Tuesday, April 24, 2018

முல்லைப்பாட்டு

அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
கடந்த சில வாரங்களாக நமது தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டங்களில் முல்லைப்பாட்டு படித்தோம்சங்க இலக்கியத்தைச் சார்ந்த பத்துப்பாட்டில்முல்லைப்பாட்டும் ஒன்று.முல்லைப்பாட்டுபத்துப்பாட்டில் உள்ள பாடல்களில்  103 அடிகளுடன் கூடிய சிறிய பாட்டு.
போருக்குச் சென்ற மன்னின் வருகைக்காகக் காத்திருக்கும் அவன் மனைவியின் மனநிலையையும்போர்ப்பாசறையில் உள்ள மன்னின் மனநிலையையும்போரில் வெற்றிபெற்று மன்னன் திரும்பி வருவதையும் ஒரு காணொளிபோல் முல்லைப்பாட்டு நம் கண்முன்னே காட்டுகிறதுசங்க கால வாழ்வியலைப் பற்றிய பல அரிய செய்திகளையும் பல சுவையான உவமைகளையும் முல்லைப்பாட்டில் காணலாம்.
முல்லைத்திணைப் பாடலுக்குத் தொல்காப்பியம் கூறும் அத்துணை இலக்கணங்களும் ஒருஙகே அமைந்த இச்சிறிய பாடல் படிப்பவர்களை மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை.
முல்லைப்பாட்டுக்கு டாக்டர் உ.வேசாமிநாத ஐயர்மறைமலை அடிகள்,பெருமழைப்புலவர் பொ.வேசோமசுந்தரனார் ஆகியோரின் உரைகளை ஆய்வு செய்து என்னுடை ய உரையையும்  முல்லைப்பாட்டுக்குத் தொடர்புள்ள பல அரிய செய்திகளையும் என்னுடைய வலைத்தளத்தில்  (https://mullaippaattu.blogspot.com)பதிவு செய்திருக்கிறேன்ஆர்வமும் நேரமும் இருந்தால் படியுங்கள்உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
நன்றி.
அன்புடன்,

Thursday, July 17, 2014

THirukkural Blog


Dear Friends,

Vanakkam.

I am an ardent admirer of Thirukkural.  During 2003-2008, I had the opportunity to make an in-depth study of Thirukkural along with my friends in the Greater Washington D.C area.  I also had the unique opportunity to serve as the Coordinator for the International Thirukkural Conference held in the Washington D.C. area in 2005.

We all know that Thirukkural has been translated into almost all the major languages of the word.  In English alone, there are more than 35 translations.  In spite of all these translations, we have failed to promote Thirukkural outside of Tamil Nadu.  Most of the educated people in the world, would know that Confucius was a Chinese philosopher, Socrates was a Greek philosopher, Shakespeare was an English playwright and so on.   But, very few people outside of Tamil Nadu have heard of Thiruvalluvar.   On many occasions, I have quoted and explained some of the kurals to my American friends. Once they understand the depth of the wisdom in the kural they admire it and invariably ask for a translation of Thirukkural.   In all honesty, I must say that I have not found an English translation of Thirukkural that would be helpful to understand its meaning and significance.  Thirukkural is so succinct that translating each kural into two lines in English (or any other language) fails to convey the content of the kural and its significance.   In my humble opinion, translations do not help to understand Thirukkural.

            The fact that we don’t have book that non-Tamil people (including our children who are not proficient in Tamil) can read and appreciate Thirukkural has been a concern to me.   So, I have taken it upon myself to write a series of articles on Thirukkural.  The target readers for these articles are people who have no knowledge of Tamil.    In these articles, I plan to describe Thiruvallvar’s ideas on topics like personal development, management, leadership, friendship, love, Kingship, ethics, reincarnation, liberation of the soul, humanism, rationalism etc.  I plan to stick to Thiruvalluvar’s ideas as closely as possible.
These articles will be posted in my blog for which the link is listed below:

                        http://amazingkural.blogspot.com

  At present, two articles have been posted.   One is a Preface and the other is an introduction to Thiruvalluvar and Thirukkural.  Additional articles will be posted in course of time.

If you have the time and interest in Thirukkural, please read the article and also pass on the link to your friends who may be interested in reading it. I would greatly appreciate your feedback.   I am sure your feedback will be very helpful to improve the quality of the articles
.
anbudan,

Prabhakaran

Thursday, September 19, 2013

என்னுடைய நூல்கள்

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.
இதுவரை ஏறத்தாழ 25,000 முறை பல நாடுகளில் உள்ள தமிழன்பர்கள் என்னுடைய  வலைத்தளங்களுக்கு (http://puram1to69.blogspot.comhttp://puram400.blogspot.com) வந்து புறநானூற்றுப் பாடல்களையும் உரையையும் பார்த்தாதாகப்/படித்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. என்னுடைய வலைத்தளங்களுக்கு வந்தோர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த வலைத்தளத்தில் உள்ள உரைகளில் உள்ள சில பிழைகளைத் திருத்திச் செம்மைபடுத்தி இரண்டு பகுதிகள் அடங்கிய நூலாக வெளியிட்டுள்ளேன்,  அந்த நூல்கள் கிடைக்கும் விவரங்கள் கீழ்வருமாறு:

அமெரிக்காவில் (in USA):
நூல்களின் விலை:
புறநானூறு (மூலமும் எளிய உரையும்) பகுதி -1……..…. = $15.00
புறநானூறு (மூலமும் எளிய உரையும்) பகுதி -2……….  = $15.00
நூலுக்கான தொகையை காசோலை (Check)  மூலம் அனுப்பவும். காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. R. Prabhakaran
1103 Bluebird Court East
Bel Air, MD 21015

இந்தியாவில் இந்த நூல்கள் கிடைக்கும் விவரம்:
காவ்யா பதிப்பகம்
16, இரண்டாம் குறுக்குத் தெரு
டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம்
சென்னை 600 024
தொலைபேசி: 044- 23726882; அலைபேசி: 9840480232
முதல் பகுதியின் விலை …………..= ரூ. 400.00
இரண்டாம் பகுதியின் விலை……. = ரூ 450.00
மற்ற நாடுகளில்:
மற்ற நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் முகவரியைக் குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அஞ்சல் கட்டணம் எவ்வளவு என்று நான் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறேன். அதன் பிறகு, எனக்கு அமெரிக்க டாலரில் காசோலையோ (check) அல்லது வரைவோலையோ (Cashiers Check or Draft) அனுப்பினால், நூல் அனுப்புகிறேன்.

ஏதாவது கேள்விகள் இருந்தால் என்னைprabu0111@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

பிரபாகரன்


Thursday, April 7, 2011

69. பொற்றாமரை பெறுவாய்!

பாடியவர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், ஆலத்தூர் கிழார் கிள்ளி வளவனைக் காணச் சென்றார். அவனுடைய படைச் சிறப்பும், கொடைச் சிறப்பும் அவரை மிகவும் கவர்ந்தன. அவனுடைய சிறப்பியல்புகளை எடுத்துக் கூறி, ஒரு பாணனை கிள்ளி வளவனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.


கையது கடன்நிறை யாழே; மெய்யது
புரவலர் இன்மையின் பசியே; அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
5 பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇப், பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்
10 குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்
புலாக்களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்குநிலை மாடத்து உறந்தை யோனே!
பொருநர்க்கு ஓக்கிய வேலன் ஒருநிலைப்
பகைப்புலம் படர்தலும் உரியன் தகைத்தார்
15 ஒள்ளெரி விரையும் உருகெழு பசும்பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்
நெடுங்கடை நிற்றலும் இலையே; கடும்பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி
நீஅவற் கண்ட பின்றைப் பூவின்
20 ஆடும்வண்டு இமிராத் தாமரை
சூடாய் ஆதல் அதனினும் இலையே.

அருஞ்சொற்பொருள்:
1. கடன் = முறை. 2. அரை = இடுப்பு. 3. வேர் = வேர்வை; சிதாஅர் = சிதார் = கந்தை. 4. ஓம்பி = பாதுகாத்து; உயவல் = வருத்தம். 5. பூட்கை = எழுச்சி, கொள்கை. 6 புல் = அற்பம், இழிவு (பொலிவற்ற); ஒக்கல் = சுற்றம். 7. பையென = மெல்ல. 10. கோட்டுமா = யானை; தொலைச்சி = கொன்று. 11. கலாம் = போர். 12. பிறங்கல் = உயற்சி. 14 படர்தல் = செல்லுதல்; தகை = பெருமை, மேம்பாடு. 15. உரு = நிறம்; புரை = ஒப்பு; பூண் = அணிகலன். 18. வீசுதல் = வரையாது கொடுத்தல். 20. இமிர்தல் = மொய்த்தல்.

கொண்டு கூட்டு: பாண, ஒக்கலையாய், வளைஇ, வினவுதியாயின், தானையை உடையவன், உறந்தையோன், அவன்பாற் படர்குவையாயின், நின் கையது யாழாதலானும், மெய்யது பசியாதனாலும் நெடுங்கடை நிற்றலுமில்லை; நீ அவற்கண்ட பின்றைத் தாமரை சூடாயாதல் அதனினும் இல்லை எனக் கூட்டுக.

உரை: உன் கையில் இருப்பது முறைப்படி செய்த யாழ். உன் உடல், உதவுவோர் இல்லாமையால் பசியால் வாடுகிறது. உன் இடுப்பில் இருப்பது, வியர்வையால் நனைந்த, கிழிந்த கந்தைத் துணி. அந்தத் துணியில் உள்ள கிழிசல்கள் வேறுவேறு நிறமுடைய நூல்களால் தைக்கப்பட்டிருக்கின்றன. நீ அதைப் பாதுகாத்து உடுத்திக் கொண்டிருக்கிறாய். வருத்தத்தில் உள்ள பாண, நீ எழுச்சி இல்லாதவனின் உடல்போலப் பொலிவற்ற பெரிய சுற்றத்தாரை உடையவன். இந்த நிலையில், நீ உலகம் முழுவதும் சுற்றி வந்து, “ என் வறுமையைத் தீர்ப்பவர் யார்?” என்று என்னிடம் மெல்லக் கேட்கின்றாயாயின், நான் கூறுவதைக் கேள்.

கிள்ளிவளவனின் கொடி பறக்கும் பாசறையில், பகை வேந்தர்களது யானைகள் புண்பட்டு வருந்தும். அவன், குருதிப் பரப்பில் யானைகளைக் கொன்று புலால் நாறும் போர்க்களத்தை ஏற்படுத்திய படையை உடையவன்; உயர்ந்த மாடங்களை உடைய உறையூரில் உள்ளான்; போரிடுவோரைத் தாக்குவதற்காக வேல் எடுத்தவன்; சில சமயங்களில் பகைவர் நாடுகளுக்கும் சென்று போர் புரிபவன்; பெருமைக்குரிய மாலையை உடையவன்; ஓலியுடன் கூடிய தீயைப் போன்ற நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய கிள்ளி வளவனிடம் சென்றாயானல், அவனுடைய நெடிய வாயிலில் நீ நெடுநேரம் காத்திருக்க மாட்டாய்; நண்பகல் நேரத்தில், அவன் பரிசிலர்க்குத் தேர்களை வழங்குவதை உன் கண்ணாரக் காண்பாய். நீ அவனைக் கண்ட பின்பு, பூக்களில் புகுந்து ஆடும் வண்டுகள் மொய்க்காத பொற்றாமரைப் பூவைச் சூடாது இருப்பது அதனினும் இல்லை. அதனால் அங்கு செல்வாயாக.

68. பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 31- இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27- இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் நலங்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சி செய்த பொழுது, கோவூர் கிழார் அவனைக் காணச் சென்றார். அவன் உயர்ந்த அணிகலன்களை அணிந்து, மகளிரிடம் இனிமையாகப் பழகுவதையும், வீரர்கள் அவனைப் பணிந்து வாழ்வதையும், தன் நாட்டு மக்களை அவன் அன்போடு பாதுகாப்பதையும், அவனுடைய வீரர்கள் போர்மீது மிகுந்த விருப்பமுடையவர்களாக இருப்பதையும் அவர் நேரில் கண்டார். தான் கண்ட காட்சிகளைக், கோவூர் கிழார், பாணன் ஒருவனிடம் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.


உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து
ஈங்குஎவன் செய்தியோ? பாண! பூண்சுமந்து
5 அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
10 மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
15 கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.

அருஞ்சொற்பொருள்:
1. என்பு = எலும்பு; மருங்கு = பக்கம் (விலா). 2 கடும்பு = சுற்றம். 3. சில் = சில. 4. பூண் = அணிகலன். 5 அம் = அழகிய; பகடு = பெரிய, பெருமை; எழில் = அழகு, இளமை; பொறி = புள்ளி. ஆகம் = மார்பு. 7. பிணித்தல் = கட்டுதல், சிறைப்படுத்தல்; பீடு = பெருமை. 8. புனிறு = ஈன்ற அணிமை; இலிற்றுதல் = சுரத்தல். 9. மலிதல் = மிகுதல். 10 மன்பதை = மக்கட் கூட்டம்; புரத்தல் = காத்தல். 11. திறம் = பகுதி. 14. தணிபறை = தணிவதற்குக் காரணமாகிய பறை. 15 கடுங்கள் = முதிர்ந்த கள்; உகுத்தல் = சிதறுதல்.16. வறுமை = வெறுமை; வறுந்தலை = பாகர் ஏறாத வெறுந்தலை. 17. வரைப்பு = எல்லை; ஓர்த்தல் = கேட்டல். 18. குருசில் = குரிசில் = அரசன்.

கொண்டு கூட்டு: பாண, நீ செலின், நெடுந்தகை, பொருநன் குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு எவன் செய்தியோ எனக் கூட்டுக.

உரை:பாண! உடும்பை உரித்ததுபோல் எலும்புகள் எழும்பிய விலாப் பக்கங்களை உடைய சுற்றத்தின் மிகுந்த பசியைத் தீர்ப்பாரைக் காணாமல், உன் பாடல்களைக் கேட்பவர்கள் சிலரே என்று நொந்துகொண்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? அணிகலன்களை அணிந்த, அழகிய, பெரிய, மார்பில் சிவந்த புள்ளிகளை (தேமல்) உடையவன் நலங்கிள்ளி. அவன் மென்மையான மகளிரிடம் பணிவாகவும், வலிமை மிகுந்த பகைவர்களைச் சிறைப்படுத்தும் பெருமையும் பொருந்தியவன். அவன், குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்கும் முலைபோல், நீர்ப் பெருகிய காவிரி, வெள்ளப் பெருக்கெடுத்து கரையிலுள்ள மரங்களை அழிக்கும் சோழ நாட்டுக்குத் தலைவன். தன்னுடைய படையில் ஒரு பகுதியில் உட்பகை தோன்றினால், பறவைகளால் நிகழும் தீய நிமித்தங்கள் நடைபெறும் பொழுது, அப்படையைப் போருக்குச் செலுத்துவதை நிறுத்திவிடுவான். போருக்குச் செல்ல இயலாதலால், அந்தப் படைவீரர்கள், “ செத்து விடுவோம்” என்று கூறித் தங்கள் பருத்த தோளைத் தட்டுவர். அவர்கள் ஆத்திரம் தணிவதற்குத் தேரோடும் தெருக்களில், தாழ்ந்த ஒலியில் பறையை முழக்குவர். அவர்களில் சிலர், நன்கு முதிர்ந்த கள்ளைப் பருகியதால் நடுங்கும் கைகளால் அக்கள்ளைச் சிந்துவர். கள் சிந்தியதால், சேறாகிய தெருக்களில் பாகர்கள் இல்லாமல் திரியும் யானைகள் பெரிய நகரில் ஒலிக்கும் முரசொலியைக் காது கொடுத்துக் கேட்கும். அத்தகைய உறையூரில், சோழன் நலங்கிள்ளி உள்ளான். நீ அவனிடம் சென்றால், அதற்குப் பிறகு வேறு யாரிடத்தும் செல்வதை மறக்கும் அளவுக்கு பரிசளிப்பான்.

67. அன்னச் சேவலே!

பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “ புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக் காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ்சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுட்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் (67, 212, 213, 219, 221, 222, 223).
கரிகாலனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் கிள்ளிவளவன் என்பவனும் ஒருவன் என்று வரலாறு கூறுகிறது. ஆனால், கிள்ளிவளவனுக்கும் கரிகாலனுக்கும் இருந்த உறவுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில வரலாற்று ஆசிரியர்கள், கரிகால் வளவனுக்குப் பிறகு, அவன் மகன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்பவன் சோழ நாட்டின் ஒரு பகுதிய ஆண்டதாகவும், அவனுடைய மூன்று மகன்களுள் ஒருவன் கிள்ளிவளவன் என்றும் கூறுகின்றனர். கிள்ளி வளவனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன். கிள்லிவளவனுக்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் இருந்த உறவுமுறை தெரியவில்லை. கோப்பெருஞ்சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பது இவன் புறநானூற்றில் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும் (214, 215, 216), குறுந்தொகையில் இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறது. இவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை மூண்டது. பகையின் காரணத்தால், தன் மக்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான். தன் மக்களுடன் தோன்றிய பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.
பாடலின் பின்னணி: புலவர் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனக்கும் தனக்கும் உள்ள நட்பையும், அவனுடைய வீரம், நாட்டைக் காக்கௌம் பண்பு, அன்பு போன்ற நற்குணங்களையும் வடதிசை நோக்கிச் செல்லும் ஒரு சேவலிடம் கூறுவதுபோல் அமைந்துள்ளது. மற்றும், அச்சேவல், உறையூருக்குச் சென்று கோப்பேருஞ்சோழனைக் கண்டு ”நான் பிசிராந்தையின் அடியேன்” என்று சொன்னால் கோப்பெருஞ்சோழன் சேவலின் பெட்டை அணிவதற்கு நல்ல அணிகலன்களைத் தருவான் என்றும் இப்படலில் கூறுகிறார்

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
5 மையல் மாலையாம் கையறுபு இனையக்
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ
10 வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.

அருஞ்சொற்பொருள்:
2. ஆடு = கொல்லுதல், வெற்றி; அடுபோர் = வெல்லும் போர். 3. தலையளித்தல் = காத்தல், கருணையோடு நோக்குதல்; ஓள் = ஒளி. 4. கோடு = பக்கம்; முகிழ் = குவியும். 5. மையல் = மயக்கம்; கையறுதல் = செயலற்றிருத்தல்; இனைதல் = வருந்தல். 6. மாந்துதல் = உண்ணுதல். 8. கோழி = உறையூர். 9. குறும்பறை = பேடை (பெண் பறவை); அசைதல் = தங்குதல். 10. விடுதல் = நிறுத்துதல். 11. கிள்ளி = சோழன் (சோழ மன்னர்களின் சிறப்புப் பெயர்); இரு = பெரிய. 12. அடியுறை = அடியேன். 13. பேடை = பெட்டை.

உரை: அன்னச் சேவலே! அன்னச் சேவலே! கொல்லும் போரில் வெற்றி பெற்று, நாட்டை அருள் செய்து காக்கும் மன்னனின் ஒளிதிகழும் முகம் போல், இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி, முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், இடையே சோழ நாடு உள்ளது. அங்கே, உறையூரில் உள்ள உயர்ந்த மாடத்தில் உனது பெட்டையோடு தங்கி, வாயில் காவலரைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்து, கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, “ நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன்” என்று சொன்னால், பெருமைக்குரிய உன் இனிய பெட்டை அணிவதற்குத் தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான்.

66. நின்னினும் நல்லன் அல்லனோ!

பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்(66). வெண்ணி என்பது திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம் என்னும் ஊருக்கு அருகே உள்ள ஓரூர். இவ்வூர் வெண்ணில் என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. சங்க காலத்தில் மண்பாண்டங்கள் செய்தவர்கள் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் சிறந்தவர்களுக்கு “குயம்” என்ற பட்டம் அரசர்களால் வழங்கப்பட்டது என்றும் இப்பழக்கம் பத்தாம் நூற்றண்டு வரை இருந்ததாகவும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை  அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே, இப்புலவர் குயக்குலத்தைச் சார்ந்த பெண் என்பது இவருடைய பெயரிலிருந்து தெரியவருகிறது.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 7- இல் காண்க.
பாடலின் பின்னணி: கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறார்.


திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே.

அருஞ்சொற்பொருள்:
1. நளி = செறிதல், குளிர்ச்சி; இரு = பெரிய; முந்நீர் = கடல்; நாவாய் = கப்பல். 2. வளி = காற்று; உரவோன் = வலியவன்; மருகன் = வழித்தோன்றல். 3. களி = செருக்குறுதல். 4. அமர் = போர்; கடந்த = அழித்த. 6. கலி = தழைத்தல்; பறந்தலை = போர்க்களம்.

கொண்டு கூட்டு: உரவோன் மருக, கரிகால் வளவ,வென்றோய்,வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி, உலகத்துப் புகழ் மிக எய்தி வடக் கிருந்தோன், நின்னினும் நல்லன் அன்றே எனக் கூட்டுக.

உரை: காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?

சிறப்புக் குறிப்பு: காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் முறையைச் சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.