Tuesday, February 22, 2011

43. பிறப்பும் சிறப்பும்!

பாடியவர்: தாமற்பல் கண்ணனார் (43). இவர் காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள தாமல் என்ற ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இப்பாடலிலிருந்து, இவர் பார்ப்பனர் என்று தெரிகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான். சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான், நெடுங்கிள்ளி இருந்த ஆவூர் என்னும் ஊரை முற்றுகையிட்டதாக வரலாறு கூறுகிறது.
பாடலின் பின்னணி: ஒருசமயம், தாமற்பல் கண்ணனார் சோழன் மாவளத்தானோடு சூதாடினார். சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வட்டு ஒன்று தாமற்பல் கண்ணனாருக்குத் தெரியாமலேயே அவருக்கு அடியில் மறைந்திருந்தது. ஆனல், தாமற்பல் கண்ணனார் சூதாட்டத்தில் வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய மாவளத்தான், சினமுற்று, அவ்வட்டை அவர் மீது எறிந்தான். அதனால், கோபமுற்ற தாமற்பல் கண்ணனார், மாவளத்தானைப் பார்த்து, “உன் செய்கையைப் பார்த்தால், நீ சோழ மன்னனுக்குப் பிறந்தவனாக எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினார். தான் செய்த குற்றத்தை உணர்ந்த மாவளத்தான் நாணினான். முடிவில், தாமற்பல் கண்ணனார் மாவளத்தானைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
5 கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
10 தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல்
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
15 நீர்த்தோ நினக்குஎன வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்எனக்
20 காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்
யானே பிழைத்தனென்; சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:
1. அலமரல் = வருந்தல், துன்பமுறல். 2. தெறு = சினம், அச்சம், துன்பம். கனலி = கதிரவன். 3. கால் = காற்று; கொட்குதல் = சுழலல். 4. அவிர் = ஓளி; சிறை = சிறகு. 5. உகிர் = நகம்; ஏறு = இடி; ஒரீஇ = நீக்கி (தப்பி). 7. தபுதி = அழிவு; சீரை = துலாத்தட்டு. 8. உரம் = வலி. 9. நேரார் = பகைவர்; முரண் = வலி. 10. வண் = மிகுதி; வார் = நேர்மை; கோல் = அம்பு. 11. கொடுமரம் = வில்; கடு = விரைவு; மான் = குதிரை. 12. கைவண் = வண்கை = கொடைக்கை; வண்மை = ஈகை; தோன்றல் = அரசன். 13. ஆர் = ஆத்தி; தெரியல் = மாலை. 15. நீர் = தன்மை; நீர்த்தோ = தன்மையான செயலோ (தகுமோ). 17. நனி = மிக. 19. எண்மை = எளிமை. 20. மொய்ம்பு = தோள்வலி. 23. எக்கர் = மணற்குன்று.

உரை: உலகில் வாழ்வோரின் துன்பங்கள் தீர, சுடும் கதிரவனின் வெப்பத்தைத் தாம் பொறுத்து, காற்றை உணவாகக் கொண்டு, கதிரவனின் சுடர்போல் சுழன்று திரியும், விளங்கிய சடையையுடைய முனிவர்கள் திகைக்குமாறு, வளைந்த சிறகினையும் கூரிய நகங்களையுமுடைய பருந்தின் தாக்குதலுக்குத் தப்பி தன்னிடத்தில் அடைக்கலம் புகுந்த, குறுகிய நடையையுடய புறாவின் அழிவுக்கு அஞ்சி, தராசில் புகுந்த, வரையாது வழங்கும் வள்ளலின் வழித்தோன்றலே! பகைவரை வென்ற, மிகுந்த செல்வத்தையுடைய, கிள்ளிவளவனின் தம்பியே! நீண்ட அம்பினையும் வளைந்த வில்லையுமுடைய மறவர்களுக்குத் தலைவ! விரைந்து செல்லும் குதிரைகளையும் வள்லல் தன்மையுமுடைய தலைவ! ”உன் குடிப்பிறப்பிலே எனக்கு ஐயம் எழுகிறது. ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்கள். நீ செய்த செயல் உன் தகுதிக்கு ஏற்றதோ?” என்று நீ வெறுக்குமாறு நான் கூறினேன். இருப்பினும், என் பிழையைக் கண்டு வெறுக்காமல், நீ தவறு செய்ததைப்போல் வெட்கப்பட்டாய். தமக்குத் தவறிழைத்தவர்களைப் பொறுத்தருளும் தலைவ! தவறிழைத்தவர்களைப் பொறுக்கும் தகுதி உன் குலத்தில் பிறந்தார்க்கு எளிது என்று எனக்குக் காட்டிய வலியவனே! உன் செயலால் நான் பிழைத்தேன். பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரிக்கரையில் உள்ள மணல்மேடுகளிலுள்ள மணல்களைவிட நீ அதிக நாட்கள் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், மாவளத்தான் தவறுகளைப் பொறுத்தருளும் இயல்பினன் என்று அவனைப் புகழ்ந்து பாடப்பட்டிருப்பதால் இப்பாடல் அரச வாகை என்னும் துறையைச் சார்ந்ததாகியது.

No comments:

Post a Comment