பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் (54, 61, 167, 180, 197, 394). இவர் கோனாட்டு எறிச்சிலூரைச் சார்ந்த மாடலன் என்பவனின் மகனாகையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவரால் பாடப்பட்டவர்கள்: சேரமான் குட்டுவன் கோதை, சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்தூர் கிழான் தோயன் நன்மாறன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழிய ஏனாதி திருக்குட்டுவன். இவர் இனிமையான பாடல்களை இயற்றுவதிலும், வஞ்சப் புகழ்ச்சியாகச் செய்யுள் இயற்றுவதிலும் வல்லவர்.
பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை (54). கோதை என்பது இவன் இயற்பெயர். இவன் சேர நாட்டின் ஒருபகுதியாகிய குட்ட நாட்டுக்குத் தலைவனாக இருந்தான். ஆகவே, இவன் குட்டுவன் கோதை என்று அழைக்கப்பட்டான்.
பாடலின் பின்னணி: குட்டுவன் கோதையின் கொடைச் சிறப்பையும், ஆட்சிச் சிறப்பையும், அவன் காட்சிக்கு எளியவனாக இருந்ததையும் இப்பாடலில் புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
5 இரவலர்க்கு எண்மை அல்லது; புரவுஎதிர்ந்து
வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
10 பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி
மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.
அருஞ்சொற்பொருள்:
1. கம்பலை = ஆரவாரம். 2. இடை = காலம் (சமயம்). 3. நாளவை = அரசன் நாட்பொழுதில் வீற்றிருக்கும் அவை (அரசவை). 5. எண்மை = எளிமை; புரவு = கொடை, பாதுகாப்பு; எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு. 7. ஆனாது = குறையாது. 8. கடு = விரைவு; மான் = குதிரை; துப்பு = வலிமை; எதிர்ந்து = எதிர்த்து, மாறாகத் தாக்குதல். 10. பாசிலை = பச்சிலை; உவலை = தழை; கண்ணி = மாலை. 11. மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய். 12. ஆயம் = ஆடுகளின் கூட்டம். 13. துஞ்சுதல் = தங்குதல்.
கொண்டு கூட்டு: எங்கோன் இருந்த மூதூர்ப் புகுதல் இரவலர்க்கு எளிது; அவனுடைய நாடு, மன்னர் நினைக்குங் காலை இடையன் சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத்து அற்று எனக் கூட்டுக.
உரை: எம்முடைய அரசன் இருந்த ஆரவாரமான பழைய ஊரில், அந்த ஊருக்கு உரியவர்கள் போல், காலம் பாராது நெருங்கி, அரசன் வீற்றிருக்கும் நாளவைக்குள் தலைநிமிர்ந்து செல்லுதல் எம் போன்ற இரவலர்க்கு எளிது. அது இரவலர்க்குத்தான் எளிதே அல்லாமல், அவனுடைய பகைவர்களுக்கு எளிதல்ல. கோதை தன் நாட்டின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டு, மழை பொழியும் வானம் நாணும் வகையில் தன்னிடம் வந்தோர்க்குக் குறையாது கொடுக்கும் கவிந்த கைகளையுடைய வள்ளல். வலிமை மிகுந்த பெரிய கைகளையுடைய அவன் வலிமையை எதிர்த்து, அவன் நாட்டுக்குள் வந்த வஞ்சின வேந்தரை எண்ணும் பொழுது, அவர்களின் நிலை, பசிய இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையையும், அழுக்குப் படிந்த உடையையும், சீழ்க்கை அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.
No comments:
Post a Comment