Tuesday, March 1, 2011

50. கவரி வீசிய காவலன்!

பாடியவர்: மோசிகீரனார் (50, 154, 155, 156, 186). இவர் மோசி என்பவரின் மகன் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர் மோசுக்குடி அல்லது மோசிக்குடி என்ற ஊரைச் சார்ந்தவராக இருந்ததாலும் கீரர் குடியினராக இருந்ததாலும் மோசிகீரனார் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் கொண்கான நாட்டுத் தலைவனையும் பாடியுள்ளார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற கருத்துச் செறிவுள்ள பாடல் (புறநானூறு - 186) இவர் இயற்றிய பாடல்களில் ஒன்று.

இவர் புறநானூற்றில் நான்கு செய்யுட்களும், அகநானூற்றில் ஒரு செய்யுளும் ( 392), குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (59, 84), நற்றிணையில் ஒரு செய்யுளும் ( 342) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. தகடூரைஅழித்து, அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதியமானை வென்றதால் இச்சேரமன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். இவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேரமன்னனுக்கும் அவன் மனைவி பதுமன் தேவிக்கும் மகனாகப் பிறந்தவன். பதிற்றுப்பத்தில் 8-ஆம் பத்தில் அரிசில் கிழார் இவனைப் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில் தன்னைப் புகழ்ந்து பாடியதற்குப் பரிசாக ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும், தன் அரண்மனையையும், நாட்டையும் அரிசில் கிழாருக்குப் பெருஞ்சேரல் இரும்பொறை பரிசாக அளித்தான். ஆனால், அரிசில் கிழார் இவன் நாட்டை ஆள்வதை விரும்பாமல், இவனிடத்தே அமைச்சராகப் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இச்சேரன், சோழனையும் பாண்டியனையும் போரில் வென்றதாகவும் கூறப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒருகால், மோசி கீரனார் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அக்காலத்தில், முரசுக் கட்டில் புனிதமானதாகக் கருதப்பட்டது. அந்தக் கட்டிலில் யாராவது படுத்தால் அவர்களுக்குக் கடுந்தண்டனை வழங்குவது வழக்கம். அவர்கள் கொலையும் செய்யப்படலாம். ஆனால், புலவர் மோசி கீரனார் முரசுக் கட்டிலில் உறங்குவதைக் கண்ட சேர மன்னன், அவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் அவருக்குக் கவரி வீசினான். மன்னனின் செயலால் மிகவும் வியப்படைந்த புலவர் மோசி கீரனார் அவனைப் பாராட்டும் வகையில் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
5 குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
10 அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ
இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது
15 உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில்நீ ஈங்குஇது செயலே.

அருஞ்சொற்பொருள்:
1. மாசு = குறை; விசித்தல் = இறுகக் கட்டுதல்; வார்பு = வார்; வள்பு = தோல். 2. மை = வயிரம்; மருங்குல் = நடுவிடம், பக்கம்; மஞ்ஞை = மயில். 3. ஒலித்தல் = தழைத்தல் (மிகுதல்). பீலி = மயில் தோகை; மணி = நீலமணி; தார் = மாலை. 4. பொலம் = பொன்; உழை = பூவிதழ்; உழிஞை = பொன்னிறமான ஒருவகைப் பூ. 5. வேட்கை = விருப்பம்; உரு = அச்சம். 6. மண்ணுதல் = கழுவுதல்; அளவை = அளவு. 7. சேக்கை = படுக்கை (தங்குமிடம்). 8. தெறு = சினம். 9. வாய் = வழி, மூலம். 10. சாலும் = சான்று. 12. மதன் = வலிமை; முழவு = முரசம்; ஓச்சுதல் = ஓட்டுதல்; 13. வியல் இடம் = அகன்ற இடம்; கமழ = பரக்க. 16. மாறு = இயல்பு, தன்மை. 17. வலம் = வெற்றி; குருசில் = குரிசில் = அரசன்.

கொண்டு கூட்டு: குருசில், நீ இது செய்தல், இசையுடையோர்க்கு அல்லது உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல் எனக் கூட்டுக.

உரை: குற்றமில்லாமல் வாரால் இறுக்கிக் கட்டப்பட்டு, வயிரங் கொண்ட கரிய மரத்தால் செய்யப்பட்டு, நடுவிடம் அழகாக விளங்குமாறு நெடிய மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, நீலமணிகளும் பொன்னிறமான உழிஞைப் பூக்களும் அணிந்து, குருதிப்பலியை விரும்பும் அச்சம் தரும் முரசு, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அவ்வேளையில், எண்ணெய் நுரையை முகந்து வைத்ததுபோல் இருந்த மெல்லிய மலர்க் கட்டிலை முரசுக்கட்டில் என்று அறியாது நான் ஏறிப் படுத்தேன். என் செயலுக்காக என்னைச் சினந்து, இரு கூறாக வெட்டக்கூடிய உன் கூரிய வாளால் வெட்டாமல் விடுத்தாய். நீ தமிழை நன்கு அறிந்தவன் என்பதற்கு அதுவே சான்று. அத்தோடு அமையாமல், என்னை அணுகி, உன்னுடைய வலிய, முரசு போன்ற தோளை வீசிச் சாமரத்தால் குளிர்ச்சி தரும் வகையில் விசிறியவனே! வெற்றி பொருந்திய தலைவ! பரந்த இவ்வுலகத்தில் புகழோடு வாழ்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு விண்ணுலகத்தில் வீடு பேறு இல்லை என்பதை நன்கு கேள்விப்பட்டிருந்ததால்தான் நீ இவ்விடத்து இச்செயலைச் செய்தாய் போலும்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், அரசர்கள் புலவர்களைப் பாராட்டி அவர்களுக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் அவர்களைப் பெரிதும் மதிப்பிற்குரியவராகக் கருதினர் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

5 comments:

  1. அரிய செய்தி செப்பிய நின்முயற்சி
    தமிழுலகம் போற்றும்
    வாழ்க நின்தமிழ்த் தொண்டு

    ReplyDelete
  2. அன்புள்ள்ள சுபைர் அவர்களுக்கு,

    தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    பிரபாகரன்

    ReplyDelete
  3. தேடிய செல்வம் கிடைத்தது. பண்டைய இந்திய வரலாறு பற்றிய நூலொன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் இந்தப் பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. தமிழில் அதை அப்படியே கொடுப்பதே சரியென்று தேடியபோது,இப்பக்கம் கிடைத்தது. பாடலோடு நீங்கள் கொடுத்துள்ள 'பொழிப்புரையை' அப்படியே எடுத்துக் கொண்டுள்ளேன். உங்கள் அனுமதி தேவை. நன்றி

    ReplyDelete
  4. அந்த நூல்: a history of ancient and early medieval india by Upinder Singh

    ReplyDelete
  5. அன்பிற்குரிய தருமி அவர்களுக்கு,
    வணக்கம்.
    என்னுடைய பொழிப்புரையை நீங்கள் உங்கள் நூலில் பயன்படுத்துவதற்கு மிக்க மகிழ்ச்சியோடு என் அனுமதியை அளிக்கிறேன். தொடர்பில் இருப்போம்.

    ReplyDelete