பாடியவர்: இரும்பிடர்த் தலையார். இப்பாடலில், யானையின் பெரிய கழுத்தை “இரும்பிடர்த்தலை” என்று புலவர் கூறுவது குறித்து இப்பாடலை இயற்றிய புலவர் இரும்பிடர்த்தலையார் என்று அழைக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் கரிகாலனின் மாமன் என்றும் கருதப்படுகிறார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி. கருங்கை என்பதற்கு வலிய கை என்று பொருள். இப்பாடலில், இப்பாண்டிய மன்னனை இரும்பிடர்த்தலையார் “கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி” என்று குறிப்பிடுகிறார். இவன் இயற்பெயர் எது என்பது ஆய்வுக்குரியது. இப்பாடலிலிருந்து இவன் கொடையிலும் வீரத்திலும் சிறந்தவன் என்று தெரிய வருகிறது. இவனைப் பற்றிய வேறு செய்திகள் எதுவும் வரலாற்றில் காணப்படவில்லை.
பாடலின் பின்னணி: இப்பாடலில், இரும்பிடர்த்தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியின் முன்னோர்களின் பெருமையையும் அவன் வலிமையையும் வண்மயையும் சிறப்பித்துக் கூறி, அவன் சொன்ன சொல் தவறாது இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
5 தவிரா ஈகைக், கவுரியர் மருக!
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடா அத்து
எயிறு படையாக எயிற்கதவு இடாஅக்
10 கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
15 பொலங் கழற்காற் புலர்சாந்தின்
விலங்ககன்ற வியன்மார்ப!
ஊர்இல்ல, உயவுஅரிய,
நீர்இல்ல, நீள்இடைய,
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
20 செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
25 முன்னம் முகத்தின் உணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
அருஞ்சொற்பொருள்:
1. உவவு = முழு நிலா; ஓங்கல் = உயர்ந்த. 2. நிலவுதல் = நிலைத்திருத்தல்; வரைப்பு = எல்லை; நிழற்றுதல் = கருணை காட்டுதல். 3. ஏமம் = காவல்; இழும் = ஓசை. 4. நேமி = ஆட்சிச் சக்கரம்; உய்த்தல் = செலுத்தல்; நேஎ நெஞ்சு = கருணையுள்ள மனம். 5. கவுரியர் = பாண்டியன்; மருகன் = வழித்தோன்றல். 6. செயிர் = குற்றம்; சேயிழை = சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண். 7. ஓடை = நெற்றிப் பட்டம்; புகர் = புள்ளி; நுதல் = நெற்றி. 8. துன் = நெருங்கு; திறல் = வலிமை; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம்; கடாஅத்த = மதத்தையுடைய. 9. எயிறு = தந்தம்; எயில் = மதில்; இடுதல் = குத்துதல். 10. மருங்கு = பக்கம். 11. இரு = பெரிய; பிடர் = கழுத்தின் பின்புறம். 12. மருந்து இல் = பரிகாரமில்லாத; சாயா = சளைக்காத. 13. கருங்கை = வலிய கை; வழுதி = பாண்டியன். 15. பொலம் = பொன்; புலர்தல் = உலர்தல். 16. விலங்குதல் = விலகல்; வியல் = பரந்த. 17. உயவு = வருத்தம். 18. இடை = வழி. 19. பார்வல் = பகைவர் வரவைப் பார்த்திருக்கும் அரணுச்சி; கவிதல் = வளைதல். 20. செம்மை = நன்மை, பெருமை, வளைவின்மை; தொடை = அம்பெய்தல்; வன்கண் = கொடுமை. 21. வம்பு = புதுமை; பதுக்கை = கற்குவியல். 22. திருந்துதல் = அழகு படுதல் (அழகிய); சிறை = சிறகு; உயவும் = வருத்தும். 23. உன்ன மரம் = இலவ மரம்; கவலை = பல தெருக்கள் கூடுமிடம், இரண்டாகப் பிரியும் பாதை. 24. நசை = ஆசை; வேட்கை = விருப்பம், அன்பு. 26. வன்மை = வல்ல தன்மை
கொண்டு கூட்டு: மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர் வருவர், அஃது அவர் இன்மை தீர்த்தல் வன்மையான்; நிலம் பெயரினும் நின்சொல் பெயரல் எனக் கூட்டுக.
உரை: நிலைத்து நிற்கும் கடலை எல்லையாகக் கொண்ட நிலத்திற்கு நிழல் தரும் முழு மதி வடிவில் உள்ள உயர்ந்த வெண்கொற்றக் குடையோடும், பாதுகாப்பான முரசின் முழக்கத்தோடும் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்திய, கருணையுள்ள மனமும் நீங்காத கொடையும் கொண்ட பாண்டியரின் வழித்தோன்றலே! குற்றமற்ற கற்பும் சிறந்த அணிகலன்களும் உடையவளின் கணவனே! பொன்னாலாகிய பட்டத்தை அணிந்த புள்ளிகளுடைய நெற்றியும் எவரும் அணுகுதற்கரிய வலிமையும் மணம் கமழும் மதநீரும் கொண்டது உன் யானை. அந்த யானை தன் கொம்புகளைப் படைகருவிகளாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தி வீழ்த்தும். கயிற்றால் கட்டப்பட்ட கவிழ்ந்த மணிகள் உள்ள பக்கங்களையும் பெரிய தும்பிக்கையையும் உடைய அந்த யானையின் பெரிய கழுத்தின் மேலிருந்து, தனக்கு மாற்றில்லாத கூற்றுவனைப் போல் பொறுத்தற்கரிய கொலைத் தொழிலில் சளைக்காத, உன் வலிய கையில் ஒளி பொருந்திய வாளையுடைய பெரும்புகழ் வாய்ந்த பாண்டியனே! கால்களில் பொன்னாலான கழல்களும், உலர்ந்த சந்தனம் பூசிய பரந்து அகன்ற மார்பும் உடையவனே!
உன்னைக் காண்பதற்கு வரும் வழியில் ஊர்கள் இல்லை; அது பொறுத்தற்கரிய வருத்ததைத் தரும் நீரில்லாத நீண்ட வழி; அவ்வழியே வருவோரை அரண்களின் உச்சியிலிருந்து கையை நெற்றியில் வளைத்து வைத்துக் கண்களால் பார்த்துக் குறி தவறாது அம்பு எய்யும் கள்வரின் அம்புகளால் அடிபட்டு இறந்தோரின் உடல்களை மூடியிருக்கும் கற்குவியல்கள் உள்ளன. அழகிய சிறகுகளும் வளைந்த வாயும் உடைய பருந்துகள் இறந்தோர் உடலைத் தின்ன முடியாமல் இலவ மரத்தில் இருந்து வருந்துகின்றன. இலவ மரங்கள் நிறைந்த கடத்தற்கரிய பல பிரிவுகளுடைய பாதைகள் வழியாக உன்னைக் காண்பதற்கு இரவலர் வருகின்றனர். இரவலர்களின் உள்ளக் குறிப்பை அவர்கள் முகத்தால் உணர்ந்து அவர்களின் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உனக்கு இருப்பதால்தான் அவர்கள் பல இன்னல்களையும் கடந்து உன்னைக் காண வருகிறார்கள். ஆகவே, நிலம் பெயர்ந்தாலும், நீ உன் சொல்லிலிருந்து மாறாமல் இருப்பாயாக.
No comments:
Post a Comment