Thursday, January 27, 2011

33. புதுப்பூம் பள்ளி!

பாடியவர்: கோவூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 31இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் -27இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்படலில் கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியின் நாட்டின் வளத்தையும் பாணர்களுக்கு சோறு அளிக்கப்படும் பாசறைகளின் சிறப்பையும் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
5 குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
ஏழெயில் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
10 பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருத்தும்
15 செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
20 ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1. கான் = காடு; கதம் = சினம். 2. சொரிதல் = பொழிதல் = நிறைதல்; வட்டி = கூடை; ஆய் = இடையர். 3. தசும்பு = குடம். 4. அரிவை = பெண் (மகளிர்). 6. முகத்தல் = அளத்தல், மொள்ளல்; உகத்தல் = மகிழ்தல். 7. பொருப்பு = மலை. 8. எயில் = கோட்டை; எறிதல் = முறித்தல். 9. பேழ் = பெருமை; பேழ்வாய் = பெரியவாய்; உழுவை = புலி. 10. வஞ்சி பாடுதல் = பகைவருடைய நாட்டின் மீது படையெடுப்பதைப் பாடுதல். 11. தாதெரு = தாது+எரு; தாது = பூந்தாது; மறுகு = தெரு. 12. இடையிடுபு = இடையிட்டு. 14. அமலை = திரள்; கடும்பு = சுற்றம்; அருத்தல் = உண்பித்தல். 15. செம் = செம்மை; அற்று = அத்தன்மைத்து; செம்மற்று = செம்மையுடைத்து; இருக்கை = இருப்பிடம். 16. தைஇய = இழைத்த; வரி = எழுத்து; வனப்பு = அழகு. 17. அல்லிப்பாவை = அல்லியக் கூத்தில் ஆடும் (பயன்படுத்தப்படும்) உருவம் (பொம்மை); ஏய்தல் = ஒத்தல். 18. யாமம் = நள்ளிரவு; 19. வழங்குதல் = நடத்தல்; கா = பூந்தோட்டம். 20. ஒதுக்குதல் = இயங்குதல்; திணிதல் = செறிதல்; பள்ளி = இடம் (சாலை). 21. மாடம் = மண்டபம்; மை = செம்மறியாடு.

கொண்டு கூட்டு: உழுவை பொறிக்கும் ஆற்றலை யாகலின், பாடுநர் வஞ்சி பாட, பாண்கடும்பு அருத்தும் நின் வெம்முனை இருக்கை நீ கொண்ட விழவினும் பல செம்மற்று எனக் கூட்டுக.

உரை: காட்டில் வாழும் சினக்கொண்ட நாய்களையுடைய வேட்டுவர் மான் தசைகளை விற்பதற்காக கூடைகளில் கொண்டு வருவர்; இடைச்சியர் தயிரை விற்பதற்காகக் குடங்களில் கொண்டு வருவர். ஏரைக்கொண்டு உழவுத்தொழில் செய்யும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர், வேட்டுவர் கொண்டு வந்த தசைகளையும், இடைச்சியர் கொண்டு வந்த தயிரையும் பெற்றுக் கொண்டு, குளக்கரையில் உள்ள நிலத்தில் விளைந்த நெல்லை அள்ளிக் கொடுக்க, வேட்டுவரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்றனர். இத்தகைய வளமான நல்ல ஊர், தெற்கே பொதிகைமலை உள்ள பாண்டிய நாட்டில் உள்ளது. அங்கே, ஏழு கோட்டைகளின் கதவுகளை உடைத்து அவற்றைக் கைப்பற்றி உன்னுடைய சின்னமாகிய பெரிய புலிவாயைப் பொறிக்கும் ஆற்றல் உடையவன் நீ. நீ படையெடுத்துச் சென்றதைப் புலவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள். உன் படைவீரர்கள் பூக்களின் தாதுக்கள் நிறைந்த தெருக்களில் உள்ள பாசறைகளில் உலராத பச்சிலைகளை இடையிடையே வைத்துக் கட்டப்பட்ட அரும்புகள் அடங்கிய பூப்பந்தைப் போன்ற, தசைகளோடு கூடிய சோற்றுருண்டைகளைப் பாணர்களின் சுற்றத்தார்களுக்கு அளித்து அவர்களை உண்பிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தது உன் போர்முனைகளின் இருப்பிடம்.

அன்புடைய துணைவனும் துணைவியும், கலை வல்லுநர்களால் செய்யப்பட்ட அழகிய பாவைகள் அல்லியம் என்னும் கூத்தில் ஆடுவதைப்போல், சேர்ந்து செல்லும் குளிர்ந்த மலர்களையுடைய சோலையில், நள்ளிரவில் தனியே சென்றால் காம உணர்வு மிகும் என்ற காரணத்தால் எவரும் தனியே செல்வதில்லை. அந்தச் சோலைகளில், நடத்தற்கு இனிய, மணல் மிகுந்த, புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில் உள்ள மாடந்தோறும் செம்மறிக் கிடாவை வெட்டி நீ நடத்தும் விழாக்களைவிட உன் போர்முனைகளில் நீ அளிக்கும் விருந்துகள் பலவாகும்.

No comments:

Post a Comment