Tuesday, February 22, 2011

42. ஈகையும் வாகையும்!

பாடியவர்: இடைக்காடனார் (42). இவர் இடைக்காடு என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் இடைக்காடனார் என்ற பெயரை பெற்றார் என்று சிலர் கூறுவர். வேறு சிலர், இடைக்காடன் என்பது இவர் இயற்பெயர் என்றும் கூறுவர். இவர் இவற்றிய பல பாடல்கள் சங்க இலக்கியத் தொகைநூல்களுள் காணப்படுகின்றன. இவர் பாடல்கள் இலக்கிய வளமும் உவமை நயமும் மிகுந்தவை.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், இடைக்காடனார், கிள்ளிவளவனின் வலிமையையும் அவன் செங்கோல் செலுத்திப், புலி தன் குட்டிகளைக் காப்பதுபோல் மக்களைக் காப்பதையும், கடலை நோக்கி ஆறுகள் செல்வது போல் கிள்ளிவளவனை நோக்கிப் புலவர்கள் வருவதையும் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

ஆனா ஈகை அடுபோர் அண்ணல்நின்
யானையும் மலையின் தோன்றும்; பெருமநின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
5 அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,
புரைதீர்ந் தன்றுஅது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ! என்றுநின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது
10 புலிபுறங் காக்கும் குருளை போல
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
15 கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
20 நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.

அருஞ்சொற்பொருள்:
1. ஆனா = குறையாத; அண்ணல் = மன்னன், பெருமையிற் சிறந்தோன். 3. தானை = படை. 5. அரைசு = அரசன், அரசாட்சி; பனிக்கும் = நடுங்கச் செய்யும். 6. புரை = குற்றம், பழுது (குறை). 7. பூசல் = பெரிதொலித்தல். 9. முனை = போர்முனை. 10. குருளை = புலிக்குட்டி. 11. மெலிவு = தளர்ச்சி; புறங்காத்தல் = பாதுகாத்தல். 12. விறல் = சிறப்பு; யாணர் = புது வருவாய்; அரித்தல் = அறுத்தல். 13. மடை = வாய்க்கால்; வாகை = வாளை மீன். 15. அறைதல் = துண்டித்தல். 16. குற்ற = பறித்த; வன்புலம் = குறிஞ்சி, முல்லை; மென்புலம் = மருதம், நெய்தல். 17. அயர்தல் = செய்தல். 18. வைப்பு = இடம், ஊர். 22. கணிச்சி = கோடரி; வட்டித்தல் = சுழலுதல் (சுழற்றுதல்).

கொண்டு கூட்டு: பொருந, புலவரெல்லாம் நின் நோக்கினர்; நீ அரைசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; அதனால் இச் செய்தி புரை தீர்ந்தது; நினக்குப் புதுவதன்று ஆகலின் எனக் கூட்டுக.

உரை: குறையாது கொடுக்கும் ஈகையும் வெல்லும் போரும் உடைய தலைவனே! உன் யானை, மலை போலத் தோன்றும். பெருமானே! உன் படைகளோ கடல் போல் முழங்கும். உன்னுடைய கூர்மையான நுனியையுடைய வேல் மின்னலைப் போல ஒளியுடன் விளங்கும். நீ உலகத்து அரசர்களெல்லாம் நடுங்கச் செய்யும் ஆற்றல் உடையவன். ஆதலால், உன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது. இது உனக்குப் புதியது அல்ல. குளிர்ந்த நீரோட்டத்தினால் எழும் ஒலியைத் தவிர, உன் வீரர்கள் வருந்தி, “ எம் துயரத்தைக் களைக, வளவனே” என்று போர்முனையில் ஒலி எழுப்புவதை, நீ கனவிலும் கேட்டதில்லை. புலி தன் குட்டிகளைப் பாதுகாப்பதைப் போல் செங்கோல் செலுத்தி நீ உன் நாட்டு மக்களைக் காப்பாற்றுகின்றாய். உன் நாடு மிகச்சிறந்த புதுவருவாயை உடையது. அங்கு, கடைமடையில் நெல் அறுப்போர் பிடித்த வாளைமீன், உழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமை, கரும்பு அறுப்போர் கரும்பிலிருந்து எடுத்த இனிய கருப்பஞ் சாறு, பெரிய நீர்த்துறையிலிருந்து நீர் கொண்டுவரும் மகளிர் பறித்த குவளை மலர்கள் ஆகியவற்றை, மலை மற்றும் காடு போன்ற வலிய நிலங்களிலிருந்து வருபவர்களுக்கு விருந்தாக அளிக்கும் மருத வளம் மிகுந்த நல்ல நாட்டின் தலைவனே! மலைகளிலிருந்து வரும் ஆறுகளெல்லாம் பெரிய கடலை நோக்கிச் செல்வது போல புலவரெல்லாம் உன்னையே நோக்கி வருகின்றனர். நீ, ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுததைச் சுழற்றிச் சினந்து கொல்லும் கூற்றுவன் போன்ற வலிமையோடு மற்ற இரு வேந்தர்களின் நிலத்தை நோக்குகிறாய்.

சிறப்புக் குறிப்பு: இங்கு, மற்ற இரு வேந்தர்கள் என்பது சேர பாண்டிய மன்னர்களைக் குறிக்கும்.

No comments:

Post a Comment