பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார் (60, 170, 321). உறையூரில் மருத்துவராகவும் புலவராகவும் வாழ்ந்தவர் தாமோதரனார். இவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் பிட்டங்கொற்றனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 58-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், உறையூர் மருத்துவன் தாமோதரனார், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் நாட்டிற்கு உண்டாகும் குறைகளை நீக்கி, நாட்டைக் காப்பதில் பெரு முயற்சியும் உழைப்பும் உடையவனாய் இருப்பதைப் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: குடை மங்கலம்: அரசன் குடையைப் புகழ்ந்து பாடுவது குடை மங்கலம் எனப்படும்.
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
5 சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ பலவே; கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்
10 வலன்இரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே.
அருஞ்சொற்பொருள்:
1. நாப்பண் = நடுவே; திமில் = மரக்கலம். 2. செம்மீன் = செவ்வாய், திருவாதிரை; மாகம் = மேலிடம்; விசும்பு = ஆகாயம். 3. உவவு = முழுநிலா (பௌர்ணமி). 4. கட்சி = காடு; மஞ்ஞை = மயில்; சுரம் = வழி; முதல் = இடம். 5. வல் = விரைவு. 6. கானல் = கடற்கரை. 7. கழி = உப்பளம்; மடுத்தல் = சேர்த்தல். 8. ஆரை = ஆரக்கால்; சாகாடு = வண்டி; ஆழ்ச்சி = பதிவு அழுந்துவது. 9. உரன் = வலிமை; நோன் = வலிமை; பகடு = எருது. 10. வலன் = வெற்றி; இரங்கல் = ஒலி; வாய்வாள் = குறி தவறாத.
கொண்டு கூட்டு: உவவுமதி கண்டு, விறலியும் யானும் தொழுதனம் அல்லமோ; எங்கோன், வளவன், வெண்குடை ஒக்கும் எனவே.
உரை: கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள விளக்குப் போல, சிவந்த வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து பலமுறை தொழுதோம் அல்லவோ? அது ஏன் தெரியுமா? கடற்கரையிடத்து உப்பங்கழியில் விளைந்த உப்பைச் சுமந்துகொண்டு மலை நட்டுக்குச் செல்லும் ஆரக்காலையுடைய வண்டியைக் குண்டு குழிகளின் வழியே இழுத்துச் செல்லும் வலிய காளையைப்போன்றவன் எம் தலைவன். அவன் வெற்றியுடன் முழங்கும் முரசையும், குறி தவறாத வாளையுமுடையவன். வெயிலை மறைபப்பதற்காக அவன் கொண்ட அச்சம் பொருந்திய சிறந்த மாலை அணிந்த குடையைப் போன்றது அந்த முழு நிலா என்று நினைத்து அவ்வாறு தொழுதோம்.
No comments:
Post a Comment