Thursday, January 20, 2011

30. எங்ஙனம் பாடுவர்?

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: ”இவ்வுலகில், ஞாயிறு செல்லும் பாதை, அதன் வேகம், காற்றின் இயக்கம், அது செல்லும் திசை, ஆகாயத்தின் தன்மை ஆகியவற்றை நேரில் கண்டு அளந்ததைப்போல் தம் அறிவால் அறிந்தவர்கள் உள்ளனர். அவர்களாலும் அறிய முடியாத அடக்கமும் வலிமையும் உடயவன் நீ. அவர்களால் உன்னை அறிந்துகொள்ள முடியாததால் அவர்கள் எப்படி உன்னைப் புகழ்ந்து பாட முடியும்?” என்று சோழன் நலங்கிள்ளியின் அடக்கத்தையும் ஆற்றலையும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,
வளிதிரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றிவை
5 சென்றளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்துஎன் போரும் உளரே; அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
10 யாங்ஙனம் பாடுவர் புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1. செலவு = வழி. 2. பரிப்பு = இயக்கம்; மண்டிலம் = வட்டம். 3. வளி = காற்று. 4. காயம் = ஆகாயம். 6. இனைத்து = இத்துணை அளவு. 7. செறிவு = அடக்கம். 8. கவுள் = கன்னம்; அடுத்தல் = சேர்த்தல். 9. துப்பு = வலிமை. 10. கூம்பு = பாய்மர . 11. மீப்பாய் = மேற்பாய்; பரம் = பாரம்; தோண்டல் = அகழ்தல் (எடுத்தல்). 13. புகார் = ஆற்றுமுகம்; தகார் = தகுதி இல்லாதவர். 14. தாரம் = அரும்பண்டம்.

கொண்டு கூட்டு: நாடு கிழவோயே, ஒளித்த துப்பினை ஆதலிற் புலவர் யாங்ஙனம் பாடுவர் எனக் கூட்டுக.

உரை: சிவந்த ஞாயிறு செல்லும் வழியும், அதன் இயக்கமும், அந்த இயக்கத்தைச் சூழ்ந்த வட்டமும், காற்று இயங்கும் திசையும், ஒரு ஆதாரமும் இல்லாமல் வெற்றிடமாகிய ஆகாயத்தின் இயங்கும் தன்மையையும் ஆங்காங்கே சென்று அளந்து அறிந்ததுபோல் சொல்லக்கூடிய அறிவும் கல்வியும் உடையவர்கள் உள்ளனர். அத்தகைய அறிஞர்களின் அறிவாலும் அறிய முடியாத அடக்கம் உடையவனாகி, யானை தன் கன்னத்தில் எறிவதற்காக மறைத்துவைத்திருக்கும் கல்லைப்போல் உன் வலிமை மறைவாக உள்ளது. ஆகவே, உன் வலிமையைப் புலவர்களால் எப்படிப் புகழ்ந்து பாட முடியும்?

ஆறு கடலில் கலக்கும் இடத்தில், கூம்புகளையும் பாய்களையும் அகற்றாது, பாரத்தைக் குறைக்காமல், புகுந்த பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களை, அம்மரக்கலங்களைச்
செலுத்தும் தகுதி இல்லாத மீனவர்களும் நெய்தல் நில மக்களும் கொண்டு போகும்பொழுது அப்பொருட்கள் இடைவழியெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. உன் நாடு அத்தகைய வளமுடையது.

சிறப்புக் குறிப்பு: பெரிய மரக்கலங்கள் துறைமுகத்திற்குள் நுழையும் முன், கூம்பையும் பாய்மரங்களையும் களைவதும், பாரத்தைக் குறைப்பதும் முறையாகச் செய்ய வேண்டிய செயல்கள். காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் துறைமுகத்தில், ஆற்றின் ஆழம் அதிகமாக இருப்பதால் அத்தகைய செயல்களைச் செய்ய வேண்டிய தேவையில்லை என்று தெரிகிறது. மற்றும், பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களின் மிகுதியால், அம்மரக்கலங்களைச் செலுத்துவோர் மட்டுமல்லாமல், அங்குள்ள மற்ற மக்களும் அம்மரக்கலங்களிலுள்ள பொருட்களை நாட்டுக்குள் கொண்டு செல்கிறார்கள். அவ்வாறு அவர்கள் கொண்டு செல்லும் பொழுது, பொருட்கள் வழியிலே சிதறிக் கிடக்கின்றன. பொருட்கள் கீழே சிதறிக் கிடப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் காட்சி, சோழன் நலன்கிள்ளியின் நாட்டின், நீர்வளத்தையும், பொருளாதார வளத்தையும் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment