பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 31- இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.  இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27- இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் நலங்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சி செய்த பொழுது, கோவூர் கிழார் அவனைக் காணச் சென்றார்.  அவன் உயர்ந்த அணிகலன்களை அணிந்து, மகளிரிடம் இனிமையாகப் பழகுவதையும், வீரர்கள் அவனைப் பணிந்து வாழ்வதையும், தன் நாட்டு மக்களை அவன் அன்போடு பாதுகாப்பதையும், அவனுடைய வீரர்கள் போர்மீது மிகுந்த விருப்பமுடையவர்களாக இருப்பதையும் அவர் நேரில் கண்டார்.  தான் கண்ட காட்சிகளைக், கோவூர் கிழார், பாணன் ஒருவனிடம் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது. 
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.
     உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
     கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
     சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து
     ஈங்குஎவன் செய்தியோ? பாண! பூண்சுமந்து
5    அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து
     மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் 
     ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
     புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
     சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
10   மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
     உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
     ஏவான் ஆகலின் சாவேம் யாம்என
     நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
     தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
15   கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த
     நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
     நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
     உறந்தை யோனே குருசில்
     பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.
அருஞ்சொற்பொருள்: 
1. என்பு = எலும்பு; மருங்கு = பக்கம் (விலா). 2 கடும்பு = சுற்றம். 3. சில் = சில. 4. பூண் = அணிகலன். 5 அம் = அழகிய; பகடு = பெரிய, பெருமை; எழில் = அழகு, இளமை; பொறி = புள்ளி. ஆகம் = மார்பு. 7. பிணித்தல் = கட்டுதல், சிறைப்படுத்தல்; பீடு = பெருமை. 8. புனிறு =  ஈன்ற அணிமை; இலிற்றுதல் = சுரத்தல். 9. மலிதல் = மிகுதல். 10 மன்பதை = மக்கட் கூட்டம்; புரத்தல் = காத்தல். 11. திறம் = பகுதி. 14. தணிபறை = தணிவதற்குக் காரணமாகிய பறை. 15 கடுங்கள் = முதிர்ந்த கள்; உகுத்தல் = சிதறுதல்.16. வறுமை = வெறுமை; வறுந்தலை = பாகர் ஏறாத வெறுந்தலை. 17. வரைப்பு = எல்லை; ஓர்த்தல் = கேட்டல். 18. குருசில் = குரிசில் = அரசன்.
கொண்டு கூட்டு: பாண, நீ செலின், நெடுந்தகை, பொருநன் குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு எவன் செய்தியோ எனக் கூட்டுக.
உரை:பாண! உடும்பை உரித்ததுபோல் எலும்புகள் எழும்பிய விலாப் பக்கங்களை உடைய சுற்றத்தின் மிகுந்த பசியைத் தீர்ப்பாரைக் காணாமல், உன் பாடல்களைக் கேட்பவர்கள் சிலரே என்று நொந்துகொண்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்?  அணிகலன்களை அணிந்த, அழகிய, பெரிய, மார்பில் சிவந்த புள்ளிகளை  (தேமல்) உடையவன் நலங்கிள்ளி.  அவன் மென்மையான மகளிரிடம் பணிவாகவும், வலிமை மிகுந்த பகைவர்களைச் சிறைப்படுத்தும் பெருமையும் பொருந்தியவன்.  அவன், குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்கும் முலைபோல், நீர்ப் பெருகிய காவிரி, வெள்ளப் பெருக்கெடுத்து கரையிலுள்ள மரங்களை அழிக்கும் சோழ நாட்டுக்குத் தலைவன்.  தன்னுடைய படையில் ஒரு பகுதியில் உட்பகை தோன்றினால், பறவைகளால் நிகழும் தீய நிமித்தங்கள் நடைபெறும் பொழுது, அப்படையைப் போருக்குச் செலுத்துவதை நிறுத்திவிடுவான்.  போருக்குச் செல்ல இயலாதலால், அந்தப் படைவீரர்கள், “ செத்து விடுவோம்” என்று கூறித் தங்கள் பருத்த தோளைத் தட்டுவர்.  அவர்கள் ஆத்திரம் தணிவதற்குத் தேரோடும் தெருக்களில், தாழ்ந்த ஒலியில் பறையை முழக்குவர்.  அவர்களில் சிலர், நன்கு முதிர்ந்த கள்ளைப் பருகியதால் நடுங்கும் கைகளால் அக்கள்ளைச் சிந்துவர்.  கள் சிந்தியதால், சேறாகிய தெருக்களில் பாகர்கள் இல்லாமல் திரியும் யானைகள் பெரிய நகரில் ஒலிக்கும் முரசொலியைக் காது கொடுத்துக் கேட்கும்.  அத்தகைய உறையூரில், சோழன் நலங்கிள்ளி உள்ளான்.  நீ அவனிடம் சென்றால், அதற்குப் பிறகு வேறு யாரிடத்தும் செல்வதை மறக்கும் அளவுக்கு பரிசளிப்பான்.
 
மிக்க நன்று
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநன்றி!
ReplyDelete