பாடியவர்: மாங்குடி மருதனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 24-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போர்களில் வெற்றி பெற்றுச் சிறந்து விளங்கியதைக் கண்ட மாங்குடி மருதனார், “வேந்தே! நீ நான்மறை கற்ற அந்தணர்கள் சூழ வேள்விகள் செய்தாய். உன் பகைவர்கள் உன்னிடம் தோற்று வீர மரணம் அடைந்ததால் அவர்கள் தேவருலகம் சென்றார்கள்.” என்று அவனைப் இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
நளிகடல் இரும்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களன்அகற்றவும்,
களன்அகற்றிய வியல்ஆங்கண்
5 ஒளிறுஇலைய எஃகுஏந்தி
அரைசுபட அமர்உழக்கி,
உரைசெல முரசுவெளவி,
முடித்தலை அடுப்பாகப்
புனல்குருதி உலைக்கொளீஇத்
10 தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
15 வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர்பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே.
அருஞ்சொற்பொருள்:
1. நளி = பெருமை; இரு = பெரிய; குட்டம் = ஆழம். 2. வளி = காற்று; புடைத்தல் = குத்துதல், தட்டுதல்; கலம் = மரக்கலம். 4. வியல் = அகலம். 5. எஃகு = வேல், ஆயுதம். 6. அரைசு = அரசன்; அமர் = போர்; உழக்குதல் = கலக்குதல், வெல்லல். 7. உரை = புகழ். 9. புனல் = நீர். 10. துழத்தல் = கலத்தல்; வல்சி = உணவு. 11. அடு களம் = போர்க்களம்; அடுதல் = கொல்லல். 12. ஆன்ற = மாட்சிமைப்பட்ட, நிறைந்த; கொள்கை = அறிவு, கோட்பாடு, நோன்பு. 13. முதல்வர் = தலைவர்; மன்னுதல் = நிலைபெறுதல். 15. வாய் = சிறப்பு; முற்றிய = முடித்த. 16. நோற்றல் = தவஞ் செய்தல், பொறுத்தல்; மன்ற – அசைச் சொல், மிக. 17. மாற்றார் = பகைவர். 18. ஆண்டு = அவ்வுலகம்.
கொண்டு கூட்டு: செழிய, வேந்தே, ஆற்றாராயினும் ஆண்டு வாழ்வோராகிய நின் பகைவர் மாற்றெரென்னும் பெயர்பெற்று நோற்றார் எனக் கூட்டுக.
உரை: ஆழம் மிகுந்த பெரிய கடலில் காற்றால் தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக்கொண்டு செல்வதுபோல, உன் யானை போர்க்களத்தில் பகைவர்களின் படையை ஊடுருவிச் சென்றது. அந்த யானை சென்ற அகன்ற பாதையில் ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்து நின்ற வேந்தர்களை அழித்து அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடியணிந்த தலைகளை அடுப்பாகவும், அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய! நிலைபெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ்வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு ஆகியவற்றையுடைய அந்தணர்களை உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள்.
உன்னோடு மாறுபட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள்தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள்.
No comments:
Post a Comment