பாடியவர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்டான். அங்கே, தன் அரண்மனையில் இருந்த சேர மன்னன், சோழன் முற்றுகையிட்டதையும், சோழனின் வீரர்கள் தன்நாட்டில் உள்ள காவல் மரங்களை வெட்டுவதையும் பொருட்படுத்தாமல் தன் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அதைக் கண்ட புலவர் ஆலத்தூர் கிழார், “போருக்கு வராமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடக்கும் சேரனோடு போர் புரிவது உன்னைப் போன்ற வீரனுக்கு நாணத்தக்க செயலாகும்” என்று கிள்ளிவளவனிடம் கூறிப் போரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வதை இப்பாடலில் காணலாம்.
திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.
அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீஅளந் தறிதிநின் புரைமை வார்கோல்
செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
5 தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
10 நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.
அருஞ்சொற்பொருள்:
1. அடுநை = அழிப்பாய்; விடுநை = அழிக்காமல் விடுவாய். 2. புரைமை = உயர்ச்சி (பெருமை); வார் = நுண்மை. 3. செறி = செறிந்த; அரி = சிலம்புப் பரல். 4. கழங்கு = கழற்சிக்காய். தெற்றி = மேட்டிடம். 6. கருமை = வலிமை. 7. நவியம் = கோடரி. 8. வீ = பூ; சினை = மரக்கொம்பு; புலம்பு = தனிமை; காவு = காடு. 9. கடி = காவல்; தடிதல் = வெட்டல். 10. வரை = எல்லை; இயம்பல் = ஒலித்தல். 12. சிலை = வில்; தார் = மாலை; கறங்கல் = ஒலித்தல். 13. மலைத்தல் = பொருதல்; தகவு = தகுதி.
கொண்டு கூட்டு: கடிமரம் தடியும் ஓசை தன் மனை இயம்ப இனிதிருந்த வேந்தனொடு மலைத்தனை எண்பது நாணுத்தகவுடைத்து; அதனால், அடுநையாயினும் விடுநையாயினும், நின் புரைமை நீ அளந்து அறிதி எனக் கூட்டுக.
உரை: பரல்கள் செறிந்த சிலம்பையும், சித்திரவேலைப்பாடுகள் அமைந்த சிறிய வளையல்கலையும் அணிந்த மகளிர், பொன்னால் செய்யபட்ட கழற்காய்களை வைத்து ஆன் பொருநை ஆற்றங்கரையில், திண்ணைபோல் உயர்ந்த மணல்மேடுகளில் இருந்து விளையாடி வெண்ணிறமான ஆற்று மணலைச் சிதைக்கிறார்கள். வலிய கைகளையுடைய கொல்லன், அரத்தால் கூர்மையாகச் செய்த, நெடிய காம்புடன் கூடிய கோடரியால் காவல் மரங்களை வெட்டுவதால், நின்ற நிலையிலிருந்து கலங்கிய பூமணம் கமழும் அந்த மரங்களின் நெடிய கிளைகள் துண்டாகுகின்றன. காடுகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தன் ஊரில் உள்ள நெடிய மதில்களை அரணாகக்கொண்ட அரண்மனையில் ஒலிக்க, அங்கே, அதைப்பற்றிக் கவலையின்றி சேரன் இனிதே இருக்கிறான். வானவில் போன்ற வண்ணங்கள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முரசு ஒலிக்க, அவனுடன் இங்கே போர்செய்வது வெட்கப்பட வேண்டிய செயல். ஆகவே, உன் பகைவனாகிய சேரனை, நீ கொன்றாலும், கொல்லாவிட்டாலும் உன் செயலால் உனக்கு வரும் பெருமையை நீயே ஆராய்ந்து அறிந்து கொள்.
சிறப்புக் குறிப்பு: பிறரை வெற்றி கொள்ள நிற்பவனை சமாதானப்படுத்தும் பாடல்கள் துணைவஞ்சி என்ற துறையில் அடங்கும். சேரனை வெல்ல நினைத்து அவனுடன் போர் புரியவிருக்கும் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறிப் போரை நிறுத்துமாறு ஆலத்தூர் கிழார் இப்பாடலில் கூறுவதால், இப்பாடல் துணை வஞ்சி என்ற துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
இப்பாடலில், அரண்மனைக்கு அருகில் உள்ள காவல் மரங்களை வெட்டும் இடத்தில், சிறுமிகள் அச்சமின்றி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சேரன் அரண்மனையை விட்டு வெளிய வந்து போர் புரியவில்லை என்பது, அவன் வீரமற்றவன் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment