Wednesday, December 29, 2010

21. புகழ்சால் தோன்றல்

பாடியவர்: ஐயூர் மூலங்கிழார் (21). இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் ஐயூர் மூலம் என்ற ஊரைச் சார்ந்தவராதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பாடலில், இவர் வேங்கை மார்பனை வென்ற கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் புகழ்ந்து பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி. கானப்பேர் என்னும் ஊர் தற்காலத்தில் காளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளது. கானப்பேர் என்ற ஊர் வேங்கை மார்பன் என்ற மன்னனால் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது. அது பல அரிய அரண்களை யுடைய ஊராகச் சிறந்து விளங்கியது. அந்த அரண்களை எல்லாம் கடந்து, வேங்கை மார்பனை வெற்றிகொண்டதால் இப்பாண்டிய மன்னன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற பெயரால் சிறப்பிக்கப்பட்டான்.

இவன் ஒருபுகழ்பெற்ற அரசன் மட்டுமல்லாமல், தமிழில் மிகுந்த ஆர்வமும் புலமையும் உடையவனாக இருத்ததாக வரலாறு கூறுகிறது. இவன் அகநானூற்றைத் தொகுப்பித்ததாகவும், இவன் காலத்தில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் மகன் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் அதற்குத் தகுந்த சான்றுகள் இல்லை என்று கருதுகிறார்கள். இவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடையே ஒற்றுமை காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: கானப்பேரெயிலின் அரண்களின் சிறப்பையும், அந்த ஊருக்கு உரியவனான வேங்கை மார்பன், உக்கிரப் பெருவழுதியிடம் தோல்வியுற்ற பிறகு, தன் ஊரை மீட்பது, உலையில் காய்ச்சிய இரும்பின் மீது சொரிந்த நீரை மீட்பது போன்ற அரிய செயல் என்று எண்ணி வருந்துவதாககவும் இப்பாடலில், ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
5 கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்;
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
வேங்கை மார்பின் இரங்க, வைகலும்
10 ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே.

அருஞ்சொற்பொருள்:
1. இறந்த = கடந்த; சால் = மிகுதி; தோன்றல் = அரசன், தலைவன். 2.வரை = எல்லை, நிறைவு; குண்டு = ஆழம்; கண் = இடம். 3. தோய்தல் = புணரல், உறைதல்; புரிசை = மதில்; விசும்பு = ஆகாயம். 4. ஞாயில் = மதிலில் அம்பெய்தற்குரிய துளை. 5. கல்லுதல் = துருவுதல்; பயில்தல் = செறிதல்; கடிமிளை = காவற்காடு. 6. குறும்பு = அரண்; உடுத்தல் = சூழ்தல்; எயில் = அரண். 9. இரங்க = வருந்த; வைகல் = நாள். 10. ஆடு = வெற்றி; குழைந்த = குழைத்த = தழைத்த; தழைத்தல் = மிகுதல், செழிதல். 11. முற்றுதல் = கொள்ளுதல்;கொற்றம் = வெற்றி. 13. பூத்தல் = பொலிதல்.

கொண்டு கூட்டு: கானப்பேர் எயில் மீட்டற்கு அரிது என வேங்கை மார்பன் இரங்கப் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே! பூக்க நின் வேலே எனக் கூட்டுக.

உரை: உன்னைப் பாடும் புலவர்களின் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட புகழமைந்த அரசே! நிலத்தின் எல்லையைக் கடந்த ஆழமான பாதாளத்தில் உள்ள அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் விண்மீன்கள் பூத்ததுபோல் காட்சியளிக்கும் அம்பு எய்தும் துளைகளும், கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளும், அணுகுதற்கரிய சிற்றரண்களும் உடையது கானப்பேர். அத்தகைய அரண்களை யுடைய கானப்பேரை உன்னிடமிருந்து மீட்பது, வலிய கையையுடைய கொல்லன், எரியும் தீயில் காய்ச்சிய இரும்பில் சொரியப்பட்ட நீரை மீட்பது எவ்வளவு அரிதோ அதைவிட அரிது என்று வேங்கை மார்பன் வருந்த, நாள்தோறும் வெற்றிமேல் வெற்றி பெறுவதற்காக தும்பை மலர்கள் நிறைந்த மாலைகளை அணிபவனே! புலவர் பாடும் புறத்திணைக்குரிய துறைகளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளைச் செயலில் செய்து முடித்த வெற்றி வேந்தனே! உன்னை மதியாத பகைவர்கள் தம்முடைய புகழுடன் அழிய, உன் வேல் புகழுடன் விளங்கி வெற்றியுடன் பொலிவதாக.

சிறப்புக் குறிப்பு: புறத்திணையில் அடங்கிய துறைகள் எல்லாம் போரின் வேறுவேறு நிலைகளைப் பற்றிக் கூறுபவை. அவற்றில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தையும் செயல்முறையில் செய்து முடித்தவன் உக்கிரப் பெருவழுதி என்பதைப் ”புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே” என்று இலக்கிய நயத்துடன் ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார். உக்கிரப் பெருவழுதி வெற்றிக்கும் வீரத்திற்கும் ஒருசிறந்த எடுத்துகாட்டாக இருந்தான் என்று ஐயூர் மூலங்கிழார் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

2 comments:

  1. மிகவும் அருமை அய்யா!!
    இதைப்போல் நிறைய நீங்கள் கொடுக்கவேண்டும்
    எங்கள் அறிவு நிறைய!
    sakthi

    ReplyDelete