Thursday, April 7, 2011

66. நின்னினும் நல்லன் அல்லனோ!

பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்(66). வெண்ணி என்பது திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம் என்னும் ஊருக்கு அருகே உள்ள ஓரூர். இவ்வூர் வெண்ணில் என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. சங்க காலத்தில் மண்பாண்டங்கள் செய்தவர்கள் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் சிறந்தவர்களுக்கு “குயம்” என்ற பட்டம் அரசர்களால் வழங்கப்பட்டது என்றும் இப்பழக்கம் பத்தாம் நூற்றண்டு வரை இருந்ததாகவும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை  அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே, இப்புலவர் குயக்குலத்தைச் சார்ந்த பெண் என்பது இவருடைய பெயரிலிருந்து தெரியவருகிறது.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 7- இல் காண்க.
பாடலின் பின்னணி: கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறார்.


திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே.

அருஞ்சொற்பொருள்:
1. நளி = செறிதல், குளிர்ச்சி; இரு = பெரிய; முந்நீர் = கடல்; நாவாய் = கப்பல். 2. வளி = காற்று; உரவோன் = வலியவன்; மருகன் = வழித்தோன்றல். 3. களி = செருக்குறுதல். 4. அமர் = போர்; கடந்த = அழித்த. 5. அன்றே = அல்லவா; 6. கலி = தழைத்தல்; பறந்தலை = போர்க்களம்.

கொண்டு கூட்டு: உரவோன் மருக, கரிகால் வளவ,வென்றோய்,வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி, உலகத்துப் புகழ் மிக எய்தி வடக் கிருந்தோன், நின்னினும் நல்லன் அன்றே எனக் கூட்டுக.

உரை: காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?

சிறப்புக் குறிப்பு: காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் முறையைச் சங்க காலத்திலேயே தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.

2 comments:

  1. நாவாய் என்ற Naavaai / Navy என்ற சொல், ஆழிப்பெருமழையில் நாவாய் மூலம் தப்பிய தமிழ்குடிகளின் தலைவன் நாவாயி-Nove ன் தீரம், ஆதித்தமிழனின் அஞ்சாமைக்கு சான்று.

    ReplyDelete
  2. நாவாய் என்பதே ஆங்கிலத்தில் Navy என்றானது

    ReplyDelete