Friday, March 4, 2011

53. செந்நாவும் சேரன் புகழும்!

பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார் ( 53). இளங்கீரனார் என்பது இவர் இயற்பெயர். இவர் பொருந்தில் என்ற ஊரைச் சார்ந்தவர். அதனால், இவர் பொருந்தில் இளங்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் (19, 351) இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இச்சேர மன்னன், சேரன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றும் அழைக்கப்பட்டான். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடலின் பின்னணி: இச்சேர மன்னனின் நாட்டில் இருந்த விளங்கில் என்னும் ஊரைப் பகைவர்கள் முற்றுகையிட்டு, அங்கிருந்த மக்களைத் துன்புறுத்தினர். இவன் யானைப்படையையும் குதிரைப்படையையும் கொண்டு சென்று பகவர்களை வென்று அவ்வூரில் இருந்த மக்களைக் காப்பாற்றினான். தன் வெற்றியைப் புகழந்து பாடப், பெரும் புலவர் கபிலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மாந்தரஞ்சேரல் இரும்பொறை கூறினான். அதைக் கேட்ட புலவர் பொருந்தில் இளங்கீரனார், தான் தம்மால் இயன்ற அளவில் அவனைப் புகழ்ந்து பாடுவதாகக் கூறி இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

முதிர்வார் இப்பி முத்த வார்மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து
இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற
5 களங்கொள் யானைக் கடுமான் பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
10 வாழேம் என்றலும் அரிதே; தாழாது
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப்
15 பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே.

அருஞ்சொற்பொருள்:
1. முதிர் = முதிர்ந்த; வார் = நெடுமையாதல், ஒழுங்கு படுதல்; இப்பி = சிப்பி. 2. பொருதல் = தாக்குதல் (கவருதல்). 3. இலங்குதல் = விளங்கல்; தெற்றி = திண்ணை. 4. விளங்கில் = ஒரு ஊர்; விழுமம் = இடும்பை ( பகைவரால் வந்த இடும்பை). 7. மம்மர் = மயக்கம்; ஒருதலை = உறுதி; கைமுற்றுதல் = முடிவு பெறுதல். 10. தாழாது = விரைந்து. 12. வெறுத்த = மிகுந்த. 13. மன் – கழிவின் கண் வந்த அசைச் சொல்.14. ஆடு = வெற்றி; வரிசை = சிறப்பு. 15. மன், ஆல் – அசைச் சொற்கள்; கடப்பு = கடத்தல் = வெல்லுதல்.

கொண்டு கூட்டு: பொறைய, ”கபிலன் இன்றுளன் ஆயின் நன்று மன்” என்ற நின் ஆடு கொள் வரிசைக் கொப்பப் பகைவரைக் கடப்பை; யான் தாழாது பாடுவேன்; நின் புகழ் விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; ஆதலான் எமக்குக் கைம்முற்றல; ஒளியோர் பிறந்த இம் மலர்தலை உலகத்து வாழேம் என்றலும் அரிது என மாறிக் கூட்டுக.

உரை: முதிர்ந்து நீண்ட சிப்பியில் உள்ள முத்துப் போல் பரவிக் கிடந்த மணலில் ஒளிவிடும் மணிகளால் கண்ணைப் பறிக்கின்ற மாடங்களில், விளங்கும் வளையல்களை அணிந்த மகளிர், திண்ணைகளில் விளையாடும் விளங்கில் என்னும் ஊர்க்குப் பகைவரால் வந்த துன்பங்களைத் தீர்ப்பதற்காகப் போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானைப்படையையும் விரைந்து செல்லும் குதிரைப்படையையும் உடைய பொறைய! உன் புகழை விரித்துக் கூறினால் அது நீளும்; சுருக்கமாகத் தொகுத்துக் கூறினால் பல செய்திகள் விடுபட்டுப் போகும். ஆதலால், மயக்கமுறும் நெஞ்சத்தையுடைய எம் போன்றவர்களால் உன் புகழை உறுதியாகக் கூற முடியாது. அதனால், கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பிறந்த இப்பெரிய உலகத்து வாழ்க்கையை வெறுத்து வாழ மாட்டோம் என்று கூறுவதும் இயலாத செயல். ”விரைவாகப் பல பொருள்களையும் அடக்கிய சிறந்த செய்யுட்களை இயற்றும் மிகுந்த கேள்வி அறிவுடைய , புகழ் மிக்க கபிலர் இன்று இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நீ கூறினாய். உன் வெற்றிச் சிறப்புக்குப் பொருந்தும் முறையில் என்னால் முடிந்தவரை உன் வெற்றியைப் புகழ்ந்து பாடுவேன்.

சிறப்புக் குறிப்பு: “தெற்றி” என்ற சொல்லுக்குப் பெண்கள் கைகோத்து ஆடும் குரவை ஆட்டம் என்றும் பொருள் கொள்ளலாம்.

1 comment:

  1. விழுமம் என்ற சொல்லுக்கு சீரும் சிறப்பும் தான் முதன்மை பொருள் ஆதலால் சேரன் விளங்கில் சிறப்பை அழித்தான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

    மற்றும் அலம்பேரி சாத்தனார் யானைப் படையை கடலன் முறியடித்தார் என்றும் கூறி உள்ளார், மேலே உள்ள சேர அரசன் யானைப்படையின் வெற்றியை பாடவே இந்த புலவர் கபிலர்க்கு பதில் நான் உள்ளேன் என்று கூறுகிறார்.

    ஆலம்பேரி சாத்தனார் பாடல் மிக தெளிவாக காட்டுகிறது. இந்த விளங்கில் சிறப்பாக காட்டும் கடல் வளம் பாண்டியர் சேரர்க்கு இடைப்பட்ட கடற்கரை பகுதி. மாங்குளம் கல்வெட்டில் கடலன் மற்றும அவன் அரசன் நெடுஞ்செழியன் குறிப்பிடப் படுகிறார்கள் இந்த இருவரும்
    ஆலம்பேரி சாத்தனார் மூலம் பாடப் படுகிறார்கள்.

    ReplyDelete