர்களில் வெற்றி பெற்றதையும் பல வேள்விகள் நடத்தியதையும் கண்டு நெட்டிமையார் மிகவும் வியப்படைந்தார். “அரசே! நீ கழுதைகளை ஏரில் பூட்டி உழுது பகைவர்களின் அகன்ற இடங்களைப் பாழ் செய்தாய்; அவர்களின் வயல்களில் குதிரைகள் பூட்டிய தேர்களைச் செலுத்திப் பாழ் செய்தாய்; பகைவர்களின் குளங்களில் யானையைப் படியச் செய்து அவற்றைப் பாழ் செய்தாய்; நீ அத்தகைய வலிமையுடையவன். உன்னுடைய தூசிப்படையை எதிர்த்துப் போரிட வந்து தோல்வியுற்றுப் பழியுடன் வாழ்ந்தவர்கள் பலரா? அல்லது வேதமுறைப்படி வேள்வி நடத்தி நீ நிறுவிய வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா? இவற்றில் எது அதிகம்?” என்று வினவி, இப்பாடலில் தன் வியப்பை வெளிப்படுத்திப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
5 வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்
பா வடியாற்,செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர
10 காப் புடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்குபொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
15 நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
20 வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25 நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.
அருஞ்சொற்பொருள்:
1. கடு = விரைவு; குழித்த = குழியாக்கிய; ஞெள்ளல் = தெரு. 2. வெள் = வெளுத்த; புல்லினம் = புல்+இனம் = இழிந்த கூட்டம். 3. நனம் = அகற்சி (அகலம்); தலை = இடம்; எயில் = அரண். 4. புள்ளினம் = பறவைகள்; இமிழும் = ஒலிக்கும். 5. உளை = பிடரிமயிர்; கலிமான் = குதிரை; உகளல் = தாவுதல். 6. தெவ்வர் = பகைவர். 7. துளங்கல் = அசைதல்; இயல் = தன்மை; பணை = பெருமை; எருத்து = கழுத்து. 8. பா = பரந்த; செறுதல் = கோபித்தல். 9. மருப்பு = கொம்பு(தந்தம்); அவர = அவருடைய. 10. கயம் = வற்றாத குளம். 12. பொன் = இரும்பு; கிளர் = மேலெழும்பு; எறிதல் = அடித்தல். 13. ஒன்னார் = பகைவர். 14. கடுந்தார் = விரைவாக செல்லும் படை; முன்பு = வலிமை; தலைக்கொள்ளுதல் = கெடுத்தல். 15. நசை = ஆசை; தருதல் = அழைத்தல்; பிறக்கு = முதுகு, பின்புறம். 17. பனுவல் = நூல். 18. சீர்த்தி = மிகுபுகழ்; கண்ணுறை = மேலே தூவுவது; மலிதல் = மிகுதல், நிறைதல். 19. ஆவுதி = ஆகுதி = ஓமத்தீயில் நெய்யிடுதல். 20. வீதல் = குறைதல். 21. யூபம் = தூண்; வியன் = அகன்ற, மிகுந்த; களம் = இடம். 22. உற்று = பொருந்தி. 23. விசி = கட்டு; கனை = நெருக்கம். மண்கனை = ஒருவகை மண்ணால் ஆகிய சாந்து; முழவு = முரசு, பறை. 24. வஞ்சி = பகைவர் மீது படையெடுப்பு. 25. நாடல் = நாட்டம் (நோக்கம்); சான்ற = அமைந்த; மைந்து = வலிமை.
கொண்டு கூட்டு: பெரும, மைந்தினோய், பாழ் செய்தனை; தேர் வழ்ங்கினை; கயம் படியினை; ஆதலின், நினக்கு ஒன்னாராகிய வசைபட வாழ்ந்தோர் பலர் கொல், யூபம் நட்ட வியன்களம் பலகொல்; இவற்றுள் யா பல கொல்லோ எனக் கூட்டுக.
உரை: விரைவாகச் செல்லும் தேர்களால் குழிகள் தோண்டப்பட்ட தெருக்களில், வெண்மையான வாயுள்ள கழுதைகளை ஏரில் பூட்டி, உன் பகைவர்களின் நல்ல அரண்கள் சூழ்ந்த அகன்ற இடங்களைப் பாழ் செய்தாய். பறவைகள் ஒலிக்கும் புகழ் மிகுந்த விளைவயல்களில் வெள்ளைப் பிடரி மயிருடைய குதிரைகளின் குவிந்த குளம்புகள் தாவுமாறு செய்து உன் பகைவர்களின் நாட்டில் தேர்களைச் செலுத்தினாய். பருத்த, அசையும் கழுத்தும், பெரிய காலடிகளும், சினத்துடன் கூடிய பார்வையும், ஒளிரும் தந்தங்களுமுடைய யானைகளை ஏவிப் பகைவர்களின் குளங்களைப் பாழ்செய்தாய். நீ அத்தகைய சீற்றம் உடையாய். ஆதலால், வலிய இரும்பால் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறையப்பட்ட அழகிய பலகையோடு நிழல் உண்டாக்கும் நெடிய வேலை எடுத்து, உன் பகைவர், ஒளிரும் படைக்கலங்களுடன் கூடிய உன்னுடைய விரைந்து செல்லும் தூசிப்படையின் வலிமையை அழிக்க விரும்பி ஆசையோடு போருக்கு வந்தனர். பின்னர், அந்த ஆசை ஒழிந்து பழியுடன் வாழ்ந்தவர் பலரா? அல்லது குற்றமற்ற நல்ல நூலாகிய வேதத்தில் சொல்லியவாறு அரிய புகழுடைய சுள்ளியும், பொரியும், நெய்யும் இட்டுப் பலவிதமான மாட்சிமைகளும், கேடற்ற சிறப்பும் உடைய யாகங்கள் செய்து, நீ நிறுவிய தூண்கள் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா? வாரால் இறுகக் கட்டி, மார்ச்சுனை தடவிய முழவுடன் உன் படையெடுப்புகளைப் புகழ்ந்து பாடும் பாடினியின் பாட்டுக்கேற்ப ஆராய்ந்து அமைந்த வலிமை உடையோய்! இவற்றுள் எதன் எண்ணிக்கை அதிகம்?
சிறப்புக் குறிப்பு: போரில் முன்னணியில் செல்லும் படை தூசிப்படை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னணிப்படையிடம் பலரும் தோல்வியுற்றார்கள் என்று இப்பாடலில் நெட்டிமையார் கூறுவதிலிருந்து அவனுடைய முழுப்படையின் வலிமையை எதிர்த்துப் போரிடுவது மிகவும் கடினம்; அவனை எதிர்த்துப் போரில் வெற்றி பெறுபவர்கள் யாரும் இல்லை என்ற கருத்துகளும் இப்பாடலில் மறைந்திருப்பதைக் காணலாம்.
No comments:
Post a Comment