Wednesday, December 8, 2010

19. எழுவரை வென்ற ஒருவன்

பாடியவர்: குடபுலவியனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18 -இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்ரிய குறிப்புகலைப் பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் வென்று திரும்பிய பிறகு, குடபுலவியனார் அவனைக் காணச்சென்றார். இப்பாடலில், அவன் வெற்றியைக் குடபுலவியனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
5 இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம்என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே; மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல
அம்புசென்று இறுத்த அரும்புண் யானைத்
10 தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்குஎன,
15 மூதில் பெண்டிர் கசிந்துஅழ, நாணிக்
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே.

அருஞ்சொற்பொருள்:
1. இமிழல் = ஒலித்தல்; கிடக்கை = உலகம்; ஈண்டுதல் = செறிதல்.2. தலை = இடம்; மயங்குதல் = கலத்தல், கூடுதல். 4. தூக்குதல் = ஆராய்தல், ஒப்பு நோக்குதல். 5. இரு = பெரிய. 6. அடார் = விலங்குகளை அகப்படுத்தும் பொறி; போன்ம் = போலும். 7. முயங்குதல் = தழுவுதல். மயங்கி = கலங்கி. 8. இறுத்தல் = தங்குதல்; குரீஇ = குருவி. 10. தூம்பு = இடுக்கு, துளை; தடக்கை = பெரிய கை, வளைந்த கை; துமித்தல் = அறுத்தல். 11. நாஞ்சில் = கலப்பை. 12. எறிதல் = அறுத்தல்; படுத்தல் = வீழ்த்துதல்; வலம் = வெற்றி, வலி. 13. எந்தை = எம்+தந்தை = எம் தலைவன். 14. விறல் = வெற்றி. 15. மூதில் = மறக்குடி; கசிதல் = உருகுதல், நெகிழ்தல். 16. கண்ணோடிய = இரங்கிய; வெரு = அச்சம்; பறந்தலை = போர்க்களம். 17. கடத்தல் = வெல்லுதல். 18. கழூஉ = கழுவி; கவைஇய = அகத்திட்ட.

கொண்டு கூட்டு: செழிய, கடந்தோய், இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும் போன்ம் என நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பை யான் விரும்பி முயங்கினேன் அல்லனோ எனக் கூட்டுக.

உரை: ஒலிக்குங் கடலால் சூழப்பட்ட திரண்ட, அகன்ற உலகில் தமிழர்களின் படைகள் தலையாலங்கானத்தில் கைகலந்தன. அப்போரில், பல உயிர்களைத் தனியன் ஒருவனாகக் கொன்ற உனக்கு கூற்றுவன் ஒப்பானவனா என்று ஆராயத்தக்க அளவிற்கு உன் வெற்றிக்குக் காரணமான வேலையுடைய செழிய! வயல்களிலிருந்து தம் நிலை கலங்கி மலைக்குச் சென்று தங்கிய குருவிக் கூட்டம் போல் உடலெங்கும் அம்புகள் துளைத்துத் தங்கியதால் பொறுத்தற்கரிய புண்களைக் கொண்ட யானையின் துளையுடைய பெரிய தும்பிக்கை வாளால் வெட்டப்பட்டு நிலத்தில் கலப்பையைப்போல் புரளுகிறது. அவ்வாறு தும்பிக்கையை வாளால் வெட்டிய வீர இளைஞர்கள் தம் தந்தையரோடு போர்க்களத்தில் இறந்து கிடக்கின்றனர். அதைக் கண்ட மறக்குல மகளிர், இத்தகைய வெற்றியும் நமக்குக் கிடைத்ததோ என்று கண் கசிந்து அழுகின்றனர். அஞ்சத்தக்க போர்க்களத்தில் எழுவரின் நல்ல வலிமையை அழித்தாய். உன் அழிக்கும் ஆற்றலைக் கண்டு கூற்றுவன் வருந்தி நாணுகிறான்.

பெரிய புலியைப் பிடிக்கும் வேடன் மாட்டிய அடார் என்னும் கல்லைப் போன்ற மார்பினன் என்று எண்ணி, கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த உன் மார்பை விரும்பித் தழுவினேன் அல்லனோ?

No comments:

Post a Comment