Thursday, April 7, 2011

69. பொற்றாமரை பெறுவாய்!

பாடியவர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 34- இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், ஆலத்தூர் கிழார் கிள்ளி வளவனைக் காணச் சென்றார். அவனுடைய படைச் சிறப்பும், கொடைச் சிறப்பும் அவரை மிகவும் கவர்ந்தன. அவனுடைய சிறப்பியல்புகளை எடுத்துக் கூறி, ஒரு பாணனை கிள்ளி வளவனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.


கையது கடன்நிறை யாழே; மெய்யது
புரவலர் இன்மையின் பசியே; அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
5 பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇப், பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்
10 குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்
புலாக்களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்குநிலை மாடத்து உறந்தை யோனே!
பொருநர்க்கு ஓக்கிய வேலன் ஒருநிலைப்
பகைப்புலம் படர்தலும் உரியன் தகைத்தார்
15 ஒள்ளெரி விரையும் உருகெழு பசும்பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்
நெடுங்கடை நிற்றலும் இலையே; கடும்பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி
நீஅவற் கண்ட பின்றைப் பூவின்
20 ஆடும்வண்டு இமிராத் தாமரை
சூடாய் ஆதல் அதனினும் இலையே.

அருஞ்சொற்பொருள்:
1. கடன் = முறை. 2. அரை = இடுப்பு. 3. வேர் = வேர்வை; சிதாஅர் = சிதார் = கந்தை. 4. ஓம்பி = பாதுகாத்து; உயவல் = வருத்தம். 5. பூட்கை = எழுச்சி, கொள்கை. 6 புல் = அற்பம், இழிவு (பொலிவற்ற); ஒக்கல் = சுற்றம். 7. பையென = மெல்ல. 10. கோட்டுமா = யானை; தொலைச்சி = கொன்று. 11. கலாம் = போர். 12. பிறங்கல் = உயற்சி. 14 படர்தல் = செல்லுதல்; தகை = பெருமை, மேம்பாடு. 15. உரு = நிறம்; புரை = ஒப்பு; பூண் = அணிகலன். 18. வீசுதல் = வரையாது கொடுத்தல். 20. இமிர்தல் = மொய்த்தல்.

கொண்டு கூட்டு: பாண, ஒக்கலையாய், வளைஇ, வினவுதியாயின், தானையை உடையவன், உறந்தையோன், அவன்பாற் படர்குவையாயின், நின் கையது யாழாதலானும், மெய்யது பசியாதனாலும் நெடுங்கடை நிற்றலுமில்லை; நீ அவற்கண்ட பின்றைத் தாமரை சூடாயாதல் அதனினும் இல்லை எனக் கூட்டுக.

உரை: உன் கையில் இருப்பது முறைப்படி செய்த யாழ். உன் உடல், உதவுவோர் இல்லாமையால் பசியால் வாடுகிறது. உன் இடுப்பில் இருப்பது, வியர்வையால் நனைந்த, கிழிந்த கந்தைத் துணி. அந்தத் துணியில் உள்ள கிழிசல்கள் வேறுவேறு நிறமுடைய நூல்களால் தைக்கப்பட்டிருக்கின்றன. நீ அதைப் பாதுகாத்து உடுத்திக் கொண்டிருக்கிறாய். வருத்தத்தில் உள்ள பாண, நீ எழுச்சி இல்லாதவனின் உடல்போலப் பொலிவற்ற பெரிய சுற்றத்தாரை உடையவன். இந்த நிலையில், நீ உலகம் முழுவதும் சுற்றி வந்து, “ என் வறுமையைத் தீர்ப்பவர் யார்?” என்று என்னிடம் மெல்லக் கேட்கின்றாயாயின், நான் கூறுவதைக் கேள்.

கிள்ளிவளவனின் கொடி பறக்கும் பாசறையில், பகை வேந்தர்களது யானைகள் புண்பட்டு வருந்தும். அவன், குருதிப் பரப்பில் யானைகளைக் கொன்று புலால் நாறும் போர்க்களத்தை ஏற்படுத்திய படையை உடையவன்; உயர்ந்த மாடங்களை உடைய உறையூரில் உள்ளான்; போரிடுவோரைத் தாக்குவதற்காக வேல் எடுத்தவன்; சில சமயங்களில் பகைவர் நாடுகளுக்கும் சென்று போர் புரிபவன்; பெருமைக்குரிய மாலையை உடையவன்; ஓலியுடன் கூடிய தீயைப் போன்ற நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய கிள்ளி வளவனிடம் சென்றாயானல், அவனுடைய நெடிய வாயிலில் நீ நெடுநேரம் காத்திருக்க மாட்டாய்; நண்பகல் நேரத்தில், அவன் பரிசிலர்க்குத் தேர்களை வழங்குவதை உன் கண்ணாரக் காண்பாய். நீ அவனைக் கண்ட பின்பு, பூக்களில் புகுந்து ஆடும் வண்டுகள் மொய்க்காத பொற்றாமரைப் பூவைச் சூடாது இருப்பது அதனினும் இல்லை. அதனால் அங்கு செல்வாயாக.

No comments:

Post a Comment