Tuesday, March 1, 2011

49. யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?

பாடியவர்: பொய்கையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 48-இல் காண்க.
பாடலின் பின்னணி: சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலவளங்களெல்லாம் அடங்கியது. ஆகவே, அவன் நாடு எத்தகையது என்று எளிதில் கூற முடியாது என்ற கருத்தில் கோதையின் நாட்டைப் புலவர் பொய்கையார் இப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: புலவர் ஆற்றுப்படை. இயன்மொழியும் ஆகும்.
புலவர் ஆற்றுப்படை: புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.
இயன்மொழி: இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின் அயலது
5 இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே!

அருஞ்சொற்பொருள்:
1. நாடு = குறிஞ்சி நிலப்பகுதி; நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்; ஊர் = மருத நிலப்பகுதி. ஊரன் = மருதநிலத் தலைவன். 2. பாடு = ஓசை; இமிழ் = ஆரவாரம்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன். 3.ஓங்கு = மேம்பட்ட; ஓங்குதல் = பெருமையுறல்; கோதை = சேரன். 4. புனவர் = குறிஞ்சி நில மக்கள். தட்டை = கிளி ஓட்டுங்கருவி. 5. இறங்கு கதிர் = வளைந்த கதிர்; அலமருதல் = சுழல். 6. பிறங்குதல் = ஒலித்தல், மிகுதி; சேர்ப்பு = கடற்கரை.

கொண்டு கூட்டு: புனவர் தட்டை புடைப்பின் கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழும்; ஆதலால், கோதையை யாங்கன் மொழிகோ எனக் கூட்டுக.

உரை: தினைப்புனங்காப்போர் தட்டை என்னும் பறையை அடித்துத் ஒலி எழுப்பினால், அப்புனத்திற்கு அருகே, வளைந்த கதிர்களையுடைய வயல்களிலிலும், நீர் மிகுந்த கடற்கரையிலும் உள்ள பறவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எழுகின்றனவே. சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி நிலமுடையதால் அவனை நாடன் (குறிஞ்சி நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு மருத நிலமுடையதால் அவனை ஊரன் (மருத நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு ஒலிமிகுந்த குளிர்ந்த கடலை உடையதால் அவனைச் சேர்ப்பன் (நெய்தல் நிலத் தலைவன்) என்பேனா? உயர்ந்த வாளையுடைய கோதையை எப்படிக் கூறுவேன்?

சிறப்புக் குறிப்பு: தினைப்புனங்கள் குறிஞ்சி நிலத்திலும், வயல்கள் மருத நிலத்திலும், கடல் சார்ந்த நிலம் நெய்தலிலும் உள்ளவை ஆகையால் கோக்கோதையின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலவளங்களும் உடையது என்று புலவர் பொய்கையார் கூறுவது இப்பாடலிலிருந்து தெரிகிறது. புனவர் தட்டை புடைத்தல் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் நிகழ்வதாகையால், நாடன் என்பது குறிஞ்சி மற்றும் முல்லை நிலத் தலைவனையும் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். ஆகவே, கோக்கோதையின் நாடு குறிஞ்சி, முல்லை, மருதம் மற்ரும் நெய்தல் ஆகிய நானில வளமும் உடையது என்ற கருத்தில் புலவர் பொய்கையார் இப்பாடலில் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

இப்பாடலில் புலவர் ஒருவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக வெளிப்படையாகத் தெரியவில்லை. கோக்கோதையின் இயல்பைப் புகழ்ந்ததால், இப்பாடல் இயன்மொழித் துறையைச் சார்ந்ததாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

48. எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல !

பாடியவர்: பொய்கையார் (48, 49). இவர் இப்பாடலில், “கள்நாறும்மே கானலம் தொண்டி; அஃது எம் ஊரே” என்று கூறியிருப்பதிலிருந்து இவருடைய ஊர் தொண்டி என்பது தெரிய வருகிறது. புறநானூற்றில் இவர் பாடிய இரண்டு பாடல்களும் சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும். இவர் நற்றிணையில் 18 - ஆம் செய்யுளையும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன் (48, 49). இவன் சேர வேந்தருள் ஒருவன். கோதை மார்பன் என்பது இவன் இயற்பெயர் என்றும், இவன் தொண்டி என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு தன் நாட்டை ஆட்சி செய்தான் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவன் நாடு குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலப்பகுதிகளைக் கொண்டிருந்ததாகப் புலவர் பொய்கையார், புறநானூற்றுப் பாடல் 49-இல் கூறுகிறார்.

கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னன் சேரன் செங்குட்டுவனின் மகன் என்றும் இவன் குட்டுவன் கோதை, கோதை மார்பன், மாக்கோதை மார்பன், கடுமான் கோதை, செங்கோல் குட்டுவன், கடும்பகட்டியானை நெடுந்தேர்க் குட்டுவன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் முதலிய பெயர்களாலும் அழைக்கப் பட்டதாகவும் பேராசிரியர் முனைவர் கோ. தங்கவேலு தம் நூலில் குறிப்பிடுகிறார். சேரன் செங்குட்டுவனுக்குக் குட்டுவன் சேரல் என்று ஒருமகன் இருந்ததாகவும், அவனைப் புலவர் பரணர் என்பவருக்கு சேரன் செங்குட்டுவன் பரிசாக அளித்ததாகவும் பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகத்தில் காண்கிறோம். சேரன் கோக்கோதை மார்பன் என்பவனும், சேரன் செங்குட்டுவனின் மகனாகிய குட்டுவன் சேரல் என்பவனும் ஒருவனா என்பது ஆய்வுக்குரியது.
பாடலின் பின்னணி: சேரன் கோக்கோதை மார்பனைப் பாடிப் பரிசுபெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரைச் சேரனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: புலவர் ஆற்றுப்படை. புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
5 அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1.கோதை = சேரன், பூமாலை. 3. மா = கரிய; கழி = உப்பங்கழி, கானல் (கடற்கரைச் சோலை). 4. கள் = மலர்த்தேன்; கானல் = கடற்கரைச் சோலை. 6. படர்தல் = செல்லுதல். 7. முதுவாய் = முதிய வாய்மையுடைய. 8. அமர் = போர்; மேம்படுதல் = உயர்தல். 9. மேம்படுநனை = மேம்படுத்துபவனை.

கொண்டு கூட்டு: இரவல, நீயும் அன்னோர் படர்குவை ஆயின், நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனக் கூட்டுக.

உரை: சேரன் கோக்கோதை மார்பில் அணிந்த மாலையாலும், அந்தக் கோதையைக் கூடிய மகளிர் அணிந்த மாலைகளாலும், கரிய நிறமுடைய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன். முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடை ய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக.

சிறப்புக் குறிப்பு: தலவனின் இயல்பையும் ஊரையும் கூறி, “ முதுவாய் இரவல எம்முள் உள்ளும்” என்று தன் தலைமை தோன்றுமாறு கூறியதால், இப்பாடல் புலவர் ஆற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.

47. புலவரைக் காத்த புலவர்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 44-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் உரையூருக்குச் சென்றான். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நெடுங்கிள்ளி, இளந்தத்தன் ஒருவொற்றன் என்று கருதி அவனைக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், இளந்ததத்தன் ஒற்றன் அல்லன் என்று நெடுங்கிள்ளிக்கு எடுத்துக் கூறி இளந்தத்தனைக் காப்பற்றினார். இப்பாடல் அச்சமயம் இயற்றப்பட்டது.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்தும் சுற்றம் அருத்தி
5 ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே, திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ்
10 மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. வள்ளியோர் = வரையாது கொடுப்போர்; படர்தல் = நினைத்தல். புள் = பறவை. 2. சுரம் = பாலைவழி. 3. வடியா = தெளிவில்லாத; வடித்தல் = தெளித்தெடுத்தல். 4. அருத்தல் = உண்பித்தல். 5. ஓம்புதல் = பாதுகாத்தல்; கூம்பல் = ஊக்கங்குறைதல். வீசுதல் = வரையாது கொடுத்தல். 6. வரிசை = சிறப்பு, மரியாதை, பாராட்டு; பரிசில் = கொடை, ஈகை. 7. திறம் = திறமை (அறிவு); திறப்படல் = கூறுபடல், தேறுதல், சீர்ப்படுதல்; நண்ணார் = பகைவர் (மாறுபட்ட கருத்துடைய மற்ற புலவர்கள்). 11. செம்மல் = தருக்கு (பெருமிதம்).

கொண்டு கூட்டு: பரிசில் வாழ்க்கை நும்மோர் அன்ன செம்மலும் உடைத்து; ஆதலால், நண்ணார் நாண இனிது ஒழுகின் அல்லது பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்று எனக் கூட்டுக.

உரை: வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து, பறவைகள் போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண்டும் என்று எண்ணி, அவற்றைப் பாதுகவாமல் உண்டு, பிறர்க்கும் குறையாது கொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வருந்துவதுதான் பரிசிலர் வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதை அறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்யமாட்டர்கள். புலவர்கள், கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர்கள்.

சிறப்புக் குறிப்பு: கோவூர் கிழார் இளந்தத்தனைக் காப்பாற்றுவதற்காக நெடுங்கிள்ளியைச் சமாதானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், இப்பாடல் துணை வஞ்சித்துறையைச் சார்ந்ததாயிற்று.

46. அருளும் பகையும்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவன், தன் பகைவனாகிய மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலின் கீழே இட்டுக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க விரும்பி இப்பாடலை இயற்றினார். “நீ, ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அளித்த சிபியின் வழித்தோன்றல். இவர்கள் புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மலையமானின் சிறுவர்கள்; இவர்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. நான் கூற விரும்பியதைக் கூறினேன். நீ உன் விருபபப்ப்டி செய்.” என்று கிள்ளிவளவனிடம் கோவூர் கிழார் முறையிடுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

நீயோ, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
5 களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கண்நோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.

அருஞ்சொற்பொருள்:
1. அல்லல் = துன்பம். 2. இடுக்கண் = துன்பம்; மருகன் = வழித்தோன்றல். 3. புலன் = அறிவு; புன்கண் = துன்பம். 5. அழூஉம் அழாஅல் = அழுகின்ற அழுகை. மன்று = மன்றம்; மருளல் = வெருளுதல், அஞ்சுதல். 6. புன்தலைச் சிறாஅர் = சிறிய தலையையுடைய சிறுவர்கள். 7. விருந்து = புதிது. 8. வேட்டது = விரும்பியது; செய்ம்மே = செய்வாயாக.

கொண்டு கூட்டு: அழும் அழால் களிறு கண்டு மறந்த எனக் கூட்டுக.

உரை: நீயோ, ஒருபுறா அடைந்த துன்பம் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் துன்பத்தையும் களைந்த சிபியின் வழித்தோன்றல். இவர்களோ, அறிஞர்களின் வறுமைக்கு அஞ்சித், தம்மிடத்து உள்ளவற்றைப் பகிர்ந்து உண்ணும் இரக்க குணமுள்ளவர்களின் மரபினர். இவர்கள், முன்பு யானைகளைக் கண்டு அஞ்சி அழுதனர்; இப்பொழுது இந்தச் சிறுவர்கள் இந்த மன்றத்தைப் பார்த்த வியப்பால் தங்கள் அழுகையை மறந்தனர். ஆனால், முன்பு அறியாத புதிய துன்பத்தை அவர்கள் இப்பொழுது அடைந்திருக்கிறார்கள். நான் கூறியதைக் கேட்ட பிறகு, நீ உன் விருப்பப்படி செய்க.

சிறப்புக் குறிப்பு: மலையமானின் சிறுவர்களைக் கொலை செய்யவிருக்கும் கிள்ளிவளவனிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி கோவூர் கிழார் அவனைச் சமாதானப் படுத்துவதால், இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.

“புலன் உழுது உண்மார்” என்பது அறிவையே தம் தொழிலாகக் கொண்டவர்கள் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

”புல்” என்னும் சொல்லுக்குச், ”சிறுமை”, ”அற்பம்” என்று பொருள். இங்கு, “புன்தலைச் சிறாஅர்” என்பது அவர்கள் மிகவும் சிறியவர்கள் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டுள்ளது.

Tuesday, February 22, 2011

45. தோற்பது நும் குடியே!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும். சோழன் நலங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-லிலும், சோழன் நெடுங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைப் பாடல் 44-லிலும் காண்க.
பாடலின் பின்னணி: தங்களுக்குள் இருந்த பகை காரணமாக சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. சோழ குலத்தில் தோன்றிய இருவரும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது ஏளனத்துக்குரியது என்று அவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களைச் சமாதானப் படுத்துவதற்குக் கோவூர் கிழார் மேற்கொண்ட முயற்சி இப்பாடலிலிருந்து தெரிகிறது.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
5 ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்றுநும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே!

அருஞ்சொற்பொருள்:
1. இரு = பெரிய; வெண் = வெண்மை; தோடு = இலை, ஓலை, பூவிதழ்; மலைதல் = அணிதல், சூடுதல். 2. சினை = மரக்கொம்பு; தெரியல் = மாலை. 3. கண்ணி = மாலை; ஆர் = ஆத்தி; மிடைதல் = நிறைதல், செறிதல். 6. வேறல் = வெல்லுதல். 7. பொருள் = தன்மை (தகுதி); செய்தி = செய்கை. 9. மலி = நிறைதல், மிகுதல்; உவகை = மகிழ்ச்சி, களிப்பு; இகல் = பகை

உரை: இங்கு போர் புரிபவர்களில் யாரும் கரிய பனையின் வெண்ணிறப் பூமாலை அணிந்தவன் அல்லன்; கரிய வேம்பின் மாலையை அணிந்தவனும் அல்லன். உன்னுடைய மாலை ஆத்திப் பூக்களால் தொடுக்கப்பட்டது. உன்னோடு போர் புரிபவனின் மாலையும் ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்டதுதான். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடிதான். இப்போரில் நீங்கள் இருவரும் வெற்றி பெறுவது இயற்கையும் அல்ல. ஆதலால், உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்குத் தகுந்ததன்று. தேர்களில் கொடியோடுகூடிய உம்போன்ற வேந்தர்கள், இந்தப் போரைப்பார்த்துத் தங்கள் உடலெல்லாம் மிகவும் பூரிக்கும் வகையில் ஏளனமாகச் சிர்ப்பார்கள்.

சிறப்புக் குறிப்பு: பனந்தோட்டாலாகிய மாலை சேரர்களுக்குரியது; வேப்பம்பூ
மாலை பாண்டியனுக்குரியது. இங்கு, போர்புரிபவர்கள் இருவருமே சோழர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காக, கோவூர் கிழார், பனந்தோட்டு மலை அணிந்தவனோ வேப்பம்பூ மாலை அணிந்தவனோ இங்கு போர் புரியவைல்லை என்று கூறுகிறார்.

இப்பாடலும், முந்திய பாடலைப்போல், கோவூர் கிழார், அரசர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல் உடையவராக இருந்தார் என்பதையும் அரசர்களிடத்து அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

44. அறமும் மறமும்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி. சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர்.
நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு நெடுங்கிள்ளியை வருத்தினான். நெடுங்கிள்ளி, அங்கிருந்து தப்பி, உறையூருக்குச் சென்றான். பின்னர், நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டுப் போரிட்டான். அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வியடைந்ததாக வரலாறு கூறுகிறது. மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, காரியாறு என்னும் இடத்தில் இறந்ததால், அவன் சோழன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்

பாடலின் பின்னணி: நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்ட பொழுது, நெடுங்கிள்ளி போருக்கு வராமல், தன் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அச்சமயம், கோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் சென்று, “நீ அறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு; மறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளியுடன் போர் செய். இரண்டு செயல்களில் எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்திற்குரியது” என்று இப்பாடலில் அறிவுரை கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
5 அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்குஇனிது இருத்தல்;
10 துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!
அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
15 நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக உடைத்திது காணுங் காலே.

அருஞ்சொற்பொருள்:
1. இரு = கரிய; பிடி = பெண் யானை; தொழுதி = கூட்டம்; கயம் = குளம். 2. மிதி = மிதித்துத் திரட்டப்பட்ட கவளம். 3. திருந்திய = செவ்விய, திருந்துதல் = ஒழுங்காதல்; அரை = மரத்தின் அடிப்பாகம். நோன் = வலி; வெளில் = யானை கட்டும் கம்பம்; ஒற்றி = தள்ளி. 4. வெய்து = வெம்மையுடையது; உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல். 5. அலமரல் = கலங்குதல்; உரும் = இடி. 8. இனை = வருத்தம். 9. ஈங்கு = இவ்விடம். 10. துன்னுதல் = நெருங்குதல்; துப்பு = வலி; வயம் = வலிமை; மான் = குதிரை; தோன்றல் = அரசன். 11. அறவை = அற வழியில் நடப்பவன். 12. மறவை = வீர வழியில் நடப்பவன். 14. திண் = வலி. 15. சிறை = பக்கம்

உரை: ஆண் யானைகள் பெண்யானைகளின் கூட்டத்தோடு சேர்ந்து குளங்களில் படியாமல் உள்ளன; நெய்யோடு சேர்த்து, மிதித்துத் திரட்டப்பட்ட உணவுக் கவளங்களை உண்ணாமல், செவ்விய பக்கங்களையும் வலிமையுமுடைய கம்பங்களைச் சாய்த்து, நிலத்தில் புரளும் தும்பிக்கைகளுடன் வெப்பமுடைய பெருமூச்சு விட்டுக் கலங்கி இடி இடிப்பதுபோல் பிளிறுகின்றன. குழந்தைகள் பாலில்லாமல் அலறுகின்றனர். மகளிர் பூவில்லாத வெறுந்தலையை முடிந்துகொள்கிறார்கள். நல்ல வேலைப்படுகளுடன் கூடிய வீடுகளில் வாழும் மக்கள் நீரின்றி வருந்தும் ஒலி கேட்கிறது. இனியும் நீ இங்கே இருப்பது கொடிய செயல். பகைவர்கள் நெருங்குதற்கரிய வலிமையுடைய குதிரைகளையுடைய அரசே! நீ அறவழியில் நடக்க விரும்பினால், உன் கோட்டையின் கதவுகளைத் திறந்து, இந்த நாடு உன்னுடையது என்று நலங்கிள்ளிக்கு அளித்ப் போரைத் தவிர்ப்பாயாக; வீர வழியில் நடப்பவனாக இருந்தால் கோட்டையின் கதவுகளைத் திறந்து நலங்கிள்ளியுடன் போருக்குப் போவாயாக.” அறவழியிலும் வீரவழியிலும் செயல் படாமல், திறவாமல் அடைக்கப்பட்ட நீண்ட வலிய கதவுகளையுடைய மதில்களின் ஒருபக்கத்தில் நீ ஒளிந்திருப்பது வெட்கத்திற்குரிய செயல்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், மன்னர்கள் தவறு செய்தால், அவர்களைத் தட்டிக் கேட்டு, இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் அறிவும், ஆற்றலும் உடைய புலவர்கள் இருந்தார்கள் என்பதற்கும், அரசர்கள் புலவர்களுக்கு அந்த உரிமையை

43. பிறப்பும் சிறப்பும்!

பாடியவர்: தாமற்பல் கண்ணனார் (43). இவர் காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள தாமல் என்ற ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இப்பாடலிலிருந்து, இவர் பார்ப்பனர் என்று தெரிகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான். சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான், நெடுங்கிள்ளி இருந்த ஆவூர் என்னும் ஊரை முற்றுகையிட்டதாக வரலாறு கூறுகிறது.
பாடலின் பின்னணி: ஒருசமயம், தாமற்பல் கண்ணனார் சோழன் மாவளத்தானோடு சூதாடினார். சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வட்டு ஒன்று தாமற்பல் கண்ணனாருக்குத் தெரியாமலேயே அவருக்கு அடியில் மறைந்திருந்தது. ஆனல், தாமற்பல் கண்ணனார் சூதாட்டத்தில் வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய மாவளத்தான், சினமுற்று, அவ்வட்டை அவர் மீது எறிந்தான். அதனால், கோபமுற்ற தாமற்பல் கண்ணனார், மாவளத்தானைப் பார்த்து, “உன் செய்கையைப் பார்த்தால், நீ சோழ மன்னனுக்குப் பிறந்தவனாக எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினார். தான் செய்த குற்றத்தை உணர்ந்த மாவளத்தான் நாணினான். முடிவில், தாமற்பல் கண்ணனார் மாவளத்தானைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
5 கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
10 தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல்
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
15 நீர்த்தோ நினக்குஎன வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்எனக்
20 காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்
யானே பிழைத்தனென்; சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:
1. அலமரல் = வருந்தல், துன்பமுறல். 2. தெறு = சினம், அச்சம், துன்பம். கனலி = கதிரவன். 3. கால் = காற்று; கொட்குதல் = சுழலல். 4. அவிர் = ஓளி; சிறை = சிறகு. 5. உகிர் = நகம்; ஏறு = இடி; ஒரீஇ = நீக்கி (தப்பி). 7. தபுதி = அழிவு; சீரை = துலாத்தட்டு. 8. உரம் = வலி. 9. நேரார் = பகைவர்; முரண் = வலி. 10. வண் = மிகுதி; வார் = நேர்மை; கோல் = அம்பு. 11. கொடுமரம் = வில்; கடு = விரைவு; மான் = குதிரை. 12. கைவண் = வண்கை = கொடைக்கை; வண்மை = ஈகை; தோன்றல் = அரசன். 13. ஆர் = ஆத்தி; தெரியல் = மாலை. 15. நீர் = தன்மை; நீர்த்தோ = தன்மையான செயலோ (தகுமோ). 17. நனி = மிக. 19. எண்மை = எளிமை. 20. மொய்ம்பு = தோள்வலி. 23. எக்கர் = மணற்குன்று.

உரை: உலகில் வாழ்வோரின் துன்பங்கள் தீர, சுடும் கதிரவனின் வெப்பத்தைத் தாம் பொறுத்து, காற்றை உணவாகக் கொண்டு, கதிரவனின் சுடர்போல் சுழன்று திரியும், விளங்கிய சடையையுடைய முனிவர்கள் திகைக்குமாறு, வளைந்த சிறகினையும் கூரிய நகங்களையுமுடைய பருந்தின் தாக்குதலுக்குத் தப்பி தன்னிடத்தில் அடைக்கலம் புகுந்த, குறுகிய நடையையுடய புறாவின் அழிவுக்கு அஞ்சி, தராசில் புகுந்த, வரையாது வழங்கும் வள்ளலின் வழித்தோன்றலே! பகைவரை வென்ற, மிகுந்த செல்வத்தையுடைய, கிள்ளிவளவனின் தம்பியே! நீண்ட அம்பினையும் வளைந்த வில்லையுமுடைய மறவர்களுக்குத் தலைவ! விரைந்து செல்லும் குதிரைகளையும் வள்லல் தன்மையுமுடைய தலைவ! ”உன் குடிப்பிறப்பிலே எனக்கு ஐயம் எழுகிறது. ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்கள். நீ செய்த செயல் உன் தகுதிக்கு ஏற்றதோ?” என்று நீ வெறுக்குமாறு நான் கூறினேன். இருப்பினும், என் பிழையைக் கண்டு வெறுக்காமல், நீ தவறு செய்ததைப்போல் வெட்கப்பட்டாய். தமக்குத் தவறிழைத்தவர்களைப் பொறுத்தருளும் தலைவ! தவறிழைத்தவர்களைப் பொறுக்கும் தகுதி உன் குலத்தில் பிறந்தார்க்கு எளிது என்று எனக்குக் காட்டிய வலியவனே! உன் செயலால் நான் பிழைத்தேன். பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரிக்கரையில் உள்ள மணல்மேடுகளிலுள்ள மணல்களைவிட நீ அதிக நாட்கள் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், மாவளத்தான் தவறுகளைப் பொறுத்தருளும் இயல்பினன் என்று அவனைப் புகழ்ந்து பாடப்பட்டிருப்பதால் இப்பாடல் அரச வாகை என்னும் துறையைச் சார்ந்ததாகியது.