Tuesday, February 22, 2011

45. தோற்பது நும் குடியே!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும். சோழன் நலங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-லிலும், சோழன் நெடுங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைப் பாடல் 44-லிலும் காண்க.
பாடலின் பின்னணி: தங்களுக்குள் இருந்த பகை காரணமாக சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. சோழ குலத்தில் தோன்றிய இருவரும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது ஏளனத்துக்குரியது என்று அவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களைச் சமாதானப் படுத்துவதற்குக் கோவூர் கிழார் மேற்கொண்ட முயற்சி இப்பாடலிலிருந்து தெரிகிறது.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
5 ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்றுநும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே!

அருஞ்சொற்பொருள்:
1. இரு = பெரிய; வெண் = வெண்மை; தோடு = இலை, ஓலை, பூவிதழ்; மலைதல் = அணிதல், சூடுதல். 2. சினை = மரக்கொம்பு; தெரியல் = மாலை. 3. கண்ணி = மாலை; ஆர் = ஆத்தி; மிடைதல் = நிறைதல், செறிதல். 6. வேறல் = வெல்லுதல். 7. பொருள் = தன்மை (தகுதி); செய்தி = செய்கை. 9. மலி = நிறைதல், மிகுதல்; உவகை = மகிழ்ச்சி, களிப்பு; இகல் = பகை

உரை: இங்கு போர் புரிபவர்களில் யாரும் கரிய பனையின் வெண்ணிறப் பூமாலை அணிந்தவன் அல்லன்; கரிய வேம்பின் மாலையை அணிந்தவனும் அல்லன். உன்னுடைய மாலை ஆத்திப் பூக்களால் தொடுக்கப்பட்டது. உன்னோடு போர் புரிபவனின் மாலையும் ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்டதுதான். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடிதான். இப்போரில் நீங்கள் இருவரும் வெற்றி பெறுவது இயற்கையும் அல்ல. ஆதலால், உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்குத் தகுந்ததன்று. தேர்களில் கொடியோடுகூடிய உம்போன்ற வேந்தர்கள், இந்தப் போரைப்பார்த்துத் தங்கள் உடலெல்லாம் மிகவும் பூரிக்கும் வகையில் ஏளனமாகச் சிர்ப்பார்கள்.

சிறப்புக் குறிப்பு: பனந்தோட்டாலாகிய மாலை சேரர்களுக்குரியது; வேப்பம்பூ
மாலை பாண்டியனுக்குரியது. இங்கு, போர்புரிபவர்கள் இருவருமே சோழர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காக, கோவூர் கிழார், பனந்தோட்டு மலை அணிந்தவனோ வேப்பம்பூ மாலை அணிந்தவனோ இங்கு போர் புரியவைல்லை என்று கூறுகிறார்.

இப்பாடலும், முந்திய பாடலைப்போல், கோவூர் கிழார், அரசர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல் உடையவராக இருந்தார் என்பதையும் அரசர்களிடத்து அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment