Wednesday, December 8, 2010

20. மண்ணும் உண்பர்

பாடியவர்: குறுங்கோழியூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் செங்கோல் ஆட்சியின் சிறப்பைக் குறுங்கோழியூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
5 அவைஅளந்து அறியினும் அளத்தற்கு அரியை;
அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்கும் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறல்அல்லது
பிறிதுதெறல் அறியார் நின்நிழல்வாழ் வோரே;
10 திருவில் அல்லது கொலைவில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேயஅப்
பிறர்மண் உண்ணும் செம்மல் நின்நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது
15 பகைவர் உண்ணா அருமண் ணினையே!
அம்புதுஞ்சும் கடிஅரணால்
அறம்துஞ்சும் செங்கோலையே!
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை
20 அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.

அருஞ்சொற்பொருள்:
1.இரு = பெரிய; முந்நீர் = கடல். 2. குட்டம் = ஆழம். 4. காயம் = ஆகாயம்; வறிது = உள்ளீஈடற்றது . 6. ஈரம் = அருள். 7. படுத்தல் = செய்தல். 8. தெறல் = வெம்மை. 10. திருவில் = வானவில். 11. நாஞ்சில் = கலப்பை. 12. திறன் = கூறுபாடு, வழி; வயவர் = வீரர். 13. செம்மல் = தலைவன். 14. வயவு = கருப்பம்; வேட்டல் = விருப்பம்; 16. துஞ்சும் = தங்கும்; துஞ்சல் = நிலைத்தல். 18. ஏமம் = காவல். 19. விதுப்பு = நடுக்கம். 20. அனைய ஆகன் மாறு = அத்தன்மையை உடைமையால்.

கொண்டு கூட்டு: அளத்தற்கு அரியை; நின் நிழல் வாழ்வோர், கொலைவில் அறியார், படையும் அறியார்; செம்மல், அருமண்ணினை; செங்கோலை; ஏமக்காப்பினை; மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சும்.

உரை: பெரிய கடலின் ஆழத்தையும், அகன்ற உலகத்தின் அகலத்தையும், காற்று செல்லும் திசையையும், ஆகாயத்தின் வெறுமையையும் அளந்து அறிய முடிந்தாலும், உன்னுடைய அறிவும், அருளும், கண்ணோட்டமும் அளப்பதற்கு அரிது. உன் நாட்டில், சோறு சமைப்பதற்காக மூட்டிய தீயின் வெப்பமும் சிவந்த ஞாயிற்றின் கதிர்களால் எழும் வெப்பமும்தான் உண்டு. இவற்றைத் தவிர வேறு வெப்பத்தை உன் ஆட்சியில் வாழ்வோர் அறிந்திலர். வானவில் அல்லது கொலைவில்லை அவர்கள் அறியமாட்டர்கள். கலப்பையைத் தவிர வேறு படையை அவர்கள் அறிந்திலர். போர்த்திறம் மிக்க வீரர்களோடு சென்று பகைவர்களின் நாட்டைக் கவரும் அரசே! உன் நாட்டில் கருவுற்ற பெண்கள் வேட்கையால் உன் நாட்டு மண்ணை உண்ணுவார்களே தவிர உன் பகைவர்களால் உன் நாட்டு மண்ணைக் கொள்ள முடியாது.

உன் நாட்டில் அம்புகளோடு கூடிய காவலுடைய இடங்கள் உள்ளன. அங்கே, நீ அறம் நிலைபெற்ற செங்கோல் செலுத்துகிறாய். புதிய பறவைகள் வருவது பழைய பறவைகள் தங்கள் இடத்தைவிட்டுச் செல்வது போன்ற நிமித்தங்களால் நீ கலங்காமல் வாழக்கூடிய காவலுடையவன். நீ அத்தகையவன் ஆதலால், உலகத்து உயிர்களெல்லாம் உன் நன்மையைக் கருதி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment