Friday, April 1, 2011

63. என்னாவது கொல்?

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 4-இல் காண்க.
பாடப்பட்டோர்: சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன். இவர்களைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 62-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் போரில் ஒருங்கே இறந்ததைக் கண்டு வருந்திய பரணர், “யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை மற்றும் தேர்ப்படை எல்லாம் அழிந்தன. இரு மன்னர்களும் இறந்தனர். இனி இந்நாடுகள் என்ன ஆகுமோ?” என்று இப்பாடலில் தம் வருத்தத்தை வெளிபடுத்துகிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை : தொகை நிலை. போர்க்களத்தில் அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல்.

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;
5 தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே;
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
10 வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்; இனியே
என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
15 காமர் கிடக்கைஅவர் அகன்றலை நாடே?

அருஞ்சொற்பொருள்:
1. எனை = எவ்வளவு; பல் = பல; துளங்கல் = கலங்கல். 2. விளைதல் = உண்டாதல். 3. விறல் = வெற்றி; மாண்ட = பெருமைக்குரிய; புரவி = குதிரை. 4. மறம் = வலிமை; தகை = தகுதி, தன்மை. 5. சான்றோர் = வீரர். 6. தோல் = கேடயம். 7. விசித்தல் = இறுகக் கட்டுதல். 8 பொறுக்கல் = தாங்குதல்; விளிதல் = அழிதல், கெடுதல். 11. கழனி = வயல். 12. வள்ளி = கொடி; தொடி = கைவளை. 13. பாசவல் = பாசு + அவல்; பாசு = பசுமை(நல்ல); முக்கி = உண்டு. 14. யானர் = புதிய வருவாய்; அறா = குறயாத; அறல் = இல்லாமற் போதல்; அறா என்பது அறல் என்பதின் எதிர்மறை; வைப்பு = நிலப்பகுதி (ஊர்). 15. காமர் = அழகு; கிடக்கை = குடியிருப்பு.

உரை: எத்தனை யானைகள் அம்பால் தாக்கப்பட்டுத் தொழிலின்றி இறந்தன! வெற்றிப் புகழ் கொண்ட பெருமைக்குரிய குதிரைகள் எல்லாம் வலிமை வாய்ந்த படைவீரர்களுடன் போர்க்களத்தில் மாண்டன. தேரில் வந்த வீரர்கள் எல்லாம் தாம் பிடித்த கேடயம் தங்கள் கண்களை மறைக்க ஒருங்கே இறந்தனர். இறுகக்கட்டப்பட்ட, மயிருடன் கூடிய முரசுகள் அவற்றைத் தாங்குவோர் இல்லாமல் கிழே கிடந்தன. சந்தனம் பூசிய மார்பில் நெடிய வேல் பாய்ந்ததால் இரு வேந்தர்களும் போர்க்களத்தில் இறந்தனர். வயலில் விளைந்த ஆம்பல் தண்டால் செய்த வளையலணிந்த கையினை உடைய மகளிர் பசிய (வளமான) அவலை உண்டு குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும், புது வருவாய் குறையாத அழகிய குடியிருப்புகள் அடங்கிய அகன்ற இடங்களை உடைய நாடு இனி என்ன ஆகுமோ?

சிறப்புக் குறிப்பு: அறவழியில் போர் செய்யும் குணங்களை உடைய வீரர்களைச் “சான்றோர்” என்பது மரபு.

தோலில் உள்ள மயிரை நீக்காமல் செய்யபட்ட முரசு “மயிர்க்கண் முரசு” என்று அழைக்கப்பட்டது.

No comments:

Post a Comment