Monday, December 6, 2010

7. வளநாடும் வற்றிவிடும்!

பாடியவர்: கருங்குழல் ஆதனார் (7, 224). ஆதனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் முதியவராக இருப்பினும், இவர் தலைமுடி கருமை நிறத்தோடு இருந்ததால் இவர் கருங்குழல் ஆதனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாடப்பட்டோன்: கரிகால் வளவன் (7, 65, 66, 224). தமிழ் நாட்டை ஆட்சி புரிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் மிகவும் சிறந்தவனாகக் கருதப்படுபவன் கரிகாலன். இவன் ஆட்சிக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் கூறுகிறார். இவன் திருமாவளவன் என்றும் கரிகால் பெருவளத்தான் என்றும் அழைக்கப்பட்டான். இவன் சோழன் உருவப் ப்ஃறேர் இளஞ்சேட் சென்னி என்ற சோழ மன்னனின் மகன்.

கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது இவன் தந்தையின் பகைவர்கள் இவன் வசித்த அரண்மனைக்குத் தீ வைத்தனர். அத்தீயிலிருந்து இவனை இவன் மாமன் இரும்பிடர்த்தலையார் காப்பாற்றியதாகவும், அரண்மனையிலிருந்து தப்பிய பொழுது இவன் கால் தீயில் கருகிக் கருமை நிறமானதால் இவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகிறது.

இவன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு சோழ நாட்டில் மன்னர் இல்லாத நிலை எழுந்தது. நாட்டை ஆட்சி செய்வதற்கு மனனன் இல்லையென்றால் அரண்மனை யானை யாருக்கு மாலையச் சூட்டுகிறதோ அவரை மன்னராக ஏற்றுக் கொள்வது சோழ நாட்டில் நிலவிய வழக்கம். அவ்வழக்குக்கேற்ப, அரண்மனை யானை கரிகாலனுக்கு மாலையை அணிவித்ததால் இவன் சோழ நாட்டிற்கு மன்னனானான் என்று ஒரு கதை உள்ளது.

கரிகாலன் ஒரு சிறந்த மன்னன் மட்டுமல்லாமல் ஒரு சிரந்த வீரனாகவும் விளங்கினான். வெண்ணி ( தஞ்சாவூருக்கு 15 மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊர்) என்ற ஊரில் இரண்டு போர்களில் வெற்றி கண்டான். முதற்போரில் சேர மன்னன் பெருஞ்சேரலாதனை வென்றான். பாண்டியனும் வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு குறுநிலமன்னர்களும் சேரனுக்கு உதவியாகப் போர் புரிந்தார்கள். அவர்கள் அனைவரையும் கரிகாலன் வென்றான். போரில் தோல்வியுற்ற பெருஞ் சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான். வெண்ணியில் நடைபெற்ற மற்றொரு போரில் கரிகாலன் வெற்றி அடைந்த பிறகு தமிழகம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உள்ளாக்கினான். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடை பெற்ற போரில் ஒன்பது அரசர்களை வென்றான்.

கரிகாலனிடம் ஒப்புயர்வற்ற கப்பற்படை இருந்தது. அவன் தன் கப்பற்படையின் உதவியோடு இலங்கை மன்னனை வென்று அங்கிருந்து பலரைக் கைது செய்து தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்து காவிரிக்கரையைச் செப்பனிடுவதற்குப் பயன்படுத்தினான். காவிரியில் கல்லணையைக் கட்டி உழவர்களுக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்க்கு வழி வகுத்தான்.

கரிகாலன் பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆட்சி புரிந்தான். இவன் இமயம் வரை சென்று இடையிலுள்ள மன்னர்களை வென்றான் என்றும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, காஞ்சிபுராணம் ஆகிய நூல்களில் இவனைப் பற்றிய பல அரிய செய்திகள் உள்ளன. மற்றும், முடத்தாமக் கண்ணியர் இயற்றிய பொருநராற்றுப்படைக்கும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலைக்கும் பாட்டுடைத் தலைவன் கரிகால் வளவன் என்பது குறிப்பிடத்தக்கது.

கரிகாலனுடைய குடும்பத்தைப் பற்றித் தெளிவான தகவல்கள் இல்லை. சில வரலாற்று ஆசிரியர்கள், கரிகாலனுக்கு ஆண் வாரிசு இல்லை என்றும், ஆதிமந்தி என்று ஒரு மகள் மட்டும் இருந்ததாகவும், அவள் ஆட்டனத்தி என்னும் சேர இளவரசனை மணந்ததாகவும் கருதுகின்றனர். குறுந்தொகையின் 31-ஆம் பாடல் இயற்றிய ஆட்டனத்திதான் கரிகாலனின் மகள் என்றும் கூறுகின்றனர். வேறுசிலர், கரிகாலனுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்ததாகவும், மணக்கிள்ளிக்கு நற்சோனை என்று ஒரு மகள் இருந்ததாகவும், அவள் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணந்ததாகவும், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளும், அவருடைய தமையன் சேரன் செங்குட்டுவனும், இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்தவர்கள் என்றும் கூறுகின்றனர்.

பாடலின் பின்னணி: சோழன் கரிகாலனின் பகைவர்களின் நாடுகள் புதிய வருவாய் நிரம்பி மக்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால், கரிகாலன் இரவும் பகலும் தன் பகைவர்களை அழிக்கக் கருதி, அவர்களின் நாடுகளைச் சுட்டெரித்தான். ஆகவே, அந்நாடுகள் நலமிழந்து கெட்டன. இப்பாடலில், பகைவர்களின் நாடுகள் கரிகாலனால் அழிக்கப்படுவதைப் புலவர் கருங்குழல் ஆதனார் சுட்டிக் காட்டுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்றவள்ளை: மழபுல வஞ்சியும் ஆகும்.
கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.
மழபுல வஞ்சி. பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.

களிறு கடைஇயதாள்
கழல்உரீஇய திருந்துஅடிக்
கணைபொருது கவிவண்கையால்
கண்ஒளிர்வரூஉம் கவின்சாபத்து
5 மாமறுத்த மலர்மார்பின்
தோல்பெயரிய எறுழ்முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை ஆகலின், நல்ல
10 இல்ல ஆகுபவால், இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின்பிறர் அகன்றலை நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. கடைஇ = செலுத்தி; கடைஇய = செலுத்திய; தாள் = கால். 2. உரீஇ = உருவி; திருந்துதல் = ஒழுங்குபடுதல், அழகுபடுதல். 3. பொருதல் = பொருந்தல்; பொருது = போர்செய்து; கவிதல் = வளைதல்; வண்மை = வள்ளல் தன்மை. 4. கவின் = அழகிய; சாபம் = வில். 5. மா = திருமகள், பெரிய, பரந்த; மறுத்த = நீக்கிய. 6. தோல் = யானை; பெயர்த்தல் = நிலை மாறச் செய்தல்; எறுழ் = வலிமை; முன்பு = வலிமை. 7. எல்லை = பகற்பொழுது. 8. விளக்கம் = ஒளி; விளி = கூப்பிடு; கம்பலை = ஒலி. 9. மேவல் = ஆசை. 10. இயல் = இலக்கணம். 11. பூசல் = பெரிதொலித்தல், பலரறிய வெளிப்படுதல் (உடைப்பு); மறுத்தல் = நீக்கல், தடுத்தல். 12. செறுத்தல் = அடக்குதல்; யாணர் = புது வருவாய். 13. வைப்பு = ஊர்; அகலல் = விரிதல்; தலை = இடம்.

கொண்டு கூட்டு: தாளையும் அடியையும் கையையும் சாபத்தையும் மார்பையும் முன்பையும் உடைய வளவ, நீ கொள்ளை மேவலை. ஆகலின், யாணரையும் வைப்பினையுமுடைய பிறர் நாடு நல்ல இல்ல ஆகுப எனக் கூட்டுக.

உரை: யானையைச் செலுத்திய கால்களும் வீரக்கழல்கள் உராய்ந்த அடிகளும், அம்பு தொடுத்துக் குவிந்த கையும், கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வில்லும், திருமகள் விரும்பும் அகன்ற மார்பும், யானையை வெல்லும் வலிமையும் உடையவனே! இரவு பகல் என்று கருதாமல் பகவரின் ஊரைச் சுடும் தீயின் ஒளியில், அங்குள்ளவர்கள் கதறி அழுது ஒலி யெழுப்பமாறு அவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நீ விருப்பமுடையவன். ஆகவே, குளிர்ந்த நீர் பெருகியோடும் உடைப்புகளை மண்ணால் அடைக்காமல் மீனால் அடைக்கும் புதிய வருவாயினையுடைய பயனுள்ள ஊர்களையுடைய அகன்ற இடங்களுடன் கூடிய உன் பகவர்களின் நாட்டில் நல்ல பொருள்கள் இல்லாமல் போயின. நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய வளவனே!

3 comments:

  1. மிக அருமை... தொடருங்கள் உங்கள் சேவையை.

    ReplyDelete
  2. திரு. இராசேந்திரன் தமிழரசு அவர்களுக்கு,

    நன்றி.

    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete