Friday, April 1, 2011

64. புற்கை நீத்து வரலாம்!

பாடியவர்: நெடும்பல்லியத்தனார்(64). புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். பல்லியம் என்று சொல்லுக்கு பலவகையான இசைக்கருவிகள் என்று பொருள். இவர் பல வகையான இசைக்கருவிகளை இயக்குவதில் வல்லவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 6-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், வறுமையில் வாடும் விறலி ஒருத்தியைப், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் சென்றால் அவள் வறுமை தீரும் என்று சொல்லி, அவளைப் புலவர் நெடும்பல்லியத்தனார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியிடம் ஆற்றுப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: விறலியாற்றுப்படை. அரசன் புகழ்பாடும் விறலியை வழிப்படுத்துதல்.

நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்
5 பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

அருஞ்சொற்பொருள்:
1. ஆகுளி = சிறுபறை; பதலை = மாக்கிணைப்பறை; சுருக்குதல் = கட்டுதல். 2. தில் - விருப்பத்தை உணர்த்தும் அசைச்சொல். 3. கணம் = கூட்டம்; அகன் = அகன்ற; பறந்தலை = போர்க்களம்; கண் = இடம். 4. எருவை = பருந்து; தடி = ஊன். 5 மரீஇய = பொருந்திய. 6. கோமான் = அரசன். 7. புற்கை = கஞ்சி, கூழ்; நீத்தல் = விட்டுவிடுதல்.


கொண்டு கூட்டு: சில்வளை விறலி, குடுமிக் கோமாற் கண்டு வரற்கே, செல்லாமோ எனக் கூட்டுக.

உரை: சில வளையல்களை மட்டுமே அணிந்த விறலியே! யானைக் கூட்டங்கள் போரிட்ட அகன்ற இடங்கள் உள்ள போர்க்களத்தில், ஆகாயத்தில் பறக்கும் பருந்துகளைப் பசுமையான ஊன் துண்டங்கள் தடுக்கும் பகைவர் நாட்டில் பொருந்திய முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு, கஞ்சி குடிக்கும் வறுமையான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கு, நல்ல யாழையும், சிறுபறையையும், ஒருதலை மாக்கிணையும் எடுத்துக் கட்டிக்கொண்டு செல்லுவோமா?

No comments:

Post a Comment