Wednesday, February 9, 2011

37. புறவும் போரும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார் (37, 39, 126, 174, 226, 280, 383). இவர் ஒருபெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த கொற்கையின் அருகாமையில் உள்ள மாறோக்கம் என்ற ஊரைச் சார்ந்தவர். பெண்கள் அடையும் பசலை நோயைப்பற்றி நயமுறப் பாடியதால் இவர் நப்பசலையார் என்று அழைக்கப்பட்டார் என்று கருதப்படுகிறது. நப்பசலையார் என்பது இவர் இயற்பெயர் என்றும் சிலர் கூறுவர்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன், நல்ல அரண்களுள்ள ஊரில் பகைமன்னன் இருப்பதை அறிந்தும் அந்நகரை அஞ்சாது அழிக்கும் ஆற்றல் உடையவன் என்று அவனுடைய வலிமையையும், வீரத்தையும் மாறோக்கத்து நப்பசலையார் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரச வாகை; முதல் வஞ்சியும் ஆகும்.
அரச வாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
முதல் வஞ்சி: பழம்புகழ் வாய்ந்த முன்னோர் சிறப்புக் கூறுதல்.

நஞ்சுடை வால்எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
5 புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
10 கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!

அருஞ்சொற்பொருள்:
1. வால் = வெண்மை; எயிறு = பல்; ஐ = அழகு. 2. வெம்பல் = சினத்தல்; திறல் = வெற்றி, வலி; புக்கல் = புகுதல்; என = என்று. 3. விசும்பு = ஆகாயம்; திருகி = முறுகி; முறுகல் = வேகங் கொள்ளுதல். 4. விடர் = மலைப்பிளப்பு, குகை; உரும் = இடி. 5.புள் = பறவை; புன்கண் = துன்பம். 6. செம்பியன் = சோழன்; மருகன் = வழித்தோன்றல். 7. கராம் = ஆண் முதலை, முதலையுள் ஒரு வகை; கலித்த = தழைத்த (நிறைந்த); குண்டு = ஆழம். 8. குட்டம் = ஆழம், மடு. 9. யாமம் = நள்ளிரவு; கதூஉம் = கவ்வும், பற்றும். 10. கடு = விரைவு; முரண் = வலிமை; நெடு = மிகுதி; இலஞ்சி = நீர்நிலை, மடு. 11. உறழ்வு = செறிவு; புரிசை = மதில்; செம்மல் = தலைமை; மூதூர் = பழைமையான ஊர். 12. வம்பு = கச்சு (முகபடாம்). 13. சிதைத்தல் = அழித்தல். 14. நெடுந்தகை = பெரியோன்; செரு = போர்.

கொண்டு கூட்டு: செம்பியன் மருக! நெடுந்தகை! விடரகத்து நாகம் புக்கென உரும்எறிந் தாங்கு, மூதூரகத்து வேந்துண்மையின் செருவத்துச் சிதைத்தல் வல்லை எனக் கூட்டுக.

உரை: புறாவிற்கு வந்த துன்பத்தைத் தீர்த்த, ஓளி பொருந்திய வேலையுடைய, சினங்கொண்ட படையையுடைய செம்பியன் வழித்தோன்றலே! நஞ்சுடைய வெண்ணிறமான பற்களும், அழகிய தலையும், வலிமையும், சினமுமுடைய பாம்பு ஒன்று மலையிலிருந்த குகையில் புகுந்தது. அச்சமயம், வானமே தீப்பிடித்ததுபோல், வேகத்துடன், பசுமையான கொடிகள் நிறைந்த அந்த மலைக்குகையின் மேல் இடிவிழுந்து அந்த நாகத்தை அழித்தது. அதுபோல், முதலைகள் நிரம்பிய ஆழமான அகழியின் இருண்ட இடங்களில், அங்கிருந்த முதலைகள் ஒன்றாகக் கூடி, நள்ளிரவில் காவல் புரிவோரின் நிழலைக் கவ்வும் அந்த அகழிக்கு அருகே உள்ள செம்பால் புனையப்பட்ட மதிலையுடைய, தலைமை பொருந்திய பழைய ஊரில் கச்சு அணிந்த யானைகளுடைய இடத்தில் அரசன் உள்ளான் என்ற காரணத்தால், அவ்விடத்தில் உள்ளவை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது, நீ அவற்றைப் போரில் அழிக்கும் ஆற்றல் உடையவன்.

சிறப்புக் குறிப்பு: அரசனது இயல்பை எடுத்துரைப்பதால் இப்பாடல் ”அரச வாகை” என்ற துறையைச் சார்ந்தது. மற்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோர்களில் ஒருவனாகிய செம்பியனின் சிறப்பைக் கூறுவதால், இப்பாடல் ”முதல் வஞ்சி” என்ற துறையையும் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், பாம்பு குகைக்குள் இருப்பது பகை மன்னன் அரண்மனைக்குள் இருப்பதற்கும், இடியினால் பாம்பு அழிக்கப்படுவது கிள்ளிவளவனால் பகைமன்னன் அழிக்கப்படுவதற்கும் உவமையாகும்.

ஒரு பருந்தால் துரத்தப்பட்ட புறா ஒன்று செம்பியன் என்று அழைக்கப்பட்ட சிபி என்ற சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தது. அப்புறாவுக்குப் பதிலாக, அதன் எடைக்கு எடை ஈடாகத் தன் தசையை அளிப்பதாகவும் அந்தப் புறாவை இன்னலுக்குள்ளாக்க வேண்டாம் என்றும் அந்தப் பருந்தை சிபி வேண்டிக்கொண்டான். அந்தப் பருந்து அதற்கு சம்மதித்தது. புறாவைத் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு எதிராக சிபி தன் உடலிலிருந்து தன் தசையை வெட்டிவைத்தான். சிபி, தன் தசைகளை எவ்வளவு வெட்டிவைத்தாலும் புறாவின் எடைக்கு சமனாகவில்லை. கடைசியாக, சிபி, தானே அந்தத் தராசில் புகுந்தான். பின்னர், அந்தப் புறாவும் அதைத் துரத்தி வந்த பருந்தும் தாங்கள் தேவர்கள் என்பதையும் அவர்கள் சிபியைச் சோதிப்பதற்காக அவ்வறு வந்ததாகவும் கூறினர். இது ஒரு கதை. இந்தக் கதை தமிழ் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வந்திருக்கிறது. மாறோக்கத்து நப்பசலையார் புறநானூற்றுப் பாடல் 39-இல், “ புறவின் அல்லல் சொல்லிய” என்று மீண்டும் இந்தக் கதையை நினைவு கூர்கிறார். புலவர் தாமப்பல் கண்ணனார், பாடல் 43-இல், “தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக” என்று சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானுக்கு அவனுடைய முன்னோர்களின் ஒருவனான சிபி, புறாவைக் காப்பாற்றியதை நினைவுபடுத்துகிறார். புறநானூற்றுப் பாடல் 46 –இல் கோவூர் கிழார் “புறாவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!” என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் கூறுவதையும் காண்க. மற்றும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சென்று வழக்குரைத்த போது, இப்பாடலில் உள்ள “புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” என்ற சொற்றடரை இளங்கோவடிகள் பயன்படுத்தியிருப்பதையும் காண்க.

No comments:

Post a Comment