Thursday, January 27, 2011

32. பூவிலையும் மாடமதுரையும்!

பாடியவர்: கோவூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 31இல் காண்க.
பாடப்பட்டோன்:
சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் -27இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியின் வள்ளல் தன்மையை வியந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ;
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
5 மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போலவவன்
10 கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. கடும்பு = சுற்றம்; அடுகலம் = சமையல் பாத்திரம். 3. வணக்கல் = வளைதல்; இறை = முன்கை; பணை = மூங்கில். 7. சுட்டுதல் = நினைத்தல். 8. வேட்கோ = குயவன்; தேர்க்கால் = தேர்ச்சக்கரம் (இங்கு குயவன் பயன்படுத்தும் சக்கரத்தைக் குறிக்கிறது). 9. குரு = கனம்; திரள் = உருண்டை. 10. குடுமி = முடிவு; பணைநிலம் = மருதநிலம்.

கொண்டு கூட்டு: தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போல அவன் கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடு; ஆதலால், பூவா வஞ்சியும் தருகுவன்; மாட மதுரையும் தருகுவன்; ஆதலால், பரிசில் மாக்கள் நாமெல்லாம் அவனைப் பாடுகம் வம்மினோ எனக் கூட்டுக.

உரை: நம் சுற்றத்தாரின் சமையல் பாத்திரங்கள் நிறையுமாறு, நெடிய கொடியில் பூவாத வஞ்சி ஆகிய வஞ்சி மாநகரத்தையும் சோழன் நலங்கிள்ளி தருவான். வண்ணக் கலவை பூசிய வளைந்த முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியுமுடைய விறலியர் விற்கும் பூவிற்கு விலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான். பரிசிலரே வாருங்கள்; நாம் அனைவரும் அவனைப் பாடுவோம். இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால், நல்ல தொழில் நுட்ப அறிவுள்ள குயக்குலச் சிறுவர் மண்பாண்டங்கள் செய்யும் சக்கரத்தில் வைத்த கனமான பசுமண் உருண்டை, குயவனின் கருத்துக்கேற்ப உருவெடுப்பதுபோல் சோழன் நலங்கிள்ளி எடுத்த முடிவுக்கேற்ப இந்தக் குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு அமைவது விளங்கும்.

சிறப்புக் குறிப்பு: ”பூவா வஞ்சி” என்றது வஞ்சி நகரத்தைக் குறிக்கிறது. வஞ்சி நகரம் சேர நாட்டிலும், மதுரை நகரம் பாண்டிய நாட்டிலும் இருந்த ஊர்கள். அவ்வூர்களைச் சோழன் நலங்கிள்ளி தருவான் என்று கோவூர் கிழார் கூறியிருப்பதால், இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில், அவ்விரு நகரங்களும் சோழன் நலஙிள்ளியின் ஆதிக்கத்தில் இருந்தன என்று தோன்றுகிறது.

1 comment:

  1. மதிப்பிற்குரிய முனைவர் அவர்களுக்கு,
    ஒவ்வொரு பாடலும் இன்ன திணை, இன்ன துறை என்று அறிய, ’பாடலில் ஏற்ற வரிகள் எவை?’ என்று குறிப்பிட்டால் நன்மை பயக்கும்.
    நட்புடன்,
    வ.க.கன்னியப்பன்

    ReplyDelete