Wednesday, February 9, 2011

39. புகழினும் சிறந்த சிறப்பு!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 37-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவனின் முன்னோர்கள் ஈகையையும் பகைவர்களை வெற்றிகொள்வதையும் தங்கள் மரபாகக் கொண்டவர்கள். ஆகையால், கிள்ளிவளவனின் ஈகைச் சிறப்பும் வெற்றிகளும் அவனுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பு அல்ல. அவன் தலைநகராகிய உறையூரில் எப்பொழுதும் முறையாக ஆட்சி நடைபெறுவதால் அதுவும் புகழ்தற்குரிய புதிய செயல் அல்ல. ஆனால், அண்மையில் அவன் சேரனின் வஞ்சி நகரத்தை வென்றான். அது மிகப் பெரிய வெற்றி. அதை எப்படிப் புகழ்ந்து பாடுவது என்று தெரியாமால் மாறோக்கத்து நப்பசலையார் திகைப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
5 ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
10 முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ!
யாங்கனம் மொழிகோ யானே? ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
15 இமையம் சூட்டிய ஏம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே.

அருஞ்சொற்பொருள்:
1. சொல்லிய = “களைய”; கறை = உரல், கருங்காலி. 2. வால் = வெண்மை; மருப்பு = கொம்பு; எறித்தல் = இட்டமைத்தல். 3. கோல் = துலாக்கோல்; நிறை = நிறுத்தல் அளவு; மருகன் = வழித்தோன்றல். 4. சார்தல் = சென்றடைதல் (நெருங்குதல்). 5. ஒன்னார் = பகைவர்; உட்குதல் = அஞ்சுதல்; துன்னுதல் = அணுகுதல். 6. தூங்கெயில் = ஆகாயக்கோட்டை; எறிந்த = அழித்த; ஊங்கணோர் = முன்னுள்ளோர். 7. அடுதல் = வெல்லுதல். 8. உறந்தை = உறையூர். 11. எழு = எழுந்த; சமம் = போர்; எழு = கணைய மரம்; திணி = செறிந்த. 12. கலிமான் = குதிரை. 14. பொன் = ஒளி; கோடு = சிகரம். 15. ஏமம் = காவல். 16. மாண் = சிறந்த; வினை = செயல் (வேலைப்பாடு); வானவன் = சேரன்; தொலைய = அழிய. 17. வாட்டுதல் = வருத்துதல், கெடுத்தல், அழித்தல். 18. பீடு = பெருமை; தாள் = முயற்சி, கால்.

கொண்டு கூட்டு: நிறை துலாஅம் புக்கோன் மருக, நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழும் அன்று; தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின் புகழும் அன்று; உறந்தை அவையத்து அறம்நின்று நிலையிற்றாதலின்,முறைமை நின் புகழும் அன்று; கலிமான் வளவ, நின் தாள் பாடுங்கால் யான் யாங்கனம் மொழிகோ எனக் கூட்டுக.

உரை: புறாவின் துன்பத்தைக் களைய வேண்டி, உரல் போன்ற பாதங்களையுடைய யானையின் வெண்ணிறமான தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட துலாக்கோலில் புகுந்து தன்னையே அளித்த செம்பியனின் வழித்தோன்றலே! அத்தகைய மரபில் வந்தவனாதலால், ஈதல் உனக்குப் புகழ் தருவது அன்று. பகைவர்கள் நெருங்குவதற்கு அஞ்சும், வான்தவழும் கோட்டைகளை அழித்த உன் முன்னோர்களை நினைத்துப் பார்த்தால், பகைவர்களை அழித்தல் உன் மரபினோருக்கு இயல்பான செயல். ஆதலால், அதுவும் உனக்கும் புகழ் தருவது அன்று. கேடின்றி, வீரம் பொருந்திய சோழனது உறையூரில் உள்ள அரசவையில் அறம் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளது. ஆகவே, முறைசெய்து நல்லாட்சி புரிவதும் உனக்குப் புகழ் தருவது அன்று. வீரம் மிகுந்து, எழுந்த போரை வென்ற, கணையமரம் போன்ற வலிய தோள்களையும், கண்ணைக் கவரும் மாலைகளையும், விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய சோழ மன்னனே! உயரத்தை அளந்து அறிய முடியாத, பொன்போன்ற ஓளியுடன் மிளிறும் நெடிய சிகரங்களையுடைய இமயத்தில் தன் காவற் சின்னமாகிய வில்லைப் பொறித்தவனும், சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்களையுடயவனுமாகிய சேரன் அழியுமாறு அவனுடைய வஞ்சி நகரத்தை அழித்த உன் பெருமைக்குரிய முயற்சியை நான் எப்படிப் பாடுவேன்?

No comments:

Post a Comment