பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “ புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக் காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ்சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.
இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுட்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் (67, 212, 213, 219, 221, 222, 223).
கரிகாலனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் கிள்ளிவளவன் என்பவனும் ஒருவன் என்று வரலாறு கூறுகிறது. ஆனால், கிள்ளிவளவனுக்கும் கரிகாலனுக்கும் இருந்த உறவுமுறை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில வரலாற்று ஆசிரியர்கள், கரிகால் வளவனுக்குப் பிறகு, அவன் மகன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்பவன் சோழ நாட்டின் ஒரு பகுதிய ஆண்டதாகவும், அவனுடைய மூன்று மகன்களுள் ஒருவன் கிள்ளிவளவன் என்றும் கூறுகின்றனர். கிள்ளி வளவனுக்குப் பிறகு சோழநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் கோப்பெருஞ் சோழன். கிள்லிவளவனுக்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் இருந்த உறவுமுறை தெரியவில்லை. கோப்பெருஞ்சோழன் சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாக இருந்தான் என்பது இவன் புறநானூற்றில் இயற்றிய மூன்று பாடல்களிலிருந்தும் (214, 215, 216), குறுந்தொகையில் இவன் இயற்றிய நான்கு பாடல்களிலிருந்தும் (20, 53, 129, 147) தெரியவருகிறது. இவனுக்கும் இவனுடைய இருமகன்களுக்கும் இடையே பகை மூண்டது. பகையின் காரணத்தால், தன் மக்களை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான். புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பெருமக்கள் கூறிய அறிவுரைக்கேற்ப கோப்பெருஞ்சோழன் போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான். தன் மக்களுடன் தோன்றிய பகையால் வருத்தமடைந்த கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.
பாடலின் பின்னணி: புலவர் பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனக்கும் தனக்கும் உள்ள நட்பையும், அவனுடைய வீரம், நாட்டைக் காக்கௌம் பண்பு, அன்பு போன்ற நற்குணங்களையும் வடதிசை நோக்கிச் செல்லும் ஒரு சேவலிடம் கூறுவதுபோல் அமைந்துள்ளது. மற்றும், அச்சேவல், உறையூருக்குச் சென்று கோப்பேருஞ்சோழனைக் கண்டு ”நான் பிசிராந்தையின் அடியேன்” என்று சொன்னால் கோப்பெருஞ்சோழன் சேவலின் பெட்டை அணிவதற்கு நல்ல அணிகலன்களைத் தருவான் என்றும் இப்படலில் கூறுகிறார்
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
5 மையல் மாலையாம் கையறுபு இனையக்
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ
10 வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.
அருஞ்சொற்பொருள்: 2. ஆடு = கொல்லுதல், வெற்றி; அடுபோர் = வெல்லும் போர். 3. தலையளித்தல் = காத்தல், கருணையோடு நோக்குதல்; ஓள் = ஒளி. 4. கோடு = பக்கம்; முகிழ் = குவியும். 5. மையல் = மயக்கம்; கையறுதல் = செயலற்றிருத்தல்; இனைதல் = வருந்தல். 6. மாந்துதல் = உண்ணுதல். 8. கோழி = உறையூர். 9. குறும்பறை = பேடை (பெண் பறவை); அசைதல் = தங்குதல். 10. விடுதல் = நிறுத்துதல். 11. கிள்ளி = சோழன் (சோழ மன்னர்களின் சிறப்புப் பெயர்); இரு = பெரிய. 12. அடியுறை = அடியேன். 13. பேடை = பெட்டை.
உரை: அன்னச் சேவலே! அன்னச் சேவலே! கொல்லும் போரில் வெற்றி பெற்று, நாட்டை அருள் செய்து காக்கும் மன்னனின் ஒளிதிகழும் முகம் போல், இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி, முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், இடையே சோழ நாடு உள்ளது. அங்கே, உறையூரில் உள்ள உயர்ந்த மாடத்தில் உனது பெட்டையோடு தங்கி, வாயில் காவலரைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்து, கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, “ நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன்” என்று சொன்னால், பெருமைக்குரிய உன் இனிய பெட்டை அணிவதற்குத் தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான்.