Thursday, January 27, 2011

35. உழுபடையும் பொருபடையும்!

பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார் (35). இப்புலவர், புறநானூற்றில் இச்செய்யுளையும் நற்றிணையில் இரண்டு (158, 196) செய்யுட்களையும் இயற்றியவர். இவரால் பாடப்பட்டவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆவான்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 34இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவனின் நாட்டில் சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் குடிக்மக்கள் வரி செலுத்தவில்லை. அவர்களுடைய வரிக்கடன்களை விலக்கி அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு இப்பாடலில் வெள்ளைக்குடி நாகனார் சோழன் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவர் உள்ளும்
5 அரசுஎனப் படுவது நினதே பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர்பு ஊட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம் போல
10 ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க,
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல் எனவ கேண்மதி:
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
15 முறைவேண்டு பொழுதின் பதன்எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
20 வெயில்மறைக் கொண்டன்றோஅன்றே; வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
25 பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம்;
30 அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின்நின்
அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே.

அருஞ்சொற்பொருள்:
1. நளி = செறிந்த; இரு = பெரிய; முந்நீர் = கடல்; ஏணி = எல்லை. 2. வளி = காற்று. 3. திணிதல் = செறிதல்; கிடக்கை = பூமி. 6. அலங்கு = விளங்கு; கனலி = ஞாயிறு; வயின் = இடம். 7. இலங்குதல் = ஒளிசெய்தல்; வெள்ளி = சுக்கிரன்; படர்தல் = செல்லுதல். 8. கவர்பு = வேறுபடல், பிரிதல். 9. தோடு = இலை. 10. நுடங்குதல் = ஆடல். 11. அத்தை – அசைச் சொல். 12. கெழு = பொருந்திய. பீடு = பெருமை. 13. நினவ = உன்னிடம்; எனவ = என்னுடைய. 14. புரிதல் = செய்தல்; நாட்டம் = ஆராய்ச்சி. 15. முறை = அரச நீதி (முறையீடு). பதன் = பக்குவம்; தக்க சமயம். 16. உறை= துளி; பெயல் = மழை. 17. கோடு = பக்கம்; கொண்மூ = மேகம். 18. மாகம் = மேலிடம்; விசும்பு = ஆகாயம். 19. பொரு = முட்டிய. 22. வெளிறு = இல்லாமை; துணி = துண்டு; வீற்று = வேறுபாடு. 23. கணம் = திரட்சி (கூட்டம்); கண்ணகன் = அகன்ற இடம்; பறந்தலை = போர்க்களம். 24. ஆர்த்தல் = பொருதல். 25. தரூஉம் = தரும்.; கொற்றம் = வெற்றி. 26. சால் = உழவு சால்; மருங்கு = பக்கம். 27. வாரி = விளைவு. 29. ஞாலம் = உலகம். 31. நொதுமல் = அயல், விருப்பு வெறுப்பு இன்மை. 32.பகடு = எருது; பாரம் =பெருங்குடும்பம்; ஓம்புதல் = பாதுகாத்தல். 33. புறந்தருதல் = ஓம்பல், தோற்றல், புகழ்தல்.

உரை: நீர் செறிந்த பெரிய கடல் எல்லையாக, காற்றால் ஊடுருவிச் செல்ல முடியாத, வானத்தால் சூழப்பட்ட, மண் செறிந்த இவ்வுலகில், குளிர்ந்த தமிழ் நாட்டிற்கு உரியவராகிய, முரசு முழங்கும் படையுடன் கூடிய சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுக்குள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது உன்னுடைய அரசுதான். ஒளியுடன் கூடிய கதிரவன் நான்கு திசைகளில் தோன்றினும், ஒளிறும் வெள்ளி தெற்கே சென்றாலும், அழகிய குளிர்ந்த நீரையுடைய காவிரி பல கிளைகளாகப் பிரிந்து நீர்வளம் அளிக்கிறது. அதனால், வேல்களின் தொகுப்பைப்போல் காட்சி அளிக்கும், அசையும் கணுக்களையுடைய கரும்பின் வெண்ணிறப் பூக்கள் காற்றில் ஆடுகின்றன. உன்னுடைய நாடு அத்தகைய வளமுடையது. நாடு என்று சொல்லப்படுவது உன்னுடைய நாடுதான். அத்தகைய நாட்டையும் அதில் பொருந்திய செல்வத்தையுமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக.

அறமே (உருவெடுத்து) ஆட்சி செய்வதைப்போல் ஆட்சி புரிந்து, ஆராய்ச்சியுடன் செங்கோல் செலுத்தும் உன் ஆட்சியில் எளியோர் உன்னிடம் நீதி கேட்டால், மழைத்துளியை விரும்பியவர்களுக்குப் பெருமழை பெய்ததைப்போல் வேண்டிய நீதியைத் தக்க சமயத்தில் பெறுவர். கதிரவனைச் சுமந்து செல்லும் திரண்ட மேகங்கள் உயர்ந்த ஆகாயத்தின் நடுவே நின்று அதன் வெயிலை மறைப்பதுபோல் கணுக்கள் திரண்டு விளங்கி வானத்தை முட்டிப் பரந்து உயர்ந்து நிற்கும் உன் வெண்கொற்றக்குடை வெயிலை மறைப்பதற்காகப் பிடிக்கப்பட்டது அன்று. கூரிய வேல்களை உடைய சோழனே! உன்குடை குடிமக்களின் வருத்தத்தைப் போக்குவதற்காகப் பிடிக்கப்பட்டது ஆகும்.

யானைகளின் தும்பிக்கைகள், துளையுள்ள பனைமரங்களின் துண்டுகள்போல் வேறுவேறு இடங்களில் வீழ்ந்து கிடக்கும் அகன்ற இடமுள்ள போர்க்களத்தில், உன் படைய எதிர்த்த உன் பகைவர்கள் புறமுதுகுகாட்டி ஓடினார்கள். உன் வீரர்கள் அதைக்கண்டு ஆரவாரித்தனர். பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு நீ பெறும் வெற்றி, உழவர்களின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். மழை பெய்யத் தவறினாலும், விளைவு குறைந்தாலும், இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் மக்களின் செயல்களால் தோன்றினாலும் இந்தப் பரந்த உலகம் அரசர்களைத்தான் பழிக்கும். அதை நீ நன்கு அறிந்தனையாயின், அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, காளைகளை ஏர்ககளில் பூட்டி உழவுத் தொழில் செய்து பெருங்குடும்பங்களைப் பாதுகாப்பவர்களை நீ பாதுகாப்பாயானால், உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்.

சிறப்புக் குறிப்பு: ”செல்வமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக. நீ செங்கோல் செலுத்துகிறாய்; உன் ஆட்சி முறையாக நடைபெறுகிறது. அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, உன் குடிமக்களைப் பாதுகாப்பாயாக; நீ அவ்வாறு செய்தால் உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்” என்று அரசன் கேட்குமாறு அறிவுறுத்தியதால், இப்பாடல் செவியறிவுறூஉத் துறையை சார்ந்தது என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment