Friday, March 4, 2011

52. ஊன் விரும்பிய புலி !

பாடியவர்: மருதன் இளநாகனார் (52, 55, 138, 139, 349). இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும் கூறுவர். இவர் பாடிய பாட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இவர் திருச்செந்தூர் அருகில் பிறந்தவராக இருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவர் மருதத்திணை சார்ந்த பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன். ஆகவே, தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்களும், அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் நான்கு (77, 160, 279, 367) செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 51-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, தன் நாட்டை விரிவு படுத்த விரும்பிப் போருக்கு எழுவதை அறிந்த புலவர் மருதன் இளநாகனார், இப்பாடலில், அவன் போருக்குச் செல்வதை, புலி ஊன் விரும்பித் தன் குகையிலிருந்து வெளியே செல்வதற்கு ஒப்பிடுகிறார். மற்றும் அவனை எதிர்ப்பவர்களின் நாடு வளமிழந்து காடாகி அழியும் என்று அவன் போர்செய்யும் ஆற்றலை இப்பாடலில் புகழ்ந்து பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

அணங்குஉடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்
ஊன்நசை உள்ளம் துரப்ப, இரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு
5 வடபுல மன்னர் வாட அடல்குறித்து
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின் இருநிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
10 வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின் ஒரீஇ இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
15 வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே.

அருஞ்சொற்பொருள்:
1.அணங்கு = தெய்வத்தன்மை (அச்சம்); அளை = குகை; முனைஇ = வெறுத்து. 2. முணங்குதல் = சோம்பல் முறித்தல்; ஒருத்தல் = ஆண் புலி (விலங்கேற்றின் பொது). 3. துரப்புதல் = தேடுதல். 5. அடல் = கொல்லுதல். 7. கண்ணுதல் = கருதல். 8. அளியர் = இரங்கத் தக்கவர். 10. உழை = இடம், பக்கம்; மருது = மருத மரம்; வாங்கு = வளைந்த; சினை = கிளை; வலக்கும் = சூழும். 11. யாணர் = புது வருவாய்; ஒரீஇ = நீங்கி, விலகி; இனி = இப்போது, இனிமேல். 12. கலி = ஆரவாரம் (முழவு ஒலித்தல்); கந்தம் = தூண். 13. பொதியில் = அம்பலம் (மன்றம், சபை). 14. நாய் = சூதாடு கருவி. 15. வல் = சூதாடுங் காய்; வல்லின் நல்லகம் = சூதாடும் இடம். 16. வாரணம் = காட்டுக் கோழி. 17. விளிதல் = அழிதல்.

கொண்டு கூட்டு: வழுதி, அடல் குறித்து நீ கண்ணியது இதுவாயின் விளியும் நாடுடையோர் தாம் யார்கொல் அளியர் எனக் கூட்டுக.

உரை: அச்சம் தரும் நெடிய சிகரங்களையுடைய மலையிலுள்ள குகையில் இருப்பதை வெறுத்து, சோம்பல் முறித்து எழுந்த வலிமை நிரம்பிய ஆண்புலி, இரையை விரும்பும் உள்ளத்தால் உந்தப்பட்டு, அது வேண்டிய இடத்தே விரும்பிச் சென்றது போல, வட நாட்டு வேந்தரைக் கொல்லுவதை எண்ணி, கொடிய போரைச் செய்வதற்கேற்ப நன்கு செய்யப்பட்ட தேரையுடைய வழுதி! நீ கருதியது போர் எனின் உன்னை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் இரங்கத் தக்கவர்கள். முன்பு, உன் பகைவர்களின் நாடுகளில், ஊர்தோறும் மீன் சுடுகின்ற புகையினது புலால் நாற்றம், வயல்களின் அருகே உள்ள மருதமரத்தின் வளைந்த கிளைகளைச் சூழ்ந்து இருக்கும். அத்தகைய நீர் வளமும், நிலவளமும், புதுவருவாயும் உள்ள ஊர்கள், இப்பொழுது அந்த வளமனைத்தும் இழந்து காணப்படுகின்றன. மற்றும், அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில், புள்ளிகள் உள்ள காட்டுக் கோழிகள் முட்டையிடுகின்றன. உன் பகைவர்களின் நாடுகள் இவ்வாறு காடகி அழியும்.

சிறப்புக் குறிப்பு: வழிபாடு நடைபெறும் இடங்களிலுள்ள தூண்களில் கடவுள் தங்கி இருப்பதாக நம்பிக்கை நிலவியது. உதாரணமாக, “கடவுள் போகிய கருந்தாட் கந்தம்” என்று அகநானூற்றுப் பாடல் 307-இல் கூறப்பட்டிருப்பதைக் காண்க.

51. கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே

பாடியவர்: ஐயூர் முடவனார் ( 51, 228, 314, 399). இவர் ஐயூர் என்னும் ஊரினர். இவர் முடவராக இருந்ததார் என்பது, தாமன் தோன்றிக்கோனைச் சென்றடைந்து, வண்டியை இழுத்துச் செல்வதற்கு காளைமாடுகள் வேண்டும் என்று இவர் பாடிய பாடலிலிருந்து (399) தெரியவருகிறது. இவர் ஆதன் எழினியையும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் பாடியுள்ளார். இவர் அகநானூற்றில் ஒருசெய்யுளும் ( 216) , குறுந்தொகையில் மூன்று செய்யுட்களும் (123, 206, 322), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (206, 344) இயற்றியுள்ளார். இவர் பாடல்கள் அனைத்தும் மிகுந்த இலக்கிய நயமுடையவை.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. கூடகாரம் என்பது பாண்டிய நாட்டிலிருந்த ஓரூர். அவ்வூரில் இறந்ததால் இவன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்று அழைக்கப்பட்டான். இவன் போர் புரிவதில் பேராற்றல் கொண்டவனாக இருந்தான் என்பது இப்பாடலிருந்தும் இதற்கு அடுத்த பாடலிலிருந்தும் தெரிகிறது.
பாடலின் பின்னணி: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்த காலத்தில், அவன் ஆணைக்குப் பணிந்து திறை செலுத்தி வாழாமல் அவனுடன் பகைமை கொண்டு போரிட்டவர்களின் வலிமையை அழித்து அவர்கள் நாட்டிலும் தன் ஆட்சியை நிலை நாட்டினான். அவன் வலிமையை இப்பாடலில் ஐயூர் முடவனார் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
5 தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
10 செம்புற்று ஈயல் போல
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே.

அருஞ்சொற்பொருள்:
1. சிறை = தடை, கட்டுப்பாடு. 3. வளி = காற்று. 4. ஓர் அன்ன = ஒப்ப. 6. கொண்டி = பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல் (திறை). 8. அளி = இரக்கம்; அளியர் = இரங்கத் தக்கவர்; அளி இழந்தோர் = இரக்கத்தை இழந்தோர். 9. சிதலை = கறையான். 11. உலமறல் = சுழற்சி.

கொண்டு கூட்டு: வழுதி, தமிழ்ப் பொதுவெனப் பொறானாய்க் கொண்டி வேண்டுவனாயின், கொடுத்த மன்னர் நடுக்கற்றனர்; கொடாமையின் அவன் அளியிழந்தோர் , ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்; ஆதலான் அவர் அளியோரோ அளியோர் எனக் கூட்டுக.

உரை: நீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை; நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான். அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான். அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர். ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.

Tuesday, March 1, 2011

50. கவரி வீசிய காவலன்!

பாடியவர்: மோசிகீரனார் (50, 154, 155, 156, 186). இவர் மோசி என்பவரின் மகன் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர் மோசுக்குடி அல்லது மோசிக்குடி என்ற ஊரைச் சார்ந்தவராக இருந்ததாலும் கீரர் குடியினராக இருந்ததாலும் மோசிகீரனார் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் கொண்கான நாட்டுத் தலைவனையும் பாடியுள்ளார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற கருத்துச் செறிவுள்ள பாடல் (புறநானூறு - 186) இவர் இயற்றிய பாடல்களில் ஒன்று.

இவர் புறநானூற்றில் நான்கு செய்யுட்களும், அகநானூற்றில் ஒரு செய்யுளும் ( 392), குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (59, 84), நற்றிணையில் ஒரு செய்யுளும் ( 342) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. தகடூரைஅழித்து, அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதியமானை வென்றதால் இச்சேரமன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று அழைக்கப்பட்டான். இவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேரமன்னனுக்கும் அவன் மனைவி பதுமன் தேவிக்கும் மகனாகப் பிறந்தவன். பதிற்றுப்பத்தில் 8-ஆம் பத்தில் அரிசில் கிழார் இவனைப் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில் தன்னைப் புகழ்ந்து பாடியதற்குப் பரிசாக ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும், தன் அரண்மனையையும், நாட்டையும் அரிசில் கிழாருக்குப் பெருஞ்சேரல் இரும்பொறை பரிசாக அளித்தான். ஆனால், அரிசில் கிழார் இவன் நாட்டை ஆள்வதை விரும்பாமல், இவனிடத்தே அமைச்சராகப் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இச்சேரன், சோழனையும் பாண்டியனையும் போரில் வென்றதாகவும் கூறப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒருகால், மோசி கீரனார் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அக்காலத்தில், முரசுக் கட்டில் புனிதமானதாகக் கருதப்பட்டது. அந்தக் கட்டிலில் யாராவது படுத்தால் அவர்களுக்குக் கடுந்தண்டனை வழங்குவது வழக்கம். அவர்கள் கொலையும் செய்யப்படலாம். ஆனால், புலவர் மோசி கீரனார் முரசுக் கட்டிலில் உறங்குவதைக் கண்ட சேர மன்னன், அவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் அவருக்குக் கவரி வீசினான். மன்னனின் செயலால் மிகவும் வியப்படைந்த புலவர் மோசி கீரனார் அவனைப் பாராட்டும் வகையில் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
5 குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
10 அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ
இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது
15 உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில்நீ ஈங்குஇது செயலே.

அருஞ்சொற்பொருள்:
1. மாசு = குறை; விசித்தல் = இறுகக் கட்டுதல்; வார்பு = வார்; வள்பு = தோல். 2. மை = வயிரம்; மருங்குல் = நடுவிடம், பக்கம்; மஞ்ஞை = மயில். 3. ஒலித்தல் = தழைத்தல் (மிகுதல்). பீலி = மயில் தோகை; மணி = நீலமணி; தார் = மாலை. 4. பொலம் = பொன்; உழை = பூவிதழ்; உழிஞை = பொன்னிறமான ஒருவகைப் பூ. 5. வேட்கை = விருப்பம்; உரு = அச்சம். 6. மண்ணுதல் = கழுவுதல்; அளவை = அளவு. 7. சேக்கை = படுக்கை (தங்குமிடம்). 8. தெறு = சினம். 9. வாய் = வழி, மூலம். 10. சாலும் = சான்று. 12. மதன் = வலிமை; முழவு = முரசம்; ஓச்சுதல் = ஓட்டுதல்; 13. வியல் இடம் = அகன்ற இடம்; கமழ = பரக்க. 16. மாறு = இயல்பு, தன்மை. 17. வலம் = வெற்றி; குருசில் = குரிசில் = அரசன்.

கொண்டு கூட்டு: குருசில், நீ இது செய்தல், இசையுடையோர்க்கு அல்லது உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல் எனக் கூட்டுக.

உரை: குற்றமில்லாமல் வாரால் இறுக்கிக் கட்டப்பட்டு, வயிரங் கொண்ட கரிய மரத்தால் செய்யப்பட்டு, நடுவிடம் அழகாக விளங்குமாறு நெடிய மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, நீலமணிகளும் பொன்னிறமான உழிஞைப் பூக்களும் அணிந்து, குருதிப்பலியை விரும்பும் அச்சம் தரும் முரசு, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அவ்வேளையில், எண்ணெய் நுரையை முகந்து வைத்ததுபோல் இருந்த மெல்லிய மலர்க் கட்டிலை முரசுக்கட்டில் என்று அறியாது நான் ஏறிப் படுத்தேன். என் செயலுக்காக என்னைச் சினந்து, இரு கூறாக வெட்டக்கூடிய உன் கூரிய வாளால் வெட்டாமல் விடுத்தாய். நீ தமிழை நன்கு அறிந்தவன் என்பதற்கு அதுவே சான்று. அத்தோடு அமையாமல், என்னை அணுகி, உன்னுடைய வலிய, முரசு போன்ற தோளை வீசிச் சாமரத்தால் குளிர்ச்சி தரும் வகையில் விசிறியவனே! வெற்றி பொருந்திய தலைவ! பரந்த இவ்வுலகத்தில் புகழோடு வாழ்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு விண்ணுலகத்தில் வீடு பேறு இல்லை என்பதை நன்கு கேள்விப்பட்டிருந்ததால்தான் நீ இவ்விடத்து இச்செயலைச் செய்தாய் போலும்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், அரசர்கள் புலவர்களைப் பாராட்டி அவர்களுக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் அவர்களைப் பெரிதும் மதிப்பிற்குரியவராகக் கருதினர் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

49. யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?

பாடியவர்: பொய்கையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.
பாடலின் பின்னணி: சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலவளங்களெல்லாம் அடங்கியது. ஆகவே, அவன் நாடு எத்தகையது என்று எளிதில் கூற முடியாது என்ற கருத்தில் கோதையின் நாட்டைப் புலவர் பொய்கையார் இப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: புலவர் ஆற்றுப்படை. இயன்மொழியும் ஆகும்.
புலவர் ஆற்றுப்படை: புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.
இயன்மொழி: இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின் அயலது
5 இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே!

அருஞ்சொற்பொருள்:
1. நாடு = குறிஞ்சி நிலப்பகுதி; நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்; ஊர் = மருத நிலப்பகுதி. ஊரன் = மருதநிலத் தலைவன். 2. பாடு = ஓசை; இமிழ் = ஆரவாரம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன். 3.ஓங்கு = மேம்பட்ட; ஓங்குதல் = பெருமையுறல்; கோதை = சேரன். 4. புனவர் = குறிஞ்சி நில மக்கள். தட்டை = கிளி ஓட்டுங்கருவி. 5. இறங்கு கதிர் = வளைந்த கதிர்; அலமருதல் = சுழல். 6. பிறங்குதல் = ஒலித்தல், மிகுதி; சேர்ப்பு = கடற்கரை.

கொண்டு கூட்டு: புனவர் தட்டை புடைப்பின் கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழும்; ஆதலால், கோதையை யாங்கன் மொழிகோ எனக் கூட்டுக.

உரை: தினைப்புனங்காப்போர் தட்டை என்னும் பறையை அடித்துத் ஒலி எழுப்பினால், அப்புனத்திற்கு அருகே, வளைந்த கதிர்களையுடைய வயல்களிலிலும், நீர் மிகுந்த கடற்கரையிலும் உள்ள பறவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எழுகின்றனவே. சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி நிலமுடையதால் அவனை நாடன் (குறிஞ்சி நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு மருத நிலமுடையதால் அவனை ஊரன் (மருத நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு ஒலிமிகுந்த குளிர்ந்த கடலை உடையதால் அவனைச் சேர்ப்பன் (நெய்தல் நிலத் தலைவன்) என்பேனா? உயர்ந்த வாளையுடைய கோதையை எப்படிக் கூறுவேன்?

சிறப்புக் குறிப்பு: தினைப்புனங்கள் குறிஞ்சி நிலத்திலும், வயல்கள் மருத நிலத்திலும், கடல் சார்ந்த நிலம் நெய்தலிலும் உள்ளவை ஆகையால் கோக்கோதையின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலவளங்களும் உடையது என்று புலவர் பொய்கையார் கூறுவது இப்பாடலிலிருந்து தெரிகிறது. புனவர் தட்டை புடைத்தல் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் நிகழ்வதாகையால், நாடன் என்பது குறிஞ்சி மற்றும் முல்லை நிலத் தலைவனையும் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். ஆகவே, கோக்கோதையின் நாடு குறிஞ்சி, முல்லை, மருதம் மற்ரும் நெய்தல் ஆகிய நானில வளமும் உடையது என்ற கருத்தில் புலவர் பொய்கையார் இப்பாடலில் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

இப்பாடலில் புலவர் ஒருவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை. கோக்கோதையின் இயல்பைப் புகழ்ந்ததால், இப்பாடல் இயன்மொழித் துறையைச் சார்ந்ததாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

48. எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல !

பாடியவர்: பொய்கையார் (48, 49). இவர் இப்பாடலில், “கள்நாறும்மே கானலம் தொண்டி; அஃது எம் ஊரே” என்று கூறியிருப்பதிலிருந்து இவருடைய ஊர் தொண்டி என்பது தெரிய வருகிறது. புறநானூற்றில் இவர் பாடிய இரண்டு பாடல்களும் சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும். இவர் நற்றிணையில் 18 - ஆம் செய்யுளையும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன் (48, 49). இவன் சேர வேந்தருள் ஒருவன். கோதை மார்பன் என்பது இவன் இயற்பெயர் என்றும், இவன் தொண்டி என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு தன் நாட்டை ஆட்சி செய்தான் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவன் நாடு குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலப்பகுதிகளைக் கொண்டிருந்ததாகப் புலவர் பொய்கையார், புறநானூற்றுப் பாடல் 49-இல் கூறுகிறார்.

கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னன் சேரன் செங்குட்டுவனின் மகன் என்றும் இவன் குட்டுவன் கோதை, கோதை மார்பன், மாக்கோதை மார்பன், கடுமான் கோதை, செங்கோல் குட்டுவன், கடும்பகட்டியானை நெடுந்தேர்க் குட்டுவன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் முதலிய பெயர்களாலும் அழைக்கப் பட்டதாகவும் பேராசிரியர் முனைவர் கோ. தங்கவேலு தம் நூலில் குறிப்பிடுகிறார். சேரன் செங்குட்டுவனுக்குக் குட்டுவன் சேரல் என்று ஒருமகன் இருந்ததாகவும், அவனைப் புலவர் பரணர் என்பவருக்கு சேரன் செங்குட்டுவன் பரிசாக அளித்ததாகவும் பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகத்தில் காண்கிறோம். சேரன் கோக்கோதை மார்பன் என்பவனும், சேரன் செங்குட்டுவனின் மகனாகிய குட்டுவன் சேரல் என்பவனும் ஒருவனா என்பது ஆய்வுக்குரியது.
பாடலின் பின்னணி: சேரன் கோக்கோதை மார்பனைப் பாடிப் பரிசுபெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரைச் சேரனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: புலவர் ஆற்றுப்படை. புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
5 அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1.கோதை = சேரன், பூமாலை. 3. மா = கரிய; கழி = உப்பங்கழி, கானல் (கடற்கரைச் சோலை). 4. கள் = மலர்த்தேன்; கானல் = கடற்கரைச் சோலை. 6. படர்தல் = செல்லுதல். 7. முதுவாய் = முதிய வாய்மையுடைய. 8. அமர் = போர்; மேம்படுதல் = உயர்தல். 9. மேம்படுநனை = மேம்படுத்துபவனை.

கொண்டு கூட்டு: இரவல, நீயும் அன்னோர் படர்குவை ஆயின், நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனக் கூட்டுக.

உரை: சேரன் கோக்கோதை மார்பில் அணிந்த மாலையாலும், அந்தக் கோதையைக் கூடிய மகளிர் அணிந்த மாலைகளாலும், கரிய நிறமுடைய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன். முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடை ய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக.

சிறப்புக் குறிப்பு: தலவனின் இயல்பையும் ஊரையும் கூறி, “ முதுவாய் இரவல எம்முள் உள்ளும்” என்று தன் தலைமை தோன்றுமாறு கூறியதால், இப்பாடல் புலவர் ஆற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.

47. புலவரைக் காத்த புலவர்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 44-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் உரையூருக்குச் சென்றான். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நெடுங்கிள்ளி, இளந்தத்தன் ஒருவொற்றன் என்று கருதி அவனைக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், இளந்ததத்தன் ஒற்றன் அல்லன் என்று நெடுங்கிள்ளிக்கு எடுத்துக் கூறி இளந்தத்தனைக் காப்பற்றினார். இப்பாடல் அச்சமயம் இயற்றப்பட்டது.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்தும் சுற்றம் அருத்தி
5 ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே, திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ்
10 மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. வள்ளியோர் = வரையாது கொடுப்போர்; படர்தல் = நினைத்தல். புள் = பறவை. 2. சுரம் = பாலைவழி. 3. வடியா = தெளிவில்லாத; வடித்தல் = தெளித்தெடுத்தல். 4. அருத்தல் = உண்பித்தல். 5. ஓம்புதல் = பாதுகாத்தல்; கூம்பல் = ஊக்கங்குறைதல். வீசுதல் = வரையாது கொடுத்தல். 6. வரிசை = சிறப்பு, மரியாதை, பாராட்டு; பரிசில் = கொடை, ஈகை. 7. திறம் = திறமை (அறிவு); திறப்படல் = கூறுபடல், தேறுதல், சீர்ப்படுதல்; நண்ணார் = பகைவர் (மாறுபட்ட கருத்துடைய மற்ற புலவர்கள்). 11. செம்மல் = தருக்கு (பெருமிதம்).

கொண்டு கூட்டு: பரிசில் வாழ்க்கை நும்மோர் அன்ன செம்மலும் உடைத்து; ஆதலால், நண்ணார் நாண இனிது ஒழுகின் அல்லது பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்று எனக் கூட்டுக.

உரை: வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து, பறவைகள் போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண்டும் என்று எண்ணி, அவற்றைப் பாதுகவாமல் உண்டு, பிறர்க்கும் குறையாது கொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வருந்துவதுதான் பரிசிலர் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதை அறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்யமாட்டர்கள். புலவர்கள், கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர்கள்.

சிறப்புக் குறிப்பு: கோவூர் கிழார் இளந்தத்தனைக் காப்பாற்றுவதற்காக நெடுங்கிள்ளியைச் சமாதானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், இப்பாடல் துணை வஞ்சித்துறையைச் சார்ந்ததாயிற்று.

46. அருளும் பகையும்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவன், தன் பகைவனாகிய மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலின் கீழே இட்டுக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க விரும்பி இப்பாடலை இயற்றினார். “நீ, ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அளித்த சிபியின் வழித்தோன்றல். இவர்கள் புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மலையமானின் சிறுவர்கள்; இவர்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. நான் கூற விரும்பியதைக் கூறினேன். நீ உன் விருபபப்ப்டி செய்.” என்று கிள்ளிவளவனிடம் கோவூர் கிழார் முறையிடுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

நீயோ, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
5 களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கண்நோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.

அருஞ்சொற்பொருள்:
1. அல்லல் = துன்பம். 2. இடுக்கண் = துன்பம்; மருகன் = வழித்தோன்றல். 3. புலன் = அறிவு; புன்கண் = துன்பம். 5. அழூஉம் அழாஅல் = அழுகின்ற அழுகை. மன்று = மன்றம்; மருளல் = வெருளுதல், அஞ்சுதல். 6. புன்தலைச் சிறாஅர் = சிறிய தலையையுடைய சிறுவர்கள். 7. விருந்து = புதிது. 8. வேட்டது = விரும்பியது; செய்ம்மே = செய்வாயாக.

கொண்டு கூட்டு: அழும் அழால் களிறு கண்டு மறந்த எனக் கூட்டுக.

உரை: நீயோ, ஒருபுறா அடைந்த துன்பம் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் துன்பத்தையும் களைந்த சிபியின் வழித்தோன்றல். இவர்களோ, அறிஞர்களின் வறுமைக்கு அஞ்சித், தம்மிடத்து உள்ளவற்றைப் பகிர்ந்து உண்ணும் இரக்க குணமுள்ளவர்களின் மரபினர். இவர்கள், முன்பு யானைகளைக் கண்டு அஞ்சி அழுதனர்; இப்பொழுது இந்தச் சிறுவர்கள் இந்த மன்றத்தைப் பார்த்த வியப்பால் தங்கள் அழுகையை மறந்தனர். ஆனால், முன்பு அறியாத புதிய துன்பத்தை அவர்கள் இப்பொழுது அடைந்திருக்கிறார்கள். நான் கூறியதைக் கேட்ட பிறகு, நீ உன் விருப்பப்படி செய்க.

சிறப்புக் குறிப்பு: மலையமானின் சிறுவர்களைக் கொலை செய்யவிருக்கும் கிள்ளிவளவனிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி கோவூர் கிழார் அவனைச் சமாதானப் படுத்துவதால், இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.

“புலன் உழுது உண்மார்” என்பது அறிவையே தம் தொழிலாகக் கொண்டவர்கள் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

”புல்” என்னும் சொல்லுக்குச், ”சிறுமை”, ”அற்பம்” என்று பொருள். இங்கு, “புன்தலைச் சிறாஅர்” என்பது அவர்கள் மிகவும் சிறியவர்கள் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டுள்ளது.